Sunday, December 14, 2014

சிதையா நெஞ்சுகொள் !

எங்கு திரும்பினும்
உன் நெஞ்சத்தைச் சிதைக்கும்
சித்திரங்களைக் காண்பாய் !
அதிகாலை எழுந்ததிலிருந்து
விழிமூடி உறங்கும்வரை…

உன் உறக்கத்தைச் சேவல் கூவி
கலைக்காது
கொசுகடித்துக் கலைக்கும்.

அந்த வைகறை
கடந்த நாளின் புகையும் தூசும்
படிவதற்காக வாய்த்த பொழுது.

எழுந்து
குழாய் திருகி வாய்கொப்பளிக்கும் நீர்
உன் காலத்தின் கடைசிச்சொட்டாகவும் இருக்கலாம்.



நீ பிதுக்கும்
ஒவ்வொரு பற்பசைத்துளிக்கும்
பத்துப் பைசா
அயல்நாட்டு முதலாளிக்கு
இலாபமாய்ப் போகிறது.

காலைக்கடனை
முழுமையாய்த் தீர்க்க முடியாதபடி
கவலைச் சிந்தனைகள் உன்னைச் சூழும்.
அரைகுறையாய்த்தான் அது நிகழும். 

கொஞ்சம் நடைபயிற்சி செய்ய
வீதியேகுவாய்.
தளர்ந்த மூதாட்டிபோல்
இந்த நகரம் அயர்ந்திருக்கும்.

ஓரிரவுக்குள்
சுவரொட்டி முளைக்கும் சுவர்கள்
நம்நாட்டிலன்றி வேறெங்கும் இல்லை.

நடைமேடையில் துயில்வோர்
உன் காலத்திலும்
குறையாமல் இருப்பதைக் காண்பாய்.

உன்னை அறிந்திருந்தால்
நாய்கள் குரைக்காமல் பார்க்கும்.
நீ புதிதென்றால்
அந்தப் பாதை நாய்க்குச் சொந்தம்.
சிலது குரைக்கும்.
சிலது குரைக்காமல் வந்து கடிக்கும். 

பாதி நடையோடு
வீடு திரும்புவாய்.
அண்மையில் விலையேறிய
பால் வந்திருக்கும்.
தேநீர்போல் ஒன்று தரப்படும்.
திருப்தியாய்க் குடித்துக்கொள்ளவேண்டும்.
ஏனென்றால், அந்த அதிகாலையை
அதிருப்தியோடு தொடங்க
நீ விரும்பமாட்டாய்.

செய்தித்தாள் வந்திருக்கும்.
விளம்பரங்களுக்கு மத்தியில்
நீதான் செய்திகளைக்
கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும்.
எல்லாச் செய்தித்தாளும் ஒன்றுதான்.
நான் தினந்தோறும் செய்தித்தாள் வாங்குவதை
விட்டுவிட்டேன்.
மாதத்தில் முதல்நாள்மட்டும்
வாங்குவேன்.
அடுத்தநாள்
தேதியை மட்டும் மாற்றிப்போட்டு
அதையே படித்துக்கொள்கிறேன்.
இன்றுவரை
தினப்படி செய்திகளில்
பெரிதாய் ஒன்றும் வேறுபாடில்லை.

செய்திகளை ஊன்றிப்படித்தால்
சித்தபிரமை பிடித்துவிடும்.
அதனால்தான் நாமெல்லாரும்
மேலோட்டமாகச் செய்தித்தாள் படிக்கிறோம்.

குளித்துக் கிளம்புகிறாய்.
பிள்ளைகளும் பள்ளிக்குக் கிளம்புகின்றன.
இரத்த அழுத்தம் வந்ததற்கு
என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள்.
உண்மையான காரணம் ஒன்றுண்டு :
பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்பும் முயற்சியில்
பெற்றோர்களுக்கு வந்த நோய் அது.



மனைவி ஒரு பாட்டைப் பாடுகிறார்.
அது தற்காலத் திரைப்பாடல்போல.
பிடிக்காவிட்டாலும்
கேட்டுத் தொலைக்கவேண்டும்.
தலையை ஆட்டவேண்டும்.

எரிபொருள் குடிப்பதற்கென்றே
ஓர் ஈருருளி வைத்திருக்கிறாய்.
அதில் அலுவலகம் கிளம்புகிறாய்.

நீ உனக்காகப் பணியாற்றுகிறாயா
ஊருக்காகப் பணியாற்றுகிறாயா
என்பதே புரியாத ஓர் உத்தியோகம் அல்லது தொழில்.
அந்தத் தெளிவின்றி நகர்பவை
உன் நாள்கள்.

வருமானம் போதுமா,
மேலும் மேலும் புதுக்கடன்களா,
இறுதிக் காலத்திற்கு ஏதேனும்
உறுதி செய்துகொண்டாயா,
குழப்பத்தில் ஆழ்கிறாய்.

ஆறிய சோற்றை
மதியம் உண்கிறாய்.
அதிலொரு மிளகாய்த் துணுக்கைக்
கடித்துவிடுகிறாய்.
உன் தயிர்சோற்றை
அந்தக் காரம் ருசியாக்கிவிடுகிறது.
இப்படிச் சிறு சிறு எதிர்பாராச் சுவைகளால்தான்
நீ உயிர்ப்போடிருக்கிறாய்.

பின்மதியத்தில்
சுழித்தோடும் ஆறுகூடத் தேங்கி ஓடும்.
அரைமயக்க விழிகளோடு
வேலை பார்க்கிறாய்.

வீட்டுக்கு வருகிறாய்.
மற்றொரு தேநீர் கிடைக்கிறது.
மனையாளின் மஞ்சள் முகம்
களையாகத்தான் இருக்கிறது.
உன் இவ்வெண்ணம்
அந்தி வந்ததால் வந்ததில்லை என்று
நாங்கள் நம்புகிறோம்.

பிள்ளைகள்
பள்ளிக் கதைகள் சொல்கிறார்கள்.
நமக்குப் பிறந்த பிள்ளை
நம்போலில்லாமல்
என்னமாய்ப் பேசுகிறது என்று
வியப்புடன் பார்க்கிறாய்.

தொலைக்காட்சி காண்கிறாய்.
குடும்பத் தொடர்களில்
கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்
எல்லாரும் தோன்றுகிறார்கள்.
இவை குடும்பம்தானா
இல்லை குஸ்திக்கூடமா என்று
உனக்கே குழப்பமாக இருக்கிறது.

விவாத நிகழ்ச்சி பார்க்கிறாய்.
நமக்கென்று வாய்த்த அறிவுஜீவிகள்
வரிசையாக அமர்ந்து
உளறு உளறு என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைவிட்டால்
நானே நல்லாப் பேசுவேன்’ என்று நினைத்து அமர்த்துகிறாய்.

இரண்டு தோசைகளைப் பிய்த்துத் தின்கிறாய்.
அடுத்த மாதக் கூடுதல் செலவுகளுக்கு
என்ன செய்வது என்று யோசிக்கிறாய்.
உறங்கிப்போகிறாய்.

இதுதான் நீ.
உன்போல் இங்கே ஓராயிரம்.
எளிமையான நிரல்படி
வாழ்கின்ற பொதுஜனம்.
உன் நெஞ்சத்தில் என்னவுண்டு
யாரும் அறியமாட்டார்.
உன் சின்னஞ்சிறு விருப்பங்கள் என்னென்ன
எவர்க்கும் அக்கறையில்லை.
உனக்கே உன்னைத் தெரியுமா ?
தெரியாது என்றுதான் சொல்கிறாய்.

ஒரு தினம்
உனக்குப் பரிசுப்பொருள்போல்
தரப்படுகிறது.
அதைக் குரங்குபோல்
ஏன் நீ பிய்த்துப்போடுகிறாய் ?
அதன் ஒவ்வொரு நிமிடத்தையும்
ஆக்கபூர்வமானதாக்கு.
ஆக்கம் மறவா நெஞ்சுகொள் !

நடையில் வேகங்கூட்டு.
இந்தச் சோம்பலை நீக்கிச் சுழன்றுதிரி.
நகரும் திறன்
உள்ளவரைதான் நாம்
நலம்வாழ்கிறோம்.
காலில்லாத ஊர்வனவற்றிடம்
இடப்பெயர்வின் அருமை கேள்.
உடலைத் தேய்த்து தேய்த்து
இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் அவற்றோடு ஒப்பிட்டால்
நீள்கால்களால் நிலமளக்கும் நீ
எத்துணை கொடுப்பனையாளன் ?
ஊக்கம் மறவா நெஞ்சுகொள் !

உறவுகள் என்பவை
உன்னைச் சார்ந்திருப்பவை.
நீ அடிமரம்.
கிளைகளும் பூக்களுமான உன் உறவுகள்
உன்னால் செழிக்கின்றன.
அவை இன்பச்சுமை.
மகிழ்வோடு தாங்கிக்கொள்.
தியாகம் மறவா நெஞ்சுகொள் !  

பற்றாக்குறை எங்கோ இருக்கிறது எனில்
உன் ஆசைகளை ஆராய்ச்சி செய்.
உன் நுகர்வுகளைச் சரிபார்.
எல்லாம் சரியாய் இருந்தும்
பற்றாக்குறை என்றால்
உன் வரத்துகளைப் பெருக்கு.
இந்த உலகம்
உலுக்க உலுக்க எல்லாம் தரும்.
ஒன்றும் செய்யாதவனுக்கு
நிழல்மட்டுமே கிடைக்கும்.
வினையால் அணையும் நெஞ்சுகொள் !

உனக்கு உயிர் தந்தது.
நீர் தந்தது.
கனி தந்தது.
வாழ்க்கை தந்தது.
இந்த உலகுக்கு
நீ தரவேண்டிய கடமையும் உண்டு.
அதற்காகவேனும் சிதையா நெஞ்சுகொள் !



குறிப்பு : கடந்த டிசம்பர் 13, 2014 கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கில் பாரதி பாசறை நடத்திய ‘பாரதி திருவிழா - 2014’இல் மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் நிகழ்ந்த கவியரங்கில் பங்கேற்று வாசித்த கவிதை இது

.

Monday, December 8, 2014

கடன் என்ப...

உலக மொழிகள் சிலவற்றில் ‘பொய்’ என்ற வார்த்தையே இல்லையாம். அதற்கு என்ன அர்த்தம் ? அவர்கள் வாழ்க்கையில் பொய் என்பதே இல்லை என்று அர்த்தம். எதையும் மாறாக மறைத்துச் சொல்லவே மாட்டார்கள் என்று அர்த்தம். அதுபோல் நம் மொழியில் கடன் என்ற சொல் உள்ளது. அது ஆங்கிலச் சொல்லான லோன் என்னும் பொருளைத் தருவதன்று. கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்பதே பொருள். கடன் என்பதற்குக் கடப்பாடு, முறைமை ஆகியனவும் நம் தொன்மையான பொருள்கள். ஒருபோதும் அச்சொல்லுக்குத் தற்கால வழக்கில் வழங்கப்படும் கடன் என்ற பொருள் கிடையாது. என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்றால் என் கடமை என்றே ஆகும். திருக்குறளில் இடம்பெறும் கடன் என்னும் சொல் கடமையைத்தான் குறிக்கிறது.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்(கு)
உப்பாதல் சான்றோர் கடன்.
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
இவையாவும் கடன் என்னும் சொல்லைக் கடமை என்ற பொருளில் பயின்ற குறட்பாக்கள். நாம் கடன்பெற்று வாழ்ந்தவர்கள் அல்லர். கொடை தருவதைப் பண்பாடாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் கொடுத்தலும் பெற்றுக்கொள்வதும் எந்த நெருக்கடியுமற்ற இயல்பான நடத்தையாக இருந்தது. சுமார் இருபதாண்டுகளுக்கு முன்வரைகூட கடன் என்பது நம்முன் வைக்கப்பட்ட வாழ்க்கை நிர்ப்பந்தமாக இருக்கவில்லை. ஆனால், தற்காலத்தில் நிலைமையே வேறு.


