Tuesday, August 24, 2010

புகை

ஏனென்றே தெரியாமல் இரண்டு பழக்கங்களை என் இளமை முதலே வெறுத்து வந்திருக்கிறேன். புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும்.

சிறு வயதில் என் பெற்றோர் எப்படிப் பாலையும் நெய்யையும் ஊட்டி வளர்க்கவில்லையோ, அப்படியே எந்தவொரு ஒழுக்க விதிகளையும் ஊட்டி வளர்க்கவில்லைதான். கிடைத்ததை உண்டு இளமையின் பசியாற்றம் நடந்தது. இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று அக்கம் பக்கம் கற்பித்திருக்கலாம். ஆனாலும் இது எவ்வாறு நேர்ந்தது என்பதை நான் யோசிப்பதுண்டு.

என் தந்தையார் தினமும் புகைத்து எறியும் சிகரெட் துண்டுகளைச் சேகரித்து அதன் வடிபஞ்சைப் பிரித்து விளையாடிக் கொண்டிருப்பேன். பிரித்த பஞ்சைக் கூட பற்றவைத்து அபாயமாக விளையாடத் தோன்றியதில்லை. தேர்ந்த இலக்கிய ஆசிரியர்கள் ஒரு விஷயத்தை எப்படி இழை இழையாகப் பிரித்து அபத்தமாக நிறுவுவார்களோ அவ்வாறு இழை இழையாகப் பிரித்துக் கொண்டிருப்பேன். கடைசியில் இரண்டிலும் பிரமாதமான பொருளொன்றும் அகப்படுவதில்லை.

இப்பொழுதுதான் ஆராய்ச்சி முடிவுகளை அறிந்துகொள்வதற்குக் கூட ஆர்வமில்லாமல் இருக்கிறேனே தவிர, சிறு வயதில் எதையும் ஆராய்ந்து பார்த்து அறிந்துகொள்வதில் மிகுந்த துடிப்போடு இருந்தேன். அந்நோக்கோடு இலங்கை நிலையங்களை இழுத்துப் பிடித்து உள்ளிழுப்பதும் ஊதுவதுமாக ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் வானொலிப் பெட்டியை வீடு அசந்த நேரம் பார்த்து எல்லாவற்றையும் கழற்றிப் பார்த்துவிடுவேன்.

ஓயாது பினாத்திக்கொண்டிருக்கும் கட்டைக் குரல் அறிவிப்பாளர்கள் உள்ளே அகப்பட்டதே இல்லை. அவர்கள் சாமர்த்தியமாக பேட்டரி செல்லுக்குள் போய் ஒளிந்ததுகொள்வதற்கு சாத்தியம் இருப்பதால் அதையும் உடைத்துப் பார்ப்பேன். அதில் வெறும் கரித்துண்டும் டீத்தூளும்தான் இருந்தன. திறமையான அறிவிப்பாளர்கள் ஒளிந்து விளையாடும் ஜாம்பவான்களாகவும் இருந்ததாலோ என்னவோ எங்கும் அகப்படவில்லை. என் முதுகுத் தோல் உரிந்த காலத்திற்குப் பிறகு  அவர்கள் உயரமான இடத்தில் வைக்கப்பட்ட டிரான்ஸிஸ்டரில் இருந்தவண்ணம் அறிவிக்கலானார்கள். 


எதை வாங்கினாலும் வைத்திருந்தாலும் எனக்குத் தந்துவிடும் தந்தையார் இந்தக் குழலை மட்டும் தர மறுத்துவிட்டுத் தான் மட்டுமே ஒய்யாரமாக அமர்ந்து உறிந்து ஊதிக்கொண்டிருப்பார். அது எனக்கு அவசியம் ஆய்ந்தறிய வேண்டிய பொருளாக மாறிவிட்டது. தருணம் பார்த்திருந்தேன்.

யாருமற்ற ஒரு பொழுதில் அவர் விட்டுச் சென்ற சிகரெட் பெட்டியைக் கைப்பற்றி ஓரமாகப் போய் அமர்ந்தேன். பெட்டியின் உள்தட்டைப் பிதுக்கி ஒரு சிகரெட்டை எடுத்து இரண்டு கத்திரி விரல்களுக்கு இடையில் வைத்தேன். தகப்பனாரின் விரல்களுக்கு இடையில் நன்கு குறுக்காக அமரும் சிகரெட் என் விரல்களுக்கிடையில் மரியாதையாக அமராமல் ஆட்டுக் காதுபோல் ஏதாவது ஒரு பக்கம் சரிந்தது. நான் எடுத்துக் கொண்ட ஆய்வு நோக்கிற்கு இது அப்பாற்பட்டது என்பதால் இதில் என் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிராமல் உதட்டில் வைத்தேன்.

தீக்குச்சியை எடுத்துப் பற்ற வைத்தேன். பற்றிய தீக்குச்சியின் ஜுவாலை உதட்டருகில் வந்தவுடன் உயரம் குறைந்து நசுங்கித் தன் ஜீவனை விட்டது. உள்ளங்கைக் குவியலுக்குள் சுடரைக் காப்பாற்றி சிகரெட் முனைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த என் முயற்சிக் காலத்தில் டவுன் பஸ் ஒன்று இரண்டு ஊர்களுக்கிடையில் இரண்டுதரம் போய்வந்துவிட்டது.

என் அடுத்தடுத்த முயற்சிகளும் தீக்குச்சி விரயங்களில் முடிந்தன. சரியாகப் பற்றிய தீயைக் கொண்டுபோய் சிகரெட் முனைக்கு அருகில் நிறுத்தும்போது எனது கண்பார்வை தியான அப்பியாசத்தில் ஒரு புள்ளியில் குவிவதுபோல் ஒருங்கு குவிந்து மாறுகண்ணாகிக் கொண்டிருந்தது. இடையில் சிகரெட்டின் வாய்க்குள் செருகியிருந்த முனை எச்சிலில் ஊறி சோறாகியிருந்தது. எனது கைத்திறனின் மீது மேலும் நம்பிக்கை கொள்ளாமல் சிகரெட்டைத் தரையில் வைத்துப் பற்றவைத்து உதட்டில் வைத்துக்கொண்டேன்.

இந்நிகழ்ச்சி, 'உதட்டிலுள்ள சிகரெட்டுக்கு தீக்குச்சியை உரசி நெருப்புயிர் ஊட்டுவது' ஆய கலைகளில் அறுபத்து நான்கிற்கு அடுத்ததாகக் கொள்ளத்தக்கது என்ற என் முதல் ஆய்வு முடிவிற்கு இட்டுச் சென்றது. 

பற்றிய சிகரெட்டை வாயில் வைத்து அளவாக இழுக்காமல் சூப்பை உறிஞ்சுவதுபோல் முழு நுரையீரலும் நிரம்புமளவு இழுத்ததுத் தொலைத்தேன். அப்புறமென்ன ? தலைக்குள் ஆயிரம் பட்டாசுகள் வெடித்தன. அத்தனை புகையும் குறுக்குச் சுற்றில் பாய்ந்து நுரையீரலைப் புரட்டிப் போட்டு நேராக கபாலத்தின் உச்சிக்குழி வழியே பிதுங்கியது. மூக்கின் சன்னச் சுவர்கள் எல்லாம் கொள்ளியை வைத்துக் கருக்கியதுபோல் எரிந்தன. காதுச் சவ்வு கிழிந்ததுபோல் செவிநுகர்திறன் ஒரு நாழிகை மந்தமாகியிருந்தது. கண்கள் பழமாகச் சிவந்து பொலபொலவென்று நீராகக் கொட்டின. வயிற்றுக்குடல்கள் உள்ளிருப்பதை வெளியேற்றவா என்றன.

இயல்புக்கு வந்து சேர்ந்ததும் எனது ஆராய்ச்சிப் பொருள்களைத் தலையைச் சுற்றித் தூக்கி எறிந்தேன். அடுத்த இரண்டு தினங்கள் தின்ன சோற்றுக்கு ருசி தெரியாமல் தவித்தேன். இப்படி ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு எவனாவது அந்த சனியனைத் தொடுவானா ?

நான் தொடவில்லை.

பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம் வந்தது ஞாபகமிருக்கும். சட்டம் வந்த ஜோரில் பேருந்து நிறுத்தங்களில் வயிறெரிந்து புகைந்துகொண்டிருந்தவனையும் உள்ளே தள்ளி அழகு பார்த்தார்கள். என்போன்றவர்கள் அவசர அவசரமாக 'அப்படிப்போடு சபாசு' போட்டோம். போகப் போக பழைய குருடி கதவைத் திறடி கதையாக முகத்தருகில் வந்து ஊதிச்செல்பவனிடம் கூட நெருப்பு கேட்குமளவுக்கு அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றனர். எங்கள் சபாசுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டோம். 

ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திரையரங்கின் இடைவேளையில் வெளிப்படும் நபர்களை மெனக்கெட்டு ஊன்றிக் கவனித்தேன். எல்லாரும் எடிட்டிங், ஒளிப்பதிவுக் கோணங்கள் வரை அலசிப் பேசுகிறார்கள். மற்றும் புகைக்கிறார்கள்.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஐந்து நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியவன் நிச்சயம் புகைக்கிறான். புகைக்கும் பழக்கமுள்ளவன் கழிப்பறையில் நுழையும் ஒவ்வொரு தடவையும்

கழிகிறானோ இல்லையோ ஆழ்ந்து புகைக்கிறான். யோசிக்கிறவன் புகைக்கிறான். பேசிக்கொள்பவர்கள் புகைக்கிறார்கள். இதை வாசிக்கிற நீங்கள் கூட புகைத்துக் கொண்டிருக்கலாம்.

