Saturday, October 15, 2011

உள்ளாட்சி வேட்பாளர்களுக்கு...


என் வாக்கு உங்களுக்குத்தானா

என்பதில் உங்களுக்கு எந்த உறுதியும் இல்லை


என் வாக்கால் நீங்கள் வெல்வீர்களா

என்பதும் உங்களுக்குத் தெரியாது


ஆனாலும் என் வீடு தேடி வருகிறீர்கள்

என்னைக் கும்பிடுகிறீர்கள்

ஏராளமான வாக்குறுதிகளைத் தருகிறீர்கள்

மறக்காமல் உங்கள் சின்னத்தில் வாக்களிக்கக் கோருகிறீர்கள்


எனக்குத் தெரிகிறது

உள்ளாட்சி அமைப்பில்

மக்கள் பிரதிநிதியாக அமரும் உங்களால்

இயலும் வேலைகள் சிற்சிலவே


சாலை அமைக்கலாம்

சாக்கடை கட்டலாம்

தெருவிளக்கு நிறுவலாம்

குடிநீர் வழங்கலாம்

குப்பை அள்ளலாம்

வரிவிதிக்கலாம் பெறலாம்

வாய்ப்பிருந்தால்

பூங்கா, ரவுண்டானா, நூலகம்,

சமுதாயக் கூடம், நியாயவிலைக் கடை அமைக்கலாம்


இதற்கு மேல் உங்களுக்கு

எந்த ஓர் அதிகாரமும் இல்லை


உங்கள் பதவிக்காலம் முழுவதும்

நீங்கள் இவற்றில் கூட நிறைவுறச் செயலாற்றுவதில்லை


இதற்கு ஏன் இத்தனை போட்டி ?

இதைச் செய்ய ஏன் இத்தனை கூப்பாடு ?

இதைச் செய்ய

ஒரு குழந்தையைப் போன்ற எளிய மனது போதாதா ?


இதற்கு ஏன் உங்களுக்கு இத்தனை அதீத ஆர்வம் ?

வெகுளியான தொண்டு மனம் போதாதா ?


நீங்கள் எதற்கு அடிபோடுகிறீர்கள் ?


ஒவ்வொரு பொதுப்பணியிலும்

நடுத்துண்டை எடுத்துத் தின்னலாம் என்றா ?


சொந்த சாதிக்குத் தோதாக

எதிர்சாதிக்குச் சொப்பனமாக வாழலாம் என்றா ?


கட்சிக்குள் முன்னுக்கு வர

இங்கிருந்துதான் முதல் கியரைப் போடவேண்டும் என்றா ?


சாலையோரக் கடைகளில்

தினப்படி வேட்டை கிடைக்கும் என்றா ?


மதுப் பருகுசாலையில்

மாதாந்திர மாமூல் நிச்சயம் என்றா ?


இன்னும் அடித்துப் பறித்துப் பதியவேண்டிய நிலங்கள்

அங்குமிங்கும் இருக்கின்றன என்றா ?


கணவன் மனைவித் தகராறுகளில் கூடத் தலையிட்டு

நடுவில் வந்து நிற்கலாம் என்றா ?


காவல் நிலையத்தில்

ஒரு கான்ஸ்டபிளின் இலகுவான பார்வைக்கா ?


ஊழலுக்கு இன்னும் எழுதப்படவேண்டிய புது இலக்கணங்கள்

மீதம் இருக்கின்றனவா ?


வென்றவுடன் உங்கள் ஸ்கார்பியோவிற்கு வெளியே

ஒரு நாள் உங்களைக் காண முடியுமா ?


எதற்கு

எதற்கு உங்களுக்குள்

இத்தனை ஆர்வம் போட்டாபோட்டி என்று கேட்கிறேன்


என் வினாக்களுக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்

நான் வாக்குச் சாவடிக்கு வருகிறேன்.

7 comments:

 1. நறுக் கேள்விகளுடன் பொருத்தமான புகைப்படம்.

  ReplyDelete
 2. Data Entry Jobs இப்பொழுது இலவசமாகவும் கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com

  ReplyDelete
 3. அருமை அய்யா..!! ஆனா,எல்லாமே பதிலே கிடைக்காத கேள்விகள். :)

  ReplyDelete
 4. மகுடேசுவரன் அண்ணா,

  நீங்கள் வாக்குச் சாவடிக்கு போவதற்குள், வேட்பாளனை சவுக்கடி கேள்விகளால் சாவடித்து விட்டீர்களே!

  விலாசலில்
  விலா நொறுங்கியிருக்கும் ஒவ்வொரு சொரணையுள்ள வேட்பாளனுக்கும்.

  ReplyDelete
 5. இப்படி நேரா கேட்டா எப்படி.... ? கொஞ்சம் இப்படி அப்படித்தான் இருக்கும் இதெல்லாம் நீங்களா.. புரிஞ்சிக்கவேணாமா.. நாங்களே வசூல் கம்மியா இருக்குமேன்னு வருத்தபட்டுகிட்டு இருக்கோம்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே...

  ReplyDelete
 6. கலாநேசன், ! நன்றி.
  சேலம் தேவா ! பதில் கிடைக்கும் காலம் வரக்கூடும்.
  சத்ரியன் ! திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
  அநாமதேயரே ! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் சகஜமாகிவிட்டால்... ?

  ReplyDelete
 7. நச் சென்ற கேள்விகள். உங்கள் வார்த்தைகளுக்குள் உலா வருகையில் நீங்கள் ஏற்படுத்தும் ஒரு 'மூடு' அலாதியானது!

  ReplyDelete