Wednesday, July 9, 2014

உயிர்பெறும் திருப்பூர்


ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழகத் தொழில்நகரம் திருப்பூர். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் கடலுக்கு அப்பால் தொடங்கிய இந்தச் சுணக்கம் அத்தோடு நின்றுவிடவில்லை. அடுத்த ஆண்டுகளில் சாயப்பட்டறைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பாக மற்றொரு வடிவம் எடுத்தது. இடையில் உற்பத்திக்கான ஆற்றல் ஆதாரமான மின்சாரம் பகலைப் பாதியாய் முடக்கியது. ஆடை உற்பத்தித் தொழிலின் கச்சாப் பொருளான நூல்விலை சரசரவென்று ஏறியபடி இருந்தது. போட்டி நாடுகள்மீது வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதுமோகம் தோன்றத் தொடங்கியது. வங்கிகள் திருப்பூர்த் தொழிலுக்கு விரித்திருந்த வரவேற்புப் பந்தலை அவசர அவசரமாகப் பிரித்தன. தொழிலாளர் பற்றாக்குறை தலைவிரித்தாடத் தொடங்கியது.

‘திருப்பூருக்கு பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றபோது ஆள்கள் தேவை என்னும் விளம்பரங்களையே அதிகம் பார்த்தேன்’ என்று ஜெயலலிதா ஒருமுறை குறிப்பிட்டுச் சொன்னார். பெரிய நிறுவனத்தினர் அறுபது எழுபது கிலோமீட்டர்கள்வரை பணியாளர் பேருந்துகளை இயக்கி தொழிலாளர்களை ஏற்றிவந்து நிலைமையைச் சமாளித்தனர். வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை நாடி மெல்ல மெல்ல வரத் தொடங்கினர். எண்பதுகளின் இறுதியில் தொடங்கி 2006வரை கொடிகட்டிப் பறந்த திருப்பூர்ப் பின்னலாடை ஏற்றுமதித் தொழில் இன்று கறாரான சுயபரிசீலனைக் கட்டத்தில் இருக்கிறது.

விவசாய விளைபொருளான பருத்தியைக் கொள்முதல் செய்து பதமாக்கிப் பக்குவப்படுத்தி நூலாக நூற்கிறார்கள். இந்த நூற்கும் செயல் ஸ்பின்னிங் மில்கள் எனப்படுகிற பெருங்கூடத் தொழிலாக மாறியிருக்கிறது. இத்தகைய நூற்பாலைகளிடமிருந்து நூற்கண்டுகளைக் கொள்முதல் செய்யும் திருப்பூர் பின்னலாடைத் துறை அவற்றைத் துணியாக நூற்றுச் சலவை செய்து, சாயமேற்றிப் பல்வேறு பதச்செயல்முறைகள்மூலம் பண்படுத்துகின்றனர். அவ்வாறு பெறப்பட்ட துணியுருளை ஆடை உற்பத்தியாளரின் தொழிற்கூடத்தில் துண்டு துண்டுகளாய் வெட்டப்பட்டு நாம் அணிகின்ற டிசர்ட்-ஆக, டாப்ஸாகத் தைக்கப்படுகிறது. திருப்பூர்ப் பகுதியில் நடக்கின்ற தொழில் இதுதான்.

ஆடை உற்பத்தித் தொழிலின் கச்சாப் பொருளான பருத்தி, மனித நாகரிக வரலாற்றோடு தொடர்புடையது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் வளரும் பணப்பயிர் இது. பலபோக சாகுபடி தரவல்லது. தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் நலிவடைந்ததும் பருத்தி விளைச்சல் குறைந்தது. பருத்திக்கொள்முதலுக்கு நாம் வடமாநிலங்களையே பெரிதும் நம்பியுள்ளோம். பருத்தி விவசாயமும் இரசாயன உரங்களை நம்பியே நடக்கிறது. மிகை மற்றும் குறை விளைச்சலுக்கு ஏற்பப் பருத்தி ஏற்றுமதியை அனுமதிப்பதும் மறுப்பதுமான நிலையில் அரசாங்கம் உள்ளது. கச்சாப் பொருள்களை அப்படியே ஏற்றுமதி செய்வதைக்காட்டிலும் அவற்றைப் பயன்படுத்தி மதிப்பேற்றப்பட்ட உற்பத்திப் பொருளாக ஏற்றுமதி செய்வதையே கருத்தில்கொள்ளவேண்டும். பருத்தி வரத்தின் இந்த ஊசலாட்ட நிலைமை ஆடைத் தொழிலின் முதல் நிர்ணய காரணியாக மாறியிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. சிறுதொழில் முனைவோர் இத்தொழிலில் நுழைய இயலாது. பெரும் முதலீடு கோரும் ஆலைத்தொழில் இது. திருப்பூர் சுபிட்சமாக இருந்தபொழுது நூற்பாலைத் தொழில், ஆடை உற்பத்தித் தொழில்துறையை மிகவும் நம்பியிருந்தது. நூல் விற்பனையில் நூற்பாலைகளிடையே வலுவான போட்டி நிலவியது. இந்தச் சிரமங்களால் நூற்பாலையினர் தம் தொழில்மீதே களைப்படைந்த செய்தியெல்லாம் உண்டு. திருப்பூரின் சிறு தொழிலதிபர்கூட தமக்கான நூல் கொள்முதலைப் பேராலைகளிடமிருந்து கடனாகவே பெறவல்லவராக இருந்தார். ரொக்கத்திற்குக் கொள்முதல் செய்யும்போது இயன்றவரை நூல்விலையை அடித்துப் பேசி வாங்கினார். அவருக்கான தேவையை நிறைவேற்ற நூற்பாலையின் விற்பனைப் பிரிவு தினமும் அவரை அழைத்துப்பேசி வாய்ப்பு கோரின.

திடீரென்று இந்தக் காட்சி மாறியது. சர்வதேச நிலைமைகளைக் கருத்தில்கொண்டு நூல்விலை ஏறத் தொடங்கியது. பருத்தி விவசாயிகள் ஏற்றுமதிக்கு அனுமதி கோரிப் பெற்றனர். நூலுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டது. கடனாகத் தந்து பிற்பாடு வசூலித்துக்கொண்டிருந்த நூற்பாலைகளிடம் திருப்பூர்த் தொழில் துறையினர் ரொக்கம் செலுத்திக் காத்திருக்க வேண்டியவர்களானார்கள். கேஷ் அண்ட் கேரி முறை நிர்ப்பந்தமானது. விலையேற்றத்தைக் கணித்து நூல் விற்பனையைத் தாமதித்தார்கள் என்ற கருத்தும் நிலவியது. தம் அணுக்கமான வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றவே நூற்பாலைகளால் இயலவில்லை. ஒரு ஆர்டரின் மதிப்பில் நாற்பது விழுக்காடுவரை நூல்கொள்முதலுக்கு உடனே முதலிட வேண்டிய நிலைக்கு திருப்பூர்ப் பின்னலாடை அதிபர் தள்ளப்பட்டார். இதனால் ஆரோக்கியமான பொருளாதாரத்துடன் இயங்கிய நிறுவனங்கள்கூட தள்ளாட்டத்தை, வங்கி நெருக்கடிகளைச் சந்தித்தன. கடன் நெருக்கடிகளால் இயங்கிய நிறுவனங்கள் கழுத்தறுப்புக்கு ஆளாயின.

நூல் வணிகத்தில் ஆடை உற்பத்தியாளரிடமிருந்த மேலதிகாரம் நூற்பாலை அதிபர்களின் கைக்கு மாறியது. இடையில் திருப்பூர்ப் பின்னலாடைத் தொழில் துறையின் மேல்வரிசை முதலாளிகள் பலர் நூற்பாலைகள் நிறுவி அவற்றுக்கும் அதிபர்களாக, பங்குதாரர்களாக ஆகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பின்னலாடைத் தொழிலுக்காகக் குரல்கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்த அவர்கள் வெளிப்படையாக மௌனம் சாதித்தனர். இந்த இடத்திலிருந்து திருப்பூர்த் தொழிலதிபர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது. சிறுதொழில் முனைவோர்கள் கேட்பாரற்றவர்கள் ஆனார்கள்.

இந்தக் களேபரமான காலகட்டத்தில்தான் திருப்பூருக்கு ஆர்டர்கள் வழங்கிய ஐரோப்பிய அமெரிக்க இறக்குமதியாளர்கள் நொடித்துப்போயினர். பெரும்பெரும் தொகைகள் வந்துசேராமல் நின்றுபோயின. இலட்சக்கணக்கிலான தொகையை முகம்பார்த்துத் தந்துசென்றுகொண்டிருந்த திருப்பூர், பணமின்றித் திரும்பும் காசோலைகளால் தடுமாறியது. சின்ன சின்ன கொடுக்கல் வாங்கல்களுக்குக்கூட அரசியல் கட்சிப் போர்வையில் உருட்டல் மிரட்டல்கள் அரங்கேறின. டெபிட், க்ரெடிட் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம்கூடத் தெரியாத ஒரு கான்ஸ்டபிள் தகராறு முற்றிய இருவருக்கிடையே மேதாவியாய்ப் பஞ்சாயத்து செய்யவேண்டியவரானார்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அதற்கடுத்த ஆறு மாதங்களும் உறுதி செய்த ஆர்டர்களை முடிக்க இவ்வூர்க்காரர்கள் பட்டபாடுகளை எழுத்தில் வடிக்க இயலாது. உடனடியாகக் குஜராத்திலும் உலூதியானாவிலும் அலுவலகம் பிடித்து இங்கிருந்து பாரவுந்துகளில் துணிகளை ஏற்றி அனுப்பிச் சாயமிட்டுச் சமாளித்தார்கள். இந்தக் குழறுபடைகளில் கருநீலத்திற்குப் பதிலாக கறுப்புச் சாயம் தோய்த்து நட்டப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அதற்கடுத்த இடியாக இறங்கியது தீராத மின்வெட்டு. கடந்த ஏழெட்டு வருடங்களாகவே இதற்குப் பழகிப்போய்விட்டோமா அல்லது பாழ்பட்டுவிட்டோமா என்று பிரித்தறிய முடியவில்லை. முழுச் செயல்பாட்டில் பணியிருக்கும்போது, பாதி தைத்த நிலையில் மின்வெட்டானால் அந்த உடை எந்த அளவுக்குத் தரமதிப்பீட்டை நிறைவு செய்யும் ? இதனால் செலவுக்கணக்கில் தானாக பத்து விழுக்காடு உயர்ந்தது. சாவடியிலிருந்து டீசல் பிடித்துவந்து குறையக் குறைய ஊற்றி ஜெனெரேட்டரின் பாராமரிப்பையும் பார்க்கவேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். மின்வெட்டு நேர அறிவிப்பைப் பயன்படுத்தி பணிநேரங்களில் மாறுதல்களைக் கூடச் செய்து பார்த்தார்கள். பலனளிக்கவில்லை. இந்தப் பிரச்சனை வேலை நேரத்தில், வேலைத் தரத்தில், வேலையின் விரைவுவேகத்தில் கொடுமையான சுணக்கத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மற்ற தொழில் நகரங்களைவிட மூன்று மடங்கு வேகத்தில் வளர்ந்ததற்குக் காரணம் இங்கு எப்போதும் இருபத்து மணி நேரமும் பணி நடந்துகொண்டே இருந்ததுதான். முதல்முறையாக தொழிற்கூடங்களின் பணிநேரம் குறையத் தொடங்கியது.

பனியன் நிறுவனத்தில் செக்கிங் பணியாளாகச் சென்றுகொண்டிருந்த மல்லிகா கட்டிட வேலைக்குச் செல்லத் தொடங்கினார். பனியன் கம்பெனிக்குச் சென்றால் நிழலில் அலுங்காமல் பணியாற்றலாம், நேரத்திற்குச் சாப்பாடு, தேநீர். மல்லிகா அந்த வேலையை விடுத்து, கட்டிட வேலைக்கு வந்து வெயிலில் கட்டுமானத் தூசுகளில் வேலைசெய்ய முன்வந்தார். ஏன்?’ என்று கேட்டேன். ‘கம்பெனிக்குப் போனா ராத்திரி ஒன்பது மணிக்கு முன்னால வூட்டுக்கு வரமுடியல. அப்பப்ப வெடிநைட்டு வெச்சுச் செய்யச் சொல்றாங்க. சோறாக்கறதுக்கும் புள்ளங்களப் பார்க்கறதுக்கும் அஞ்சு ஆறு மணிக்குள்ளாற வூட்டுக்கு வந்துட்டாதான் பரவால்ல. கட்டட வேலைக்கி வந்தா அஞ்சரைக்கு வூட்டுல இருக்கலாம், பாருங்க. அதான் இந்த வேலைக்கு வந்துட்டேன்.’ என்று கூறினார். இந்த உரையாடல் நிகழ்ந்தது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன். இப்போது நிலைமையே வேறு. இந்த நொடிப்புக் காலத்தில் தம் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கமுடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உரிய இலாப விகிதமே இல்லாத ஆர்டர்களை எடுத்துச் செய்தவர்களும் இருக்கிறார்கள். தினமும் ஒன்று அல்லது ஒன்றரை ஷிப்டுகளை இயக்க முடிந்தால் அது ஆரோக்கியமான விஷயம்தான்.

’தமிழ்நாட்டில் ஊருக்கு நூறு பேர்களேனும் திருப்பூரை நம்பி இருக்கிறார்கள்’ என்று என் கவிதையொன்றில் குறிப்பிட்டு எழுதினேன். கடந்த இருபதாண்டுகளாக இந்நகரை நாடி வந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்ட குடும்பத்தினர் கணக்கிலடங்கா எண்ணிக்கையினர். இன்றும் குடும்ப அட்டை மாறுதல்வேண்டி தினமும் நூற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிகின்றன. நகரையொட்டிய புறநகர்ப் பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே சென்றது. தென் தமிழகத்தினர் மட்டுமன்று டெல்டாப் பகுதி மக்களும் வட தமிழகத்தினரும் திருப்பூரில் குடியேறி இவ்வூர்வாசிகளாகினர். கணவனும் மனைவியும் வயதுவந்த பிள்ளைகளும் பணிக்குச் சென்று பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சியை எளிதில் எட்டினர். தீபாவளி பொங்கலுக்குச் சொந்த ஊரை நாடித் திரும்பும் மக்கள்தொகையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியான இடத்தைத் திருப்பூர்தான் வகிக்கிறது. திருப்பூரை நோக்கி வரும் பேருந்துகளும் சரி, திருப்பூரிலிருந்து கிளம்பும் பேருந்துகளும் சரி - அமர இடமில்லாதபடி பயணிகளால் நிரம்பியிருக்கும்.

இந்த மக்கள்தொகைப் பெருக்கம் இவ்வூரை மாவட்டத் தலைநகராக்கவேண்டிய இடத்திற்கு இட்டுச் சென்றது. மாநகராட்சியாக விரிவுபடுத்த வேண்டி வந்தது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கோயம்புத்தூருக்கு உட்பட்ட நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த இவ்வூர், தொகுதி மறுசீரமைப்பில் தனி நாடாளுமன்றத் தொகுதியானது. அதாவது, மக்கள் விசையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உலகத் தொழில் நகரங்களின் வரைபடத்தில் தன்பெயரைப் பதிந்துகொண்ட இவ்வூருக்கு அரசாங்கத்தின் பார்வை கனிந்தபோது அது தன் தொழில்வளர்ச்சி வரலாற்றில் உச்சத்தில் நின்றிருந்தது.

இந்த மக்கள் நெரிசல் நகர்நாடித் தலைமறைவாக விரும்பும் குற்றவாளிகளுக்குப் பிடித்துப் போனது. தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் தேடப்படும் குற்றவாளிகள் திருப்பூர்ப் பகுதியில் அகப்படுவது வாடிக்கையானது. ஏனென்றால், பேருந்தை விட்டிறங்கியதும் நேராக ஒரு நிறுவனத்திற்குள் நுழைந்து வேலைசெய்ய இயல்கிற சூழல் இங்கு மட்டுமே நிலவுகிறது. எவ்வளவு பெரிய குற்றவாளியானாலும் அவன் சாதாரணத் தொழிலாளி வேடம் பூண்டு யாராலும் கண்டறியப்பட முடியாதவனாக இங்கு காலந்தள்ள வந்துவிடுகிறான். காவல்துறைக்கு இது பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. எப்படித் தேடித் துழாவி இவர்களைக் களையெடுப்பார்கள் என்பது சுவாரஸ்யமான கேள்வி. இப்போது காவல்துறை ஆணையரகம் அமைக்கப்பட்டு உரிய எண்ணிக்கையிலான காவலர்கள் நியமனம் பெற்றுவருகிறார்கள். நகரமெங்கும் பல்வேறு வகையான காவல் தணிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவ்வப்போது காணமுடிகிறது.

இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்புயர்வு ஏற்றுமதியை எங்கோ கொண்டுபோயிருக்கவேண்டும். ஆனால் நடந்தது என்ன ? எண்பதுகளில் சிலநூறு கோடிகளாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி தொண்ணூறுகளின் தொடக்கத்தில் முதன்முறையாக ஆயிரம் கோடிகளை எட்டிப் பிடித்தது. அதிலிருந்து வருடத்திற்கு ஆயிரம் கோடிகள் வீதம் ஏற்றுமதியின் மதிப்பு வளர்ச்சியின் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது. உச்சமாக 2005-2006 காலகட்டங்களில் ஏற்றுமதி மதிப்பு 13000 கோடிகளைத் தொட்டது. அதிலிருந்து அந்த இலக்கத்திலிருந்து குறைவதும் தொடுவதுமாகவே இருக்கிறது. ஆனால், முதலில் பதின்மூன்றாயிரம் கோடியைத் தொட்டபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சுமார் ரூ. 40 என்ற அளவில் இருந்தது. அதிலிருந்து இப்போது ரூ. 60/டாலர் என்ற மதிப்புக்கு சுமார் ஐம்பது விழுக்காடு உயர்ந்துகொண்டே சென்றபோதும் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பு 13000 கோடிகள் என்ற அளவில் அப்படியே இருக்கிறது. அதாவது மதிப்பளவில் அதேயளவு ஏற்றுமதி நிகழ்வதுபோல் தோன்றினாலும் சுமார் ஐம்பது விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி நிச்சயம் சரிந்திருக்கிறது. இடையில் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட அளவு மாற்றமும் உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியே இந்தத் தோற்றத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

சப்தகிரி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர் ரமேஷ் ‘பல பையர்கள் இந்திய ரூபாயில் விலையை உறுதி செய்கிறார்கள். இந்த ஏற்ற இறக்கம் அவர்கள் தரப்பிலும் கையைக் கடிப்பதால் தொகையைச் செலுத்துவதில் கால தாமதம் ஏற்படுத்துகிறார்கள். சமயத்தில் கணிசமாகப் பிடித்தமும் செய்துகொள்கிறார்கள்.’ என்கிறார். ‘டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நாற்பதாக இருந்தாலும் சரி… அறுபதாக இருந்தாலும் சரி… அது ஓரளவு நிலைத்த இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் ஏற்றுமதி இறக்குமதித் தொழிலுக்கே நல்லது. இந்த இயல்புக்கு மாறான சூழ்நிலைகளைக் கருதித்தான் நிறுவனத்தை விரிவுபடுத்தும் எண்ணத்தைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டுவிட்டேன்’ என்கிறார்.