பொது இடங்களில் எந்தக் கூச்சமுமில்லாமல் விட்டேற்றியாகப் புகைப்பவன் தன் வாயிலிருந்து வெளியேறும் புகை நேரடியாக ஒரு குழாய் மூலம் வளிமண்டலத்தின் வேற்றடுக்குக்குப் போய்விடுவதாக எண்ணுகிறான். அது அவனையும் ஒரு திருஷ்டிச் சுற்று சுற்றிவிட்டுப் பக்கத்து நபர்களின் நுரையீரல்களுக்கும் பகுதி பகுதியாக நுழைந்து அழிக்கிறது என்று எண்ணுவதே இல்லை.

தோரணையாகப் புகைத்து சுருள் சுருளாகப் புகை விடுபவனையே பெண்கள் விரும்புவதாக ஐதீகம் நிலவுகிறது. அவன் புகையை மட்டுமல்ல அவனை விரும்பியதும் கூட எவ்வளவு பெரிய அபத்தம் என்பதைப் போகப் போக புரிந்துகொண்டுவிடுகிறார்கள்.

என் நண்பன் ஒருவனின் மனைவிக்குக் காலை எழுந்ததும் முதல் வேலை கோலம் போடுவதோ வாயில் தெளிப்பதோ அல்ல. இரண்டு சிகரெட்டுகளையும் தீப்பெட்டியையும் எடுத்துச் சென்று கழிப்பறையில் வைத்துவிடவேண்டும். அதிகாலையில் சிகரெட் இல்லாவிட்டால் அப்பெண்ணே முக்குக் கடைக்குப் போய் வாங்கி வந்து வைத்தாக வேண்டும். தவறினால் அவன் அன்று முழுப்பொழுதும் குதி குதியென்று குதித்துக் கொண்டே இருப்பான். அதுவும் அப்பெண்ணை மல்லாத்திப் போட்டு நெஞ்சில் குதிப்பான். அவன் புகைக்கும் அழகில் மயங்கித் திருமணம் செய்துகொண்டவள் அவள். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அவன் செயலற்று இரும மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று நுரையீரலைச் சுரண்டி அரைக்கிலோ நிக்கோடின் களிம்பை எடுத்திருக்கிறார்கள்.

அன்னார் குணமாகி வந்தும் பழக்கத்தை விட முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருக்கிறார். 

 புகைப்பதால்தான் நோவும் சாவும் வருகிறதா ? மனிதராகப் பிறந்த யாரும் சாகத்தான் வேண்டும். அது முதுமையினால் மட்டுமன்றே ! நோவினால் விபத்தினால் கூடத்தானே ! நாம் உண்ணும் உணவில் எத்தனை கேடுகள் உள்ளன தெரியுமா ?  வளிமண்டலத்தை என் சிறுவாய்ப்புகை மாசுபடுத்திவிடுமா ?  தொழிற்சாலைகளின் புகைப்போக்கிகள் வெளியிடும் நஞ்சுகள் கொஞ்சமா ?' என்று வாதிடுபவர்கள் உள்ளனர். அவர்கள் எதைச் சொன்னாலும் குதர்க்கமாக எதிர்த்தடிக்கும் கலகக்காரர்கள். அவர்களிடம் தர்க்கவியல் சுவாரஸியங்கள் உண்டே தவிர பின்பற்றக் கூடிய நல்லுபதேசங்கள் ஒன்றுமில்லை.

அதனால் புகை விடுவதை விடுக ! நெடுநாள் வாழ்க !

12 comments:

 1. பயனுள்ள பதிவு.

  ReplyDelete
 2. நல்ல பதிவு நண்பரே. இன்று புகை அல்லது குடி இந்த இரண்டில் ஒரு பழக்கமாவது இல்லாதவர்கள் வெகு குறைவே.இது வருத்த பட வேண்டிய ஓர் விஷயம் தான்

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு அண்ணே..
  அப்ப குடிக்கலாமா?

  ReplyDelete
 4. //பொது இடங்களில் எந்தக் கூச்சமுமில்லாமல் விட்டேற்றியாகப் புகைப்பவன் தன் வாயிலிருந்து வெளியேறும் புகை நேரடியாக ஒரு குழாய் மூலம் வளிமண்டலத்தின் வேற்றடுக்குக்குப் போய்விடுவதாக எண்ணுகிறான். அது அவனையும் ஒரு திருஷ்டிச் சுற்று சுற்றிவிட்டுப் பக்கத்து நபர்களின் நுரையீரல்களுக்கும் பகுதி பகுதியாக நுழைந்து அழிக்கிறது என்று எண்ணுவதே இல்லை.//

  பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங்கை அழகாக சொல்கிறது இந்த வரிகள். நல்ல பதிவு.

  நான்கூட முன்பொரு பதிவு எழுதினேன். இதே சப்ஜெக்ட்தான்.
  http://chithran.blogspot.com/2010/03/blog-post.html

  ReplyDelete
 5. //அதனால் புகை விடுவதை விடுக ! நெடுநாள் வாழ்க//
  பயனுள்ள பதிவு கவிஞரே

  ReplyDelete
 6. திருந்தினால் பரவாயில்லை...

  ReplyDelete
 7. புகை பிடிப்பவர்கள் தங்கள் உடலை மட்டும் கெடுத்துக் கொண்டால் பரவாயில்லை. சுற்றிலும் உள்ளவர்களும் சேர்ந்துதான் பாதிக்கப் படுகிறோம். முக்கியமாக குழந்தைகள். அவர்களாகப் பார்த்து திருந்தினால் உண்டு.

  ReplyDelete
 8. கலாநேசன், மோகன்குமார், கண்ணன், சேலம் தேவா, இளங்கோ ! பாராட்டுகளுக்கு நன்றிகள் !

  சித்ரன் ! உங்கள் பதிவை வாசிக்கிறேன்.

  வினோ ! குடிக்கக் கூடாது. ஒருவன் தன்னுடைய முழு ஆற்றலுக்கு உரிய உயர்வை ஏன் இன்னும் அடையாமல் இருக்கிறான் என்று பார்த்தால் அவன் அநேகமாகக் குடியடிமையாகவே இருப்பான்.

  ReplyDelete
 9. நல்ல பதிவு நண்பரே. இன்று புகை அல்லது குடி இந்த இரண்டில் ஒரு பழக்கமாவது இல்லாதவர்கள் வெகு குறைவே.

  ReplyDelete
 10. சிறுவயது ஆராய்ச்சி மனப்பான்மையைச் சுவைபடத் தந்திருக்கிறீர்கள். புகைத்தலைப் பற்றியதொரு கவிதை போல, கீழ்க்கண்ட தொடர்கள் அமைந்திருக்கின்றன:

  திரையரங்கின் இடைவேளையில் வெளிப்படும் நபர்களை
  மெனக்கெட்டு ஊன்றிக் கவனித்தேன்.
  எல்லாரும் எடிட்டிங், ஒளிப்பதிவுக் கோணங்கள் வரை
  அலசிப் பேசுகிறார்கள்.
  மற்றும் புகைக்கிறார்கள்.

  ஒரு பேருந்து நிறுத்தத்தில்
  ஐந்து நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியவன்
  நிச்சயம் புகைக்கிறான்.
  புகைக்கும் பழக்கமுள்ளவன்
  கழிப்பறையில் நுழையும் ஒவ்வொரு தடவையும்
  கழிகிறானோ இல்லையோ ஆழ்ந்து புகைக்கிறான்.
  யோசிக்கிறவன் புகைக்கிறான்.
  பேசிக்கொள்பவர்கள் புகைக்கிறார்கள்.
  இதை வாசிக்கிற நீங்கள் கூட புகைத்துக் கொண்டிருக்கலாம்.

  பொது இடங்களில் எந்தக் கூச்சமுமில்லாமல்
  விட்டேற்றியாகப் புகைப்பவன்
  தன் வாயிலிருந்து வெளியேறும் புகை
  நேரடியாக ஒரு குழாய் மூலம்
  வளிமண்டலத்தின் வேற்றடுக்குக்குப் போய்விடுவதாக
  எண்ணுகிறான்.
  அது அவனையும் ஒரு திருஷ்டிச் சுற்று சுற்றிவிட்டுப்
  பக்கத்து நபர்களின் நுரையீரல்களுக்கும்
  பகுதி பகுதியாக நுழைந்து அழிக்கிறது.

  அதுசரி, புகைத்தலை விட்டுவிடக் கோரி உங்கள் அனுபவங்களை எழுதிவிட்டீர்கள். குடித்தலை விட்டுவிடக் கோரியும் அதற்கான அனுபவங்களை எழுதவேண்டாமா?

  ReplyDelete
 11. அண்ணாச்சி ! குடி அனுபவம் ஒரு துளி கூடக் கிடையாதே... நான் என்ன செய்ய ?

  ReplyDelete
 12. ஆதாரமில்லாத தகவல்கள்.

  இந்த தளத்திற்கு forces.org
  போய் உண்மை அறியுங்கள்

  சூரியன்

  ReplyDelete