Friday, December 30, 2011

ஓர் ஆட்டு மந்தையின் சந்தை மதிப்பு எவ்வளவு ?

உதய சூரியனைத்

தலை உயர்த்தாமல் பார்த்தேன்

மலையுச்சியில் நின்று

பாடல் பரவும் முன்

காற்றில் இருந்தது

கனமான வெற்றிடம்

வெள்ளமாகிறது புயல் மழை

தானாய்ப் பெய்யும் மழையே

தண்ணீர் தரும்

புத்தகம் போடாத எழுத்தாளன்

புத்தகக் கண்காட்சிக்கு வந்தால்

துக்கம் விசாரிக்கிறார்கள்

சாலையோரக் கொய்யாக்காரன்

ஒரு பழத்தைக் அரிந்துண்கிறான்

என்னே அழகிய காட்சி !

ஏறி ஏறி இறங்குகிறது

இறங்கி இறங்கி ஏறுகிறது

பங்குவிலை


வெற்றிலைக்குப் பெண்ணுறுப்பின் வாசமாம்

அப்போ, ஆணுறுப்புக்குப்

புகையிலை வாசமா ?

போலீஸ் ஸ்டேஷன் ரைட்டரைவிட

எவ்விதத்தில் உயர்ந்தவர்

சினிமா ரைட்டர் ?

இந்தக் காலத்திலும்

ஊடகங்களில் ஜோதிடம் பேசுகிறானே,

கேட்கும் நாம் அவ்வளவு கேனமா !

தண்ணீர் தர

மறுக்கும் உலகில்

நாம் வாழ்கிறோம்

நாய்க்கடிக்கு ஊசிபோட

அரசு மருத்துவமனை சென்றால்

அங்கே வரிசையில் நூறுபேர் !

குற்ற உணர்ச்சி வதைக்கிறது

மூவர் மட்டுமே அமர்ந்திருக்க

ஒரு மதியக் காட்சி கண்டேன்

ஐம்பது உருப்படிகள் உள்ள

ஓர் ஆட்டு மந்தையின் சந்தை மதிப்பு

இரண்டரை லட்சமாம்

2012-ல் உலகம் அழியப்போகிறது

புத்தாண்டு வாழ்த்து

சொல்வதா வேண்டாமா ?

Sunday, December 25, 2011

குறைகூறி


நம்மைச் சுற்றி எப்படி வந்தான்

இந்தக் குறைகூறி ?


இவனிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவே

ஆற்றல் அனைத்தும் விரயமாகிவிடுகிறது.


வெள்ளைத்தாளில்

கரும்புள்ளி தேடுவதே இவன் வாடிக்கை.


தோசையின்

பசியணைக்கும் வள்ளாண்மையைப் பேசாமல்

அதன் வட்டக்குறைகளையே பேசுபவன்.


வடக்கு நோக்கி நின்றால்

நீ கிழக்கு நோக்கி நின்றிருக்கலாம் என்பான்.


மனச்செயலியை

முற்றாகக் குலைக்கும் வைரஸாகிவிடுகிறது

குறைகூறி உதிர்க்கும் ஒரு கருத்து.


ஒருவனின் மழலையே அவன் என்பதில்

நான் முழுநம்பிக்கையுள்ளவன்.

அந்த மழலையை அரிந்து அகற்றுவதில்

குறைகூறி குறியாயிருக்கிறான்.


குறைகூறியை

நாம் எப்போதும் நாடுவதில்லை

அவன்தான்

நம்மைத் தேடியபடியே இருக்கிறான்.


அவனிடமிருந்து

நாம் ஒளிந்துகொள்ளாததால்

அவன் நம்மைக் கண்டுகொள்கிறான்.


ஒரேயொரு குறைகூறி

நம்மை எல்லாத்திசையிலும் முடக்கிவிடுவான்.


ஒரேயொரு குறைகூறி

நம்மை என்றும் எழாதபடி வீழ்த்திவிடுவான்.


ஒரெயொரு குறைகூறி

நம்மைக் குதறிக் கொன்றுவிடுவான்.


குறைகூறி என்னும் பெருநோயாளி

வைத்தியக் குறிப்புகள் கூறுபவனைப்போல் தோன்றுவான்.


குறைகூறி என்னும் பைத்தியக்காரன்

அலையாத விழிகளோடு எதிரே நிற்பான்.


குறைகூறி என்னும் குற்றவாளி

நமக்கு நீதி செய்பவன்போல் அமர்ந்திருப்பான்.


குறைகூறி என்னும் தாழ்ந்த சுயமதிப்பீட்டாளன்

நம்மை விமர்சனத் தராசில் நிறுத்துவான்.


இப்பொழுது நான் எச்சரிக்கையாகிவிட்டேன்.

அவன் என்னை எந்நோக்கோடு அணுகுகிறான்

என்பதைப் புரிந்துகொண்டேன்.

அவன் ஓர் ஆளே இல்லை என்பது தெரிந்துவிட்டது.


முன்பெல்லாம்

குறைகூறி எதைச் சொன்னாலும்

‘அப்படியா சொல்றீங்க ?என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

இப்பொழுது

‘போடாங்கொய்யாலேசொல்கிறேன்.

Thursday, December 1, 2011

DON'T MISS IT


இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்

நஞ்சுபுரம்

வரும் ஞாயிற்றுக்கிழமை (04.12.2011) மாலை 4.00 மணிக்கு உங்கள் சன் டிவியில் காணத்தவறாதீர்கள் !

ஓர் இணைப்பு


காட்சிப்பிழை திரை இதழின் நவம்பர் இதழில் ‘தமிழ்த் திரையின் மகத்தான பாடல்கள்’ கட்டுரைத் தொடர் வெளியாகவிருப்பதை ஏற்கனவே நண்பர்களுக்குக் கூறியிருந்தேன். அந்த இதழின் இணையப் பதிவேற்றத்தைக் கண்டேன். வசந்த கால நதிகளிலே...’ என்ற பாடலைப் பற்றிய என் கட்டுரையை இந்த இணைப்பில் நுழைந்து வாசிக்கலாம்.