Saturday, September 24, 2011

பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்


பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம்

வயதானால் வழுக்கை விழாது

நகரத்தில்

நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்

தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை

சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும்

எப்பொழுதும் நம் செல்பேசி

பயன்பாட்டிலேயே இருக்கும்

சடங்கானால்

சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள்

நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள்

கல்யாணம், மருதாணி, நலங்கு,

பட்டுப்புடவை, வளைகாப்பு என

அநேக தருணங்களில்

நாயகியாகி அமர்ந்திருக்கலாம்

காமக் கவிதை எழுதினால்

இலக்கிய உலகமே திடுக்கிடும்

கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்

மூத்த இலக்கியவாதி

திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு

நம்மை அழைத்துப்போய்

கடல் பார் என்று காட்டுவார்

இந்தக் காட்சி உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பார்

முகப்புத்தகத்தில்

எவனையும் கவிழ்க்கலாம்

எவனாவது ஒருவன்

நமக்கு தாஜ்மஹால் கட்டுவான்

கிழவியாயிருந்தாலும் ஒருவன்

அருநெல்லிக்கனி தருவான்

ஒன்பதாம் வகுப்பே படித்திருந்தாலும்

கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்

மதுரையை எரிக்கலாம்

கூந்தல் வாசம் குறித்து ஐயமெழுப்பி

ஆண்டவனையே அலைக்கழிக்கலாம்

நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்

டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும்

அரச விவகார அதிகாரியானால்

பத்திரிகைகள் பின்னாலேயே ஓடிவரும்

நம் வலைப்பூவில்

நிறைய வண்டுகள் திரியும்

திடீரென்று நம் புத்தகம்

எஸ்கிமோக்களின் மொழியில் பெயர்க்கப்படும்

யார் அமைச்சராக வேண்டும் என்பதை

நாம் முடிவு செய்யலாம்

பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம், இல்லையா ?

Saturday, September 3, 2011

நான்வேப்பங்குச்சியில்

பல் துலக்கியிருக்கிறீர்களா ?


நீங்கள் வாங்கிய வேளாண்பூமியில்

நடைபயின்றபோது

புதரிலிருந்து ஒரு முயல்

புறப்பட்டோடியதைப் பார்த்திருக்கிறீர்களா ?


எல்லாப் பிடிவாதங்களையும்

விட்டுவிட்டு

இரட்டை இலைக்கு வாக்களித்திருக்கிறீர்களா ?


அட்டைப்பூச்சி

உங்கள் ரத்தத்தைக் குடித்தபின்

கருந்திராட்சையைப் போல் உதிர்ந்ததைக்

கண்டதுண்டா ?


ஈருருளியின் கைப்பிடியை

உங்கள் வேட்பின்படி மாற்றியமைத்ததுண்டா ?


பங்குச் சந்தையில்

ஒரே நாளில்

முதலை இரட்டிப்பாக்கியிருக்கிறீர்களா ?


மகிழ்வுந்தை

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில்

ஓட்டியிருக்கிறீர்களா ?


எவ்வளவு பெரிய எழுத்தாளன் ஆயினும்

அவனின் கீழ்மையறிந்து

ஏளனமாகப் புறந்தள்ளியிருக்கிறீர்களா ?


என்றும் வற்றாத சேற்றுக் குட்டையில்

பயமின்றி நீராடப்

பாய்ந்திருக்கிறீர்களா ?


தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குச்

சிறப்பு அழைப்பில் சென்று

அங்கு தரப்பட்ட சில நூறுகளை

அவன் முகத்திலேயே விட்டெறிந்திருக்கிறீர்களா ?


ரயிலில்

எதிர் இருக்கையமர்ந்த இளந்தாயின்

கொழுகொழு குழந்தையை

வாங்கி வைத்துக்கொண்டதுண்டா ?


கைப்பிள்ளையோடு பிச்சை இரப்பவளுக்கு

எப்பொழுதும்

பத்து ரூபாய் இடுவீர்களா ?


பாப்பாவின் பள்ளிக்குப்போய்

ஏன் உன் பள்ளிப் பிரார்த்தனையில்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை என்று

தாளாளனைத்

தைரியமாகத் தாளித்திருக்கிறீர்களா ?


காவல் துறை மீதே

வழக்கு போட்டிருக்கிறீர்களா ?


இவை அனைத்தும்

எனக்கு நேர்ந்திருக்கிறது

நான் செய்திருக்கிறேன் !