Wednesday, July 28, 2010

மாறா நிரல்


மாறா நிரல்

 • ·

உங்களைப் போலவே நானும்

காலையில் அலுவலகம் கிளம்புகிறேன்.

என் நீலநிறப் புரவியை

அதன் தாங்கியிலிருந்து நகர்த்தி ஏறி அமர்கிறேன்.

கிளப்பியதும் அது எழுப்பும் ஒலியில்

என் கர்வத்தின் துகள்கள் சில

காற்றில் கலக்கின்றன !

மெல்ல அதன் வேகத்தை முடுக்கி

நெடுஞ்சாலை வந்தடைகிறேன்.

அங்கே

என்னைப் போலவே உங்களைப் போலவே

எல்லாரும்

தாங்கள் உடனே சென்று

பொருந்திக்கொள்ள வேண்டிய

பொந்து நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறார்கள் !

அவ்வமயம்

மளிகைக் கடைகளும் தேநீர்க் கடைகளும்

முதல்சுற்று வணிகம் முடிந்த களைப்பில்

மூழ்கியிருக்கின்றன.

நகரப் பேருந்துகள்

எந்த நிறுத்தத்திலும்

கழியவே கழியாத கூட்டத்தோடு

என் உடன்வருகின்றன.

பள்ளிகளின் கொடுவாய்களில்

பிள்ளைகள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்.

நொய்யலோரப் பாதை வருகிறது !

தொண்டையிலிருந்து திரட்டி

கையளவு எச்சில் துப்புகிறேன்.

விபூதியிட்ட சாக்குக் கடைக்காரர்

முதல் கோணிப்பையைத் தைத்துவிட்டு நிமிரும் தருணம்

நான் அவரைக் கடக்கிறேன்.

இது எப்பொழுதும் நிகழ்ந்தபடியிருக்கிறது !

சமணக் கோயிலருகில்

மேலுதட்டில்

வியர்வை அரும்ப விரையும் பெண்ணை

தினமும் எதிர்கொள்கிறேன்.

அவளைக் கண்டதும்

என் வண்டியின் வேகத்தை நான் தணிப்பதும்

என்னைக் கண்டதும்

தன் நடையின் வேகத்தை அவள் கூட்டுவதும்

நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

செத்த இரும்புகளால் ஆன சரக்கு ரயில் ஒன்று

நிலையத்தில் நிற்கிறது.

மேம்பாலத்தைக் கடக்கிறேன்.

முச்சந்தியில் எல்லா வாகனங்களையும்

மறித்துப் பின் அனுப்பும்

புதிய போலீஸ்காரியின் விதியை

எண்ணி எனக்குள் நகைக்கிறேன்.

என் அலுவலகம் வந்துவிட்டது !

இருக்கையிலமர்ந்ததும்

ஒலிக்கும் தொலைபேசியை எடுக்கிறேன்

‘சார்... சொல்லுங்க...!

13 comments:

 1. //இது எப்பொழுதும் நிகழ்ந்தபடியிருக்கிறது !//

  இது உங்கள் கவிதையின் சாரத்திற்கும் பொருந்தும்.

  அருமை.

  ReplyDelete
 2. நேற்று
  இன்று
  நாளை..
  பெரியதாக
  ஒன்றும்
  வித்யாசமில்லைதான்.

  ReplyDelete
 3. நண்பர் கொல்லான் !
  உங்கள் பின்னூட்டத்தின் வேகம் மின்னலைவிடவும் விரைவாக இருக்கிறதே !
  நன்றி !

  ReplyDelete
 4. இன்று தான் உங்கள் வலைப்பக்கத்தை கண்டேன். உங்களுடைய "காமக்கடும்புனல் " புத்தக வெளியீடு (விஜயா பதிப்பகம் - கோவையில்) விழாவில் உங்களின் உரை (கவிதை வாசிப்பு) என் மனம் முன்னே வருகிறது. கவிதை மிக்க அருமை.

  ReplyDelete
 5. வருடங்கள் பல ஓடினாலும் சில வழிகள் ஒன்று தானே அண்ணே...

  ReplyDelete
 6. நல்ல இருக்கிறது .
  புகைப்படம் மிகவும் அருமை நீங்கள் எடுத்தா !?-

  ReplyDelete
 7. மதுமிதா... உங்கள் விமர்சனமும் ஒரு சின்ன சைஸ் கவிதைதான்.
  செம்மலர்... நன்றி.
  வினோ... ஆம்.
  பனித்துளி சங்கர்... புகைப்படம் இணைய உபயம்தான்.

  ReplyDelete
 8. இதை மாநகர் (அ) நகர்சார் கவிதை என்று சொல்லலாமா...

  ReplyDelete
 9. மிக அருமை. முதல் வரி கவிதைக்குள் சென்ற நான்
  //ஒலிக்கும் தொலைபேசியை எடுக்கிறேன் ‘சார்... சொல்லுங்க...!’//
  இந்த வரி கவிதையில் இருந்து விடுபட்டேன். நகர நெரிசலின் அனைத்தும் வெளிபடுத்துகிற அருமையான கவிதை இது கவிஞரே

  ReplyDelete
 10. சு. சிவக்குமார் ! நகர்மயமாகும் (Urbanization) நகரல்லாத ஊரில் நகர்வதைப் பற்றிய கவிதை எனலாம் .

  வேல்கண்ணன் ! தண்ணீரைப் போல தெள்ளத் தெளிவாக எழுதிப் பார்க்க முனைந்து எழுதப்பட்ட கவிதை இது. அம்முயற்சியில் சில கவிதைகள் இவ்வாறு எளிமையின் உச்சங்களை அடைவது உண்டு.

  ReplyDelete
 11. //அவளைக் கண்டதும்

  என் வண்டியின் வேகத்தை நான் தணிப்பதும்

  என்னைக் கண்டதும்

  தன் நடையின் வேகத்தை அவள் கூட்டுவதும்//

  இந்த இடத்தில் ஒரு சலனம் - சற்றே எட்டிப் பார்க்கிறது மனசு. வாசிக்கிற எமக்கும். அருமை!

  இது 'படிமங்கள்', 'உருவகங்கள்' இன்ன திருகுமுறுகல்கள் இல்லாத தெளிவின் முழுமை! உரைநடையிற் கூட வலிந்து திருகுமுறுகல் வலிப்புக்கண்டு, 'கவித்துவமாக எழுதி இருக்கிறேனாக்கும்' என்று வாய்கோணுகிறவர்களும் இருக்க, 'இந்தா கவிதை, பிடி!' என்னும் வல்லமை நிறுவல்.

  ReplyDelete
 12. மிக அற்புதம் மகுடேஸ்வரன். பல இடங்களில் புன்னகைக்க வைத்தீர்கள். பல விஷயங்களில் ஒவ்வொருவரும் தங்களை கண்டோம்.

  பத்து வருடங்களுக்கு முன் உங்களுக்கு கடிதம் எழுதி உங்கள் அழகான கையெழுத்தில் பதில் வந்தது.

  தற்போது அலுவலகத்தில் பணி புரிகிறீர்களா நண்பா?

  உங்கள் வலை பக்கம் அறிந்ததில் மிக மகிழ்ச்சி

  ReplyDelete
 13. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி..! உங்கள் பாராட்டுகளைவிடவும் வேறோர் பதக்கம் இப்புவிதன்னில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

  மோகன் குமார் ! மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete