Friday, December 30, 2011

ஓர் ஆட்டு மந்தையின் சந்தை மதிப்பு எவ்வளவு ?

உதய சூரியனைத்

தலை உயர்த்தாமல் பார்த்தேன்

மலையுச்சியில் நின்று

பாடல் பரவும் முன்

காற்றில் இருந்தது

கனமான வெற்றிடம்

வெள்ளமாகிறது புயல் மழை

தானாய்ப் பெய்யும் மழையே

தண்ணீர் தரும்

புத்தகம் போடாத எழுத்தாளன்

புத்தகக் கண்காட்சிக்கு வந்தால்

துக்கம் விசாரிக்கிறார்கள்

சாலையோரக் கொய்யாக்காரன்

ஒரு பழத்தைக் அரிந்துண்கிறான்

என்னே அழகிய காட்சி !

ஏறி ஏறி இறங்குகிறது

இறங்கி இறங்கி ஏறுகிறது

பங்குவிலை


வெற்றிலைக்குப் பெண்ணுறுப்பின் வாசமாம்

அப்போ, ஆணுறுப்புக்குப்

புகையிலை வாசமா ?

போலீஸ் ஸ்டேஷன் ரைட்டரைவிட

எவ்விதத்தில் உயர்ந்தவர்

சினிமா ரைட்டர் ?

இந்தக் காலத்திலும்

ஊடகங்களில் ஜோதிடம் பேசுகிறானே,

கேட்கும் நாம் அவ்வளவு கேனமா !

தண்ணீர் தர

மறுக்கும் உலகில்

நாம் வாழ்கிறோம்

நாய்க்கடிக்கு ஊசிபோட

அரசு மருத்துவமனை சென்றால்

அங்கே வரிசையில் நூறுபேர் !

குற்ற உணர்ச்சி வதைக்கிறது

மூவர் மட்டுமே அமர்ந்திருக்க

ஒரு மதியக் காட்சி கண்டேன்

ஐம்பது உருப்படிகள் உள்ள

ஓர் ஆட்டு மந்தையின் சந்தை மதிப்பு

இரண்டரை லட்சமாம்

2012-ல் உலகம் அழியப்போகிறது

புத்தாண்டு வாழ்த்து

சொல்வதா வேண்டாமா ?

Sunday, December 25, 2011

குறைகூறி


நம்மைச் சுற்றி எப்படி வந்தான்

இந்தக் குறைகூறி ?


இவனிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவே

ஆற்றல் அனைத்தும் விரயமாகிவிடுகிறது.


வெள்ளைத்தாளில்

கரும்புள்ளி தேடுவதே இவன் வாடிக்கை.


தோசையின்

பசியணைக்கும் வள்ளாண்மையைப் பேசாமல்

அதன் வட்டக்குறைகளையே பேசுபவன்.


வடக்கு நோக்கி நின்றால்

நீ கிழக்கு நோக்கி நின்றிருக்கலாம் என்பான்.


மனச்செயலியை

முற்றாகக் குலைக்கும் வைரஸாகிவிடுகிறது

குறைகூறி உதிர்க்கும் ஒரு கருத்து.


ஒருவனின் மழலையே அவன் என்பதில்

நான் முழுநம்பிக்கையுள்ளவன்.

அந்த மழலையை அரிந்து அகற்றுவதில்

குறைகூறி குறியாயிருக்கிறான்.


குறைகூறியை

நாம் எப்போதும் நாடுவதில்லை

அவன்தான்

நம்மைத் தேடியபடியே இருக்கிறான்.


அவனிடமிருந்து

நாம் ஒளிந்துகொள்ளாததால்

அவன் நம்மைக் கண்டுகொள்கிறான்.


ஒரேயொரு குறைகூறி

நம்மை எல்லாத்திசையிலும் முடக்கிவிடுவான்.


ஒரேயொரு குறைகூறி

நம்மை என்றும் எழாதபடி வீழ்த்திவிடுவான்.


ஒரெயொரு குறைகூறி

நம்மைக் குதறிக் கொன்றுவிடுவான்.