திருப்பூர்த் தொழிலின் ஒட்டுமொத்த நிலவரத்தை அறிந்துகொள்வது அவசியமானது. இவ்வூரின் முன்னோடி ஏற்றுமதியாளர்களில் ஒருவரான யுவராஜ் சம்பத்துடன் பேசியபோது உலக நிலவரங்களைப் பட்டியலிட்டார். ’நம்முடைய முதல் போட்டியாளரான சீனாவில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி தளர்த்தப்பட்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். இது சீனாவில் உழைப்பாற்றலுள்ள இளையவர்கள் தொகை குறைந்துவிட்டதையே காட்டுகிறது. நம் தேசத்தில் இளையவர் எண்ணிக்கை சமவிகித எண்ணிக்கையில்தான் பேணப்படுகிறது. இதுவே நமக்கு நல்ல செய்தி. இந்த அடிப்படையில்தான் பருத்தி நூல்விலை இடையில் திடுமெனக் குறைந்தது. எல்லா நூற்பாலைகளுமே இருப்பை விரைந்து குறைத்துக்கொண்டுள்ளார்கள். இது ஆடைத்தொழில் துறைக்கு நல்ல வாய்ப்பு.’ என்றார். அவர் சொன்னது உண்மைதான். இடையில் நூல்கண்டுகளின் விலை பத்து விழுக்காடுவரை விலைவீழ்ச்சி கண்டது. ’நம்முடைய பிரச்சனை பேராலைகளாக நம் தொழிற்கூடங்களை அமைக்கவே முடியவில்லை. கம்போடியாவில் நான் பார்வையிட்ட தொழிற்கூடத்தில் சாதாரணமாக 3840 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். சீன முதலாளிகள் அங்கே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவ்வாறு நாமும் பல்வினைச் சீராலைகள் (Vertical Integrated Factory) அமைத்தால் இலட்சக்கணக்கான எண்ணிக்கையிலான ஆடைகளை சில நாள்களில் உற்பத்தி செய்து தரமுடியும்’ என்கிறார்.

திருப்பூர் போன்ற நகரங்களில் பணியுள்ள தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அருகிலுள்ள தொழிற்கூடத்திற்கு, நண்பர்கள் அதிகம் பணியாற்றும் தொழிற்கூடத்திற்கு, கூடுதலாக சம்பளம் கிடைக்கும் இடத்திற்கு - என அவர்கள் தேர்வு செய்து பணிக்குச் செல்கிறார்கள்.

கந்தன் மில்ஸ் என்ற பெயரில் சிறிய ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கியுள்ள சந்திரமோகன் என்ற இளைஞர் ஏற்றுமதி என்னும் வாய்ப்பைவிட உள்நாட்டுத் தேவைக்கென உற்பத்தியில் ஈடுபடுவதை விரும்புகிறார். ‘நமக்கென்று ஒரு நல்ல பிராண்ட்-ஐ உள்நாட்டுச் சந்தையில் உருவாக்கிவிட்டால் இந்தத் தொழிலில் பெரிய அளவில் சாதிக்கலாம்’ என்கிறார். ’வெளிநாட்டு ஏற்றுமதி மதிப்பான வாய்ப்புத்தான் என்றாலும் உள்நாட்டுச் சந்தை வாய்ப்பு அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. அமைதியாக அந்த வர்த்தகம் நடந்துகொண்டுதான் உள்ளது.’ என்பது அவர் கருத்து. உள்நாட்டுத் தேவைக்கான பனியன் ஜட்டி உற்பத்தியில்தான் திருப்பூர் தன் கணக்கைத் தொடங்கியது. எந்த நெருக்கடிகள் வந்தாலும் உள்நாட்டுச் சந்தையில் இவ்வூருக்கென்று தனி மதிப்பு இருக்கவே செய்கிறது.

திருப்பூர் என்னும் நகரம் ஒற்றைத் தொழிலை மையப்படுத்தி உருவான பன்முக நகரம். நெருக்கடிகள் அனைத்தையும் வென்று பழையபடி பயணிக்கக்கூடிய பண்பாட்டுச் செழுமை இங்கு வாழும் மக்களுக்கு உண்டு. இதற்கு முன்னேயும் பல சுணக்கங்களைப் பார்த்துப் பழகியவர்கள் இவர்கள். அவற்றோடு கடுமையாகப் போராடி வென்று காட்டியவர்கள். உணவுக்கான முதல் தேவை தீர்ந்ததும் மனிதர்கள் உடுத்தத் தேவையான பொருளைத்தான் உற்பத்தி செய்கின்றார்கள். உடை ஆடம்பரத் தேவையோ, நாகரிக - கால வளர்ச்சிப்போக்கில் காணாமற்போவதோ அன்று. இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் இவ்வூர் தன் முரண்கள் அனைத்தையும் களைந்து எவ்வூரும் எட்டமுடியாத உயரத்திற்குச் சென்றுவிடும் என்பது எங்கள் நம்பிக்கை !