அப்போதும் நமக்கு வீடுகள் இருந்தன. விவசாய நிலங்கள் இருந்தன. கல்வி பயின்றோம். வாழ்க்கைக்குப் பல்வேறு தேவைகள் இருந்தன. யாரும் கடன்பட்டுக்கொண்டிருக்கவில்லை. ‘அவங்களுக்குக் கடன் இருக்குதாமா...’ என்பது அதிர்ச்சிகரமான ஒரு கிசுகிசுப்பாகப் பரவிய நிலையும் இருந்தது. ஊரெல்லாம் கடன்வாங்கி வைத்திருப்பவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். சிறுசிறு கைமாற்றுகள் பண்ட மாற்றுகள் ஆகியவை இருந்தன. அதற்கே கடப்பாடுற்றவர்களாய் உறங்கமாட்டார்கள்.
நீங்கள் மாதச் சம்பளக்காரர்களாக, தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள். குடும்பத் தலைவர் அல்லது தலைவி. உங்களுக்கு வருமானம் வருகிறது. எல்லாரும் வளர்ந்து பொருள் செய்கின்றோராகத்தான் மாறுகிறோம். இந்த உலகத்தின்மீது நமக்குள்ள ஒரே அதிகாரம் நாம் ஈட்டிக்கொள்கின்ற நம் பணம்தான். அதைக்கொண்டு நம் தேவையை நிறைவேற்றுகிறோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியனவற்றுக்காகச் செலவிடுகிறோம். கல்விக்கும் மருத்துவத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் மனமகிழ்வுக்கும் நம் பணத்தைச் செலவிடுகிறோம். நம் சம்பாத்தியத்தில் செலவுபோக கணிசமாக மீதமாகிறது. அவற்றைச் சேமிக்கிறோம். சேமித்தவற்றைக்கொண்டு செயற்கரிய செயல் ஒன்றைச் செய்துகொள்கிறோம். அல்லது பற்றாக்குறையான காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறோம். வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் செல்கிறது. இது ஒரு வகை.
இன்று உங்களால் அதுபோல் வாழமுடியுமா ? கல்வியை விற்கிறார்கள். கல்விப் பருவத்திலிருந்தே நம்மைக் கடனாளி ஆக்குகிறார்கள். கற்றுவெளிவந்தபின் அந்தக் கல்வியைக்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும். சம்பாதித்தவுடன் முதற்கடமையாக பழைய கடன்களை அடைக்க வேண்டும். உணவுக்கு நிறையச் செலவாகிறது. போக்குவரத்துக்கு வாகனம் வேண்டும். அதைக் கடன்பட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். உடைகள் கொள்ளை விலை விற்கின்றன. அந்தச் செலவுகளையும் சமாளிக்கவேண்டும். உறைவிடம் என்றால் நமக்குச் சொந்த வீடு பூர்வீகத்தில் இருக்கும்தான். ஆனால் பூர்வீகத்தில் நாம் உயிர்வாழும் வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன. நகர் நாடிப் பிழைக்கிறோம். நகரத்தில் வீட்டுவாடகை கட்டுக்கடங்குவதில்லை. அங்கே இடத்திற்கும் கொள்ளைவிலை. வீடு வாங்கிக்கொள்வதன் மூலம் வாடகையையும் வரிப்பிடித்தத்தையும் மீதமாக்கிக்கொள்ளலாம் என்ற மாயையில் நம்முடைய ஒட்டுமொத்த எதிர்கால வருமானத்தை எழுதிக்கொடுத்து வீடு வாங்கிக்கொள்கிறோம். அடுக்குமாடி வீடு என்றால் வாடகைக்கு நிகரான பணத்தை ‘பராமரிப்பு மற்றும் இதர பிறவற்றுக்காக’ அழுவோம். நாம் உயிரோடிருப்பதற்கு வேண்டிய சிறுதொகைபோக மீதத்தொகையை அந்த வீட்டுக்காக இருபதாண்டுகள் தொடர்ச்சியாகக் கட்டுவோம். கட்டி முடித்தபின் நம் பொருளீட்டும் ஆற்றல் முற்றாக வடிந்திருக்கும். நம்மை நாமே கைவிடக்கூடிய பொருளாதார விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருப்போம். நீங்கள் அவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். ஒருபோதும் எதுகுறித்தும் கேள்வி கேட்க மாட்டீர்கள். அருகில் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தானா... நம் இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றனவா... நம் தலைமாட்டில் அணு உலைகள் தகிக்கின்றனவா... கல்விக்கொள்ளையா... மருத்துவத்தில் இரத்தம் உறிஞ்சுகின்றனரா... குடியடிமைத்தனம் பெருகிவிட்டனவா... எங்கும் ஊழலா... பெண்களும் குழந்தைகளும் எல்லாச் சீரழிவுக்கும் ஆளாகின்றனரா... எவனோ எப்படியோ போகட்டும். உங்களுக்கு மாதம் பிறந்தால் இஎம்ஐ கட்டியாகவேண்டும். தலையைக் குனிந்துகொண்டு வாழ்பவராய், சூடு சுரணையற்ற ஜென்மமாய், தன்னலவாதியாய் மாற்றப்பட்டுவிட்டீர்கள். இனி உங்களைக் குறித்து யார்க்கும் அச்சமில்லை. நீங்கள் முடித்துக்கட்டப்பட்டுவிட்டீர்கள்.
நீங்கள் கேட்கவேண்டும்... யார்வந்து யார்க்குக் கடன் கொடுப்பது ? கடன்படவேண்டியவர்களா நாம் ? என் அழகிய பொருள்பொதிந்த வாழ்க்கை கடன் துளையை அடைப்பதற்காக ஆயுள்முழுக்க அல்லாடுகின்ற ஒன்றா ? அப்படி என்ன வெங்காயத்தை நான் பெற்றுக்கொள்ளப்போகிறேன் ? என் கல்விக்கு எப்படி விலைவைத்தாய் ? என் உறைவிடத்துக்கும் அதன் நிழலுக்கும் எட்டாத விலை வைத்தவர் யார் ? என் தேவைக்கும் ஈட்டலுக்கும் பொருந்தாச் சமனை உருவாக்கியவன் எவன் ? நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் கேட்கமாட்டீர்கள். உங்களுக்குக் கடன் இருக்கிறது. மாதம் ஆயிரத்தைந்நூறு கட்டுவதுபோல் ஒரு பைக் வாங்கினீர்கள். ஒருதவணை பிசகட்டுமே. உங்கள் ஏழ்பிறப்புக்கும் மறவாத ஈன விசாரணையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். இத்தனைக்கும் மறுநாள் உரிய வட்டியோடும் தண்டத்தோடும் செலுத்தச் செல்கிறீர்கள்தான். கட்டாதபோது வண்டியை எடுத்துக்கொள்ளலாம் அவன். ஆனால், உங்கள் தன்மானத்தைக் குத்திக் குதறியெடுப்பதில் உங்களுக்குக் கடன் கொடுத்தவன் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சொற்களில்தாம் எத்துணை அதிகாரம் ? அடிமைபோல் உணரவேண்டும் நீங்கள். ஆனால் கமுக்கமாக இருந்துகொள்வீர்கள். இந்தச் செயலில் இருப்பவன்தான் நம் வங்கியாளன்.



என் நண்பர்களிடம் நான் சொல்கின்ற அறிவுரை இரண்டே இரண்டு: குடிக்காதே... கடன் வாங்காதே...! குடிப்பதில் மதுவும் புகையும் அடக்கம். குடியடிமை மீள்வதில்லை. தன்னைக் கொன்றுகொண்டிருக்கும் அவன் தன்னையே இழிவுபடுத்திக்கொண்டவன். தன்னின்பத் தருக்கன் அவன். உங்கள் நுரையீரலின் காற்றை உறிஞ்சும் திறனுக்குப் பெயர்தான் உயிர். பிராணமய. புகைப்பதன் மூலம் அந்தக் கருவியைப் பொசுக்குகிறீர்கள். குடியும் புகையும் உள்ளவர்கள் ஏதோ ஓரிடத்தில் தன்னை, தன்சார்ந்தவர்களை மொத்தமாகக் கைவிட்டுவிடுவார்கள். அவனைச் சார்ந்திருக்கும் உறவுகள் நரகத்தில் உழல்வோரே. இதைப் போதிக்கவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாரும் குடியடிமைகள். அதனால் அவர்கள் இதுகுறித்த மாற்றுப்பார்வை என்பதுபோல் நீட்டி முழக்குவார்கள். அவை பயனற்றவை. அடுத்து கடன் வாங்குவது. பத்தாயிரம் ரூபாய் ஓரிடத்தில் வாங்கிக்கொண்டு ஒருமாதம் கழித்து அதே பத்தாயிரமாகத் திருப்பிக்கொடுப்பது கைமாற்று. இது நம் வலுவுக்கடங்குகின்ற ஒன்று. சுற்றோட்டத்தில் சிறு நிகழ்வு. யார்க்கும் பாதிப்பில்லை. எங்கும் வழக்கமாக இருக்கின்ற ஒன்று. ஆனால், வட்டி என்கின்ற ஒன்று தோன்றுமிடத்திலும், நம் வாழ்க்கையின் பெரும்பகுதி தவணையாய் அடைக்கவேண்டிய பகாசுரக் கடனுக்கு இலக்காகும் இடத்திலும் நீங்கள் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொள்கின்றீர்கள். அங்கே நீங்கள் சுரண்டப்படுகிறீர்கள். கடன் என்ற மாயையில் விழுந்து ஏமாறுகிறீர்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கடன்பட்டு பத்து இலட்சத்துக்கு வீடு வாங்கினேன். இப்போது அந்த வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். எனக்கு எவ்வளவு இலாபம் தெரியுமா ? கடன்வாங்காதிருந்தால் இவ்வாய்ப்பை இழந்திருப்பேனே... இப்படிச் சொல்கிறவர்கள் ஏராளம். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் மிகப்பெரிய பொருளாதாரப் போக்குகளின் சிறுகண்ணிகள். 1998-இல் பத்து இலட்சத்துக்கு வாங்கிய வீட்டின் மதிப்பைத் தங்கத்தில் பாருங்கள். அப்போது பவுன் விலை ரூ. 3200. அந்தப் பத்து இலட்சத்துக்கு 312 பவுன்கள்/சவரன்கள் வாங்கியிருக்கலாம். இப்போது அவ்வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். இன்றைய பவுன் விலை ரூ. 20000 எனக்கொள்வோம். அந்த நாற்பது இலட்சத்துக்கு 200 பவுன்கள் மட்டுமே வாங்க முடியும். உங்கள் சொத்து மதிப்பு - சுமார் நூறு சவரன்கள் அளவுக்குக் காணாமல் போயிருக்கின்றது. எண்கள் பெருகிவிட்டனவேயொழிய மதிப்புயரவில்லை. ஒருவேளை அவ்வீட்டின் தற்கால மதிப்பு அறுபது இலட்சம் எனில் எந்த உயர்ச்சியும் ஏற்படவில்லை. எண்பது இலட்சம் என்றால் போட்ட முதலுக்குக் கொஞ்சூண்டு வட்டி கிடைத்திருக்கிறது. பெருந்தொகைக்குச் சொத்துகளை விற்பது அத்துணை எளிதன்று. உங்கள் ஒற்றைக் கையெழுத்தையோ அல்லது இசைவான ஒரு தலையசைப்பையோ வைத்துக்கொண்டு உங்கள் அசையாச் சொத்தைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் ஈனக்கூட்டம் ஒன்று அரசியற்பலத்தோடு ஸ்கார்பியோக்களில் திரிவதை அப்போதுதான் உணர்வீர்கள்.
அடுத்து 1991 முதல் 2010வரை மதிப்புயர்ந்ததுபோல் இனியும் ஆகும் என்றெண்ணாதீர்கள். 1975முதல் 1989வரை இந்நாட்டின் சொத்துகள் எந்த விலையுயர்ச்சியையும் பெரிதாகக் காணவில்லை. எல்லாம் அப்படியப்படியே கிடந்தன. கடந்த 2011க்குப் பிறகு தங்கம் வெள்ளி போன்றவற்றின் விலை தம் உயர்ச்சியைத் தக்கவைக்கமுடியாமல் சன்னஞ்சன்னமாகச் சரிந்துகொண்டிருக்கின்றன. இனி அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு இத்தகைய நிலையே நீடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? நிலத்தின் விலைகள் தடுமாறுகின்றன. நில வியாபாரிகள் ஒருபோதும் தங்கள் நிலங்களை இருப்பாக வைத்துக்கொள்ளமாட்டார்கள். நிலத்தை விற்று விற்று பணமாக்கிக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஏன் அவர்கள் விற்பது விலையேறுகின்ற ஒன்றாயிற்றே... வைத்துக்கொள்ளலாமே. மாட்டார்கள். அங்கே நீங்கள் இலக்காவீர்கள். வரிக்குப் பயந்து வீட்டுக் கடன்களை வாங்காதீர்கள். எண்ணெய்ச் சட்டிக்குள் விழப்பயந்து எரிக்குள் விழுவதைப் போன்றதுதான் அது. எழுபதாயிரம் எண்பதாயிரம் வருமானம் உள்ள உங்களால் ‘பத்தாயிரம் சேமிக்கிறேன்’ என்று சொல்ல முடியவில்லை என்றால் உண்மையில் நீங்கள் யார் ? இங்கே சம்பாதித்து எங்கோ எடுத்தெறிகின்ற ஊதாரியா ? வெறும் பணமாற்று நிலையமா ?
ஒவ்வொரு ஆயிரமாகச் சேமியுங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். முதல் ஒரு இலட்சத்தைச் சேர்க்கும்வரைதான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த இலட்சங்கள் எளிதில் சேரும். சேமிப்பின் ஆற்றலை உங்கள் செலவுகளின்மீது உணருங்கள்.
ஒவ்வொரு மாரடைப்புக்குப் பின்னால், ஒவ்வொரு விபத்துக்கும் காரணமான மனக்குழப்பத்திற்குப் பின்னால், ஒவ்வொரு உறவுப் பிரிவுக்கும் பின்னால், ஊர்ப்பெயர்வு தேசப்பெயர்வு இடப்பெயர்வு அவமானம் தற்கொலை ஆகியவற்றுக்கும் பின்னால் நிச்சயமாக ‘ஒரு கடன் தொல்லை’ இருந்திருக்கிறது. அது சிறிதோ பெரிதோ - அவரவர் தகுதிக்கேற்ற துன்பச்சுமை. தொழிற்கடனையும் குடும்பக்கடன்களையும் ஒன்றாகப் பாவிக்காதீர்கள். இரண்டின் அளவீடுகளும் வெவ்வேறு. தொழிற்சாலைகளை இழுத்துப் பூட்டியபின் சேதாரமில்லாமல் வெளியேறுகின்றவர்கள் முதலாளிகள். முதற்கடனை வெற்றிகரமாகக் கையாண்ட மயக்கத்தில் அடுத்த கடனுக்கும் போகாதீர்கள். அடுத்தடுத்த ஒன்றில் வசமாகச் சிக்கிக்கொள்வீர்கள். சூடுபட்ட பூனையாகத் தள்ளியிருங்கள் !
இந்த நிமிடமே என் கடனைத் தீர்க்க முடியும் என்ற நிலையில் கடன் வாங்கலாம். எனக்கும் சிறிய வீட்டுக்கடன் உண்டு. வீட்டுக்கடன் என்றால் என்ன என்று உணர்வதற்காகவே அதை வாங்கினேன். அதுவே தவறு, மடத்தனம் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஆனால், அக்கடனை இந்த நிமிடம் என்னால் தீர்த்துக்கொள்ளவும் முடியும். எனக்குக் கடனட்டை இல்லை. கைப்பேசியொன்றைக் குறிப்பிட்ட வங்கிக் கடனட்டையைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாகப் பத்து விழுக்காடு தள்ளுபடி என்பதற்காக விளையாட்டுப்போல் கூட்டாளியின் கடனட்டையில் வாங்கிக்கொண்டேன்.
வேறு வழியே இல்லை என்றால் - நாம் பட்டுள்ள கடனை அந்தக் கணமே முறித்துக்கொள்ள முடியும் என்ற வலிமையான இடத்தில் நீங்கள் இருந்தால் - உங்கள் தேவைக்குச் சிறு பகுதியாக மட்டுமே கடன் வாங்குங்கள். அதை நீங்கள் நிர்வகிப்பீர்கள். வீட்டுக் கடனே என்றாலும் மூன்றில் ஒருபகுதிக்கு மட்டுமே கடன்படுங்கள். எண்பத்தைந்