குறைகூறி என்னும் பெருநோயாளி

வைத்தியக் குறிப்புகள் கூறுபவனைப்போல் தோன்றுவான்.


குறைகூறி என்னும் பைத்தியக்காரன்

அலையாத விழிகளோடு எதிரே நிற்பான்.


குறைகூறி என்னும் குற்றவாளி

நமக்கு நீதி செய்பவன்போல் அமர்ந்திருப்பான்.


குறைகூறி என்னும் தாழ்ந்த சுயமதிப்பீட்டாளன்

நம்மை விமர்சனத் தராசில் நிறுத்துவான்.


இப்பொழுது நான் எச்சரிக்கையாகிவிட்டேன்.

அவன் என்னை எந்நோக்கோடு அணுகுகிறான்

என்பதைப் புரிந்துகொண்டேன்.

அவன் ஓர் ஆளே இல்லை என்பது தெரிந்துவிட்டது.


முன்பெல்லாம்

குறைகூறி எதைச் சொன்னாலும்

‘அப்படியா சொல்றீங்க ?என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

இப்பொழுது

‘போடாங்கொய்யாலேசொல்கிறேன்.

Thursday, December 1, 2011

DON'T MISS IT


இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்

நஞ்சுபுரம்

வரும் ஞாயிற்றுக்கிழமை (04.12.2011) மாலை 4.00 மணிக்கு உங்கள் சன் டிவியில் காணத்தவறாதீர்கள் !

ஓர் இணைப்பு


காட்சிப்பிழை திரை இதழின் நவம்பர் இதழில் ‘தமிழ்த் திரையின் மகத்தான பாடல்கள்’ கட்டுரைத் தொடர் வெளியாகவிருப்பதை ஏற்கனவே நண்பர்களுக்குக் கூறியிருந்தேன். அந்த இதழின் இணையப் பதிவேற்றத்தைக் கண்டேன். வசந்த கால நதிகளிலே...’ என்ற பாடலைப் பற்றிய என் கட்டுரையை இந்த இணைப்பில் நுழைந்து வாசிக்கலாம்.
Wednesday, November 16, 2011

தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் இனி காட்சிப்பிழை திரையில் !


என் வலைப்பூவில் இடம்பெற்ற தமிழ்த் திரையின் மகத்தான பாடல்கள் என்னும் தொடர் அச்சு ஊடகத்திற்கு நகர்ந்துவிட்டது. ‘காட்சிப்பிழை திரைஎன்னும் தமிழ்த் திரைப்பட ஆய்விதழில் இனி அக்கட்டுரைகள் தொடராக இடம்பெறும். மாதா மாதம் எழுதித் தரவேண்டிய இதுபோன்ற இனிய நிர்ப்பந்தத்திற்கு என்னை நான் ஆளாக்கிக்கொள்ளாவிட்டால் இப்படியே சாவகாசமாக இருந்துவிடுவேன் என்கிற அச்சமும் ஒரு காரணம்.

நவம்பர் 2011 இதழில் அத்தொடரின் முதல் கட்டுரை வெளியாகியிருக்கின்றது. மூன்று முடிச்சு திரைப்படத்தில் இடம்பெறும் ‘வசந்தகால நதிகளிலேஎன்னும் பாடலை அந்தக் கட்டுரையில் எடுத்துப் பேசியிருக்கிறேன். பொதுவாக, பத்திரிகைகளில் வெளியாகும் என் எழுத்துகளை நான் வலைப்பூவில் இடுவதில்லை. அதுவே அச்சு ஊடக உழைப்புக்குத் தரும் என் எளிய மரியாதை. ஆகவே, அக்கட்டுரைகளை இந்தப் பக்கங்களில் நண்பர்கள் எதிர்பார்க்க வேண்டாமென்று நான் கேட்டுக்கொள்வேன்.

