Friday, August 13, 2010

ஏற்றுமதி

கர்நாடக மாநிலத்தில் தாது மண் கொள்ளை போய்க்கொண்டிருப்பது குறித்து அண்மைக் காலங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கொள்ளை தமிழ்நாட்டில் ஒரு செய்தியாகப் பரவும் முன்பே, சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னதாக, ஒரு கவிதையாக எழுதினேன். அந்தக் கவிதை தீம்தரிகிட இதழில் வெளியானது என்று ஞாபகம். ஓர் அரசியல் எதிரியின் முன் நகர்த்தப்படத் தேவைப்படும் காய் என்பதால் மட்டுமே இந்தக் கொள்ளை ஊடக அளவில் விவாதப் பொருளாகிறதே தவிர யாருக்கும் உண்மையான அக்கறை இருக்கிறதா என்பது கேள்விக் குறியே. ஆனால், கவிஞர்களுக்கு உண்மைக்கும் சத்தியத்திற்கும் அப்பாற்பட்டு எந்தச் செயல்பாடும் இல்லை. கவிதை வெளிவந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கவிதை பேசிய பிரச்சனை குறித்து யாருக்கும் கவனமோ அறிதலோ இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அதனால் அந்தக் கவிதையை மீண்டும் இங்கே தருகிறேன். 2006 ஆம் ஆண்டு வெளியான மண்ணே மலர்ந்து மணக்கிறது என்ற என் கவிதைத் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது.ஏற்றுமதி

நான் ஏற்றுமதியாளன்

பொருளாதாரத்தின் தூண்

ஏதாவது ஒன்றை

ஏற்றி அனுப்பிக்கொண்டே இருப்பேன்

எதையாவது ஒன்றை

எவனாவது ஒருவனுக்கு

விற்றுக்கொண்டே இருப்பேன்

என்னால் எதையும் விற்கமுடியாத அன்று

நான் இறந்துவிடுவேன்


ஆடைகளை

ஏற்றுமதி செய்து பார்த்தேன்

என்னைப்போலவே

பருத்திக்காடுகளும் விளைந்து களைத்துவிட்டன

தைத்துத்தைத்து

ஊசிகள் மூளையைப்போல மழுங்கிவிட்டன

நாள் பொழுது தட்பவெப்ப நிலைகளை இழந்து

உடல்கள் துவள்கின்றன


ஆனால், என்ன செய்வது !


பாவம்

தூங்காமல்

வேட்கையுடன் அலைகின்றன லாரிகள்


துறைமுகங்கள் காத்திருக்கின்றன

அங்கு

ராட்ஷசக் கப்பல்கள் நங்கூரமிட்டு

காலிக் கொள்கலன்களோடு

ஏங்கி நிற்கின்றன


வற்றிய நரியின் பசியோடு

வர்த்தகர் அழுகிறார்

என்னைத் தொடர்ந்து நச்சரிக்கிறார்


‘எதையாவது ஒன்றை

ஏற்றி அனுப்புஎன்கிறார்


ஒரு மாறுதலுக்காக

மிளகாய் ஏற்றுமதி செய்தேன்

உமது காரங்களை

உமது துக்கங்களின் வீரிய விதைகளை

தூர தேசங்களுக்கு

ஏற்றி அனுப்ப முயன்றேன்


நீங்கள் சிந்திக்கொண்டிருக்கும் கண்ணீரை

வேறு எங்கோ எவனோ

சிந்தட்டுமென்று

வெங்காயம் ஏற்றுமதி செய்தேன்


தோல் ஏற்றுமதி செய்தேன்

உமது மதலைகளுக்குப் பால் புகட்டிய

ஆநிரைகளைக் கொன்றுரித்து

உலர வைத்து இறுக்கித் தைத்து

ஏற்றினேன்


எதுவும் சரியில்லை


இறுதியாக

தாதுமண்ணை ஏற்றுமதி செய்கிறேன்


உங்கள் மூதாதைகளின்

வியர்வையும் உதிரமும் கலந்து

கனிமமாகக் கரைந்திறுகிய மண்ணுக்கு

நல்ல கிராக்கி


பூமியின் ஒரு பகுதியைத் தோண்டி

இன்னொரு பகுதிக்கு

அனுப்பிக்கொண்டே இருக்கலாம்


பூமிக்குத் துளை விழுமா ?

நல்ல கற்பனை


உமது வசிப்பிடங்கள்

சுரங்கங்களுக்குள் அமையலாம்


சுரங்கங்கள் வறண்டபிறகு

நான்

உங்களிடமிருந்து விடைபெறுவேன்

நீங்கள் மேலேறிவரும்

கயிற்றைத் துண்டித்துவிட்டு.

11 comments:

 1. கவிஞன் ஒரு தீர்க்கதர்ஷியாகவும் இருக்கிறான். இக் கவிதையில் துயரம் தேசத்தின் எல்லையை வகுத்துப் பேசவில்லை; எல்லார் தேவைக்கும் என்றில்லாமல் ஓரிருவர் அவக்காய்ச்சிக்குக் காவு என்று உலகில் எங்கும் நேர்கிற காயத்தின் குருதியாய்ப் பீறுகிறது. என்ன செய்ய, கவிஞன் முன்னறிவிக்கும் அறிவின் வழிபற்றாமல், 'அனைத்துக்கும் ஆசைப்படு' என்று கேளிக்கை ஈசல்களாய்க் குழிக்குள் மாய்கிறார்கள் மக்கள்.

  ReplyDelete
 2. //கவிதை வெளிவந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கவிதை பேசிய பிரச்சனை குறித்து யாருக்கும் கவனமோ அறிதலோ இல்லாமல் இருந்தது.//
  எல்லா விஷயங்களுமே அப்படித்தான் கவிஞரே.
  காதல் உட்பட. சரிதானே?

  ReplyDelete
 3. //தைத்துத்தைத்து
  ஊசிகள் மூளையைப்போல மழுங்கிவிட்டன//

  நல்ல சொல்லாடல்

  ReplyDelete
 4. அண்ணே... காசு தானே முக்கியமுன்னு யாரும் வேற எதையும் யோசிக்கறதே இல்ல... :( கண்ணு தெரியறதே இல்ல பல பேருக்கு..

  ReplyDelete
 5. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி...! சம்பந்தப்பட்ட குவாரிகளில் லாரியோட்டிய என் உறவுகள் சொன்ன கதைகளின் பாதிப்பால் இக்கவிதையை எழுதினேன். துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் கொட்டப்படும் ஒரு லாரி மண் அகன்ற பானைக்குள் ஒரு டீஸ்பூன் காபித்தூளைக் கொட்டுவது போலிருக்குமாம்.

  செல்வராஜ் ஜெகதீசன், கலாநேசன்... நன்றி !

  கொல்லான்... காதல் சொந்த விவகாரம் என்பதால் அப்படியிருப்பதில்லை என்று நினைக்கிறேன்.

  வினோ... ஆம்.

  ReplyDelete
 6. வார்த்தைகள் ஒவ்வொன்றும் உணர்வுகளையும் , வலியையும் நெச்சில் நிரப்பு செல்கிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் .

  ReplyDelete
 7. இந்தியாவில் உள்ள விவசாயப்பொருட்கள் குறித்து இறக்குமதியாளர்கள் தெரிவித்த தகவல்கள் எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. இங்குள்ள அத்தனை விபரங்களையும் விரல் நுனியில் வைத்துள்ளார்கள். உங்கள் வரிகள் படித்ததும் அத்தனையும் ஞாபகத்திற்கு வந்தது.

  ReplyDelete
 8. கவியின் பணியை செவ்வனே செய்து விட்டீர்.

  ReplyDelete
 9. பனித்துளி சங்கர் ! நன்றி

  ஜோதிஜி! ஒன்றை உடைமையாகக் கொண்டிருப்பவன் தன் நிலைப்பாட்டை விட்டுத் தருவதுதான் விற்பனை என்றாகிறது.

  அரைகிறுக்கன் ! கவிஞர்கள் எல்லாக் காலத்திலும் உற்று உணர்ந்தே வந்திருக்கின்றார்கள்.

  ReplyDelete
 10. ஒன்றை உடைமையாகக் கொண்டிருப்பவன் தன் நிலைப்பாட்டை விட்டுத் தருவதுதான் விற்பனை என்றாகிறது.

  உங்களை சந்திக்க ரமேஷ் வாய்ப்பு ஏற்படுத்திய போது என்னுடைய சூழ்நிலை அதை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.

  இடுகையில் பின்னோட்டம் என்பது அதுவும் ஒரு செய்திகளை கடத்தக்கூடிய சாதனம் தான் என்பதை நான் உணர்ந்து வைத்துள்ளதைப் போலவே நீங்கள் மேலே கொடுத்துள்ள பதில் என்னுடைய 18 வருட திருப்பூர் வாழ்க்கை கற்றுத் தந்ததை இத்தனை எளிமையாக சொன்ன உங்களை வணங்குகின்றேன்.

  நன்றி.

  ReplyDelete