Wednesday, July 21, 2010

நவீன கவிதையில் திருக்குறள் - பயனில சொல்லாமை

பயனில சொல்லாமை

சொற்களுக்குக் கூர்முனைகள் உள்ளன

அவை வாள்களை ஒத்தன

முகைகளையும் ஒத்தன

தோழனைச் சொல் அடையவில்லை எனில்

அங்கே இன்னும்

தோழமை தோன்றவில்லை

யாரும் கேளாச் சொற்களைப்

பேசும் வாய்

ஊமைக்கு எவ்விதம் உயர்ந்ததாம் ?

ஒரு சொல் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டால்

அங்கே சொல்லும் இல்லை

சொல்பவனும் இல்லை

சான்றோர்களின் சொற்கள்

அயராமல் பறக்கும் பறவைகள்

அவை தொடுவானம் தொடுவன


நலம் பயக்கும் சொற்கள்

நடுங்கும் குளிரில் உள்ளோர்முன்

நன்கு பற்றிய நெருப்புத் துண்டுகள்

நீதியில் மூழ்கி

அறத்தில் ஊறிய சொற்கள்

வெறும் தீர்ப்புகள் மட்டுமேவா ?

தாகித்திருப்போர் நாவில்

குளிர்ந்த துளியாய் இறங்கவே

உன் சொற்கள் முயலட்டும்

தவறிச் சொல்லாத சொல்

பயன் தவறாத சொல்

எத்துணை மகத்தான விதை

பிணைபட்டவனின் கட்டுகள் அறுபடும்

சொற்களைக் கூறுபவன்

விடுதலையின் தலைமகன்

3 comments:

  1. அருமையா இருக்கு சார் ஒவ்வொன்னும். நன்றி பகிர்தலுக்கு.

    ReplyDelete
  2. இதுதான் கேள்வி நடையில் கவிதையா . நல்ல இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. தோழனைச் சொல் அடையவில்லை எனில்
    அங்கே இன்னும்
    தோழமை தோன்றவில்லை // ஆஹா!
    ஞாயிறு நேரில் சந்திக்க திட்டமும் விருப்பமும்...

    ReplyDelete