விருப்பமுள்ளவர்கள் ‘காட்சிப்பிழை திரைஇதழை வாசிக்க முயலலாம். உலகத் திரைப்படங்களைப் பற்றியே நம் அறிவுஜீவிச் சஞ்சிகைகள் வியந்தோதிக்கொண்டிருக்கும் இடத்தில் தமிழ் சினிமாவின் எல்லாத் திசைகளையும் அலசி ஆய்வதற்காக வெளியாகும் இவ்விதழ் வரவேற்கக் கூடியதே. யார் என்ன சொல்லிக்கொண்டிருந்தாலும் தமிழ்த் திரையுலகம் இச்சமூகத்தோடு கொண்டுள்ள உறவைத் தாழ்த்தி மதிப்பிடவே முடியாது.

இதழ் முகவரி :

காட்சிப்பிழை திரை,

மே/பா. ரியல் இம்பாக்ட் சொல்யூசன்ஸ், 12, மூன்றாவது தெரு, கிழக்கு அபிராமபுரம், மயிலாப்பூர், சென்னை 600 004.

ஆசிரியர் : வீ. எம். எஸ். சுபகுணராஜன்

தனி இதழ் : உரூ. 20.00 ஆண்டு சந்தா உரூ. 200.00

Sunday, November 6, 2011

வேறெங்கும் வடியாத சுவைநீர்


மழை தன் வன்மையழிந்து

சிட்டுக்குருவி இரைகொத்தும் ஒலியில்

பெய்கிறது


குளிர்

அமைதியாய்ப் பரவி

அணைக்கிறது


அவித்த வேர்க்கடலை கொஞ்சம்

அருகில் இருக்கிறது


அதன் கூர்முனையைக்

குத்தி உடைக்கிறேன்


செம்பகுதியாகப் பிரிகிறது

வேர்க்கடலையின் தொட்டு


யாரோ சொல்லி வைத்ததுபோல்

அதன் இடது புறத் தொட்டில்தான்

பருப்புகள் இரண்டும் வெந்து படுத்திருக்கின்றன


தொட்டை வாய்க்குள் கவிழ்த்து

கடலையை உதிர்க்க முயல்கிறேன்


உள்ளிருக்கும் நொய்ந்த பருப்பு

பிடியிழந்து வாய்க்குள் விழுகிறது


கூடவே

இரண்டு நீர்த்துளிகளும் விழுகின்றன


அந்த நீரின்

தனித்த உப்பு ருசிக்கு

நான் தடுமாறுகிறேன்


அதுதான்

விதியின் புதிரான சுவையோ !


ஊழியின் மர்ம முடிச்சுகள்

அவிழ்ந்த சுவையோ !


பல்லிடுக்கில் கசியும் குருதியின்

வெப்பச் சுவையோ !


காந்தியின் இதயத்தில் உரமேற்றிய

அறவுணர்ச்சியின் சுவையோ !


புன்செய்க்குள் உழுது விதைத்த உழவனின்

வியர்வைச் சுவையோ !


அந்த மண் என் நாவிற்கு எழுதிய கடிதத்தின்

கண்ணீர்ச் சுவையோ !

Saturday, October 15, 2011

உள்ளாட்சி வேட்பாளர்களுக்கு...


என் வாக்கு உங்களுக்குத்தானா

என்பதில் உங்களுக்கு எந்த உறுதியும் இல்லை


என் வாக்கால் நீங்கள் வெல்வீர்களா

என்பதும் உங்களுக்குத் தெரியாது


ஆனாலும் என் வீடு தேடி வருகிறீர்கள்

என்னைக் கும்பிடுகிறீர்கள்

ஏராளமான வாக்குறுதிகளைத் தருகிறீர்கள்

மறக்காமல் உங்கள் சின்னத்தில் வாக்களிக்கக் கோருகிறீர்கள்


எனக்குத் தெரிகிறது

உள்ளாட்சி அமைப்பில்

மக்கள் பிரதிநிதியாக அமரும் உங்களால்

இயலும் வேலைகள் சிற்சிலவே


சாலை அமைக்கலாம்

சாக்கடை கட்டலாம்

தெருவிளக்கு நிறுவலாம்

குடிநீர் வழங்கலாம்

குப்பை அள்ளலாம்

வரிவிதிக்கலாம் பெறலாம்

வாய்ப்பிருந்தால்

பூங்கா, ரவுண்டானா, நூலகம்,

சமுதாயக் கூடம், நியாயவிலைக் கடை அமைக்கலாம்


இதற்கு மேல் உங்களுக்கு

எந்த ஓர் அதிகாரமும் இல்லை


உங்கள் பதவிக்காலம் முழுவதும்

நீங்கள் இவற்றில் கூட நிறைவுறச் செயலாற்றுவதில்லை


இதற்கு ஏன் இத்தனை போட்டி ?

இதைச் செய்ய ஏன் இத்தனை கூப்பாடு ?

இதைச் செய்ய

ஒரு குழந்தையைப் போன்ற எளிய மனது போதாதா ?


இதற்கு ஏன் உங்களுக்கு இத்தனை அதீத ஆர்வம் ?

வெகுளியான தொண்டு மனம் போதாதா ?


நீங்கள் எதற்கு அடிபோடுகிறீர்கள் ?


ஒவ்வொரு பொதுப்பணியிலும்

நடுத்துண்டை எடுத்துத் தின்னலாம் என்றா ?


சொந்த சாதிக்குத் தோதாக

எதிர்சாதிக்குச் சொப்பனமாக வாழலாம் என்றா ?


கட்சிக்குள் முன்னுக்கு வர

இங்கிருந்துதான் முதல் கியரைப் போடவேண்டும் என்றா ?


சாலையோரக் கடைகளில்

தினப்படி வேட்டை கிடைக்கும் என்றா ?


மதுப் பருகுசாலையில்

மாதாந்திர மாமூல் நிச்சயம் என்றா ?


இன்னும் அடித்துப் பறித்துப் பதியவேண்டிய நிலங்கள்

அங்குமிங்கும் இருக்கின்றன என்றா ?


கணவன் மனைவித் தகராறுகளில் கூடத் தலையிட்டு

நடுவில் வந்து நிற்கலாம் என்றா ?


காவல் நிலையத்தில்

ஒரு கான்ஸ்டபிளின் இலகுவான பார்வைக்கா ?


ஊழலுக்கு இன்னும் எழுதப்படவேண்டிய புது இலக்கணங்கள்

மீதம் இருக்கின்றனவா ?


வென்றவுடன் உங்கள் ஸ்கார்பியோவிற்கு வெளியே

ஒரு நாள் உங்களைக் காண முடியுமா ?


எதற்கு

எதற்கு உங்களுக்குள்

இத்தனை ஆர்வம் போட்டாபோட்டி என்று கேட்கிறேன்


என் வினாக்களுக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்

நான் வாக்குச் சாவடிக்கு வருகிறேன்.

Tuesday, October 11, 2011

பிரிவின் மடி


நாம் அந்த அலுவலகத்தில்

ஒன்றாகப் பணியாற்றினோம்

உனக்கு உள்ளிருந்து தட்டச்சிடும் பணி

எனக்குப் பணி ஊர் வீதி அலைதல்

காலையில்

அனைவரும் அலுவலகத்தில் கூடுவோம்

நான் என் பையைத் தோள்மாட்டுவேன்

நீ உன் தாள்களை எந்திரமேற்றுவாய்

என் கால்கள்

வீதியை அளந்து நகர

உன் விரல்கள்

எழுத்துருக்களை மிதிக்கும்

அச்சானவற்றைக் கொண்டுபோவேன்

அச்சாகவேண்டியவற்றைக் கொணர்ந்து தருவேன்

யாருமில்லாத தனிமையில்

நாம் அங்கே இருக்கும் தினங்களும் வந்தது

நீ என்னைக் கேட்டாய்

நான் தலைகவிழ்ந்து

என் பிய்ந்த செருப்பையே பார்த்துக்கொண்டிருந்தேன்

பிறகு

நான் ஐஸ்விற்பவனாகி

என் பனிப்பெட்டியை

மிதிவண்டியில் கட்டிச் செல்பவன் ஆனேன்

என் பணிக்கூடத்தில்

ஐஸ்வார்க்கும் பெண்ணை

நான் தனிமையில் சந்திப்பதே இல்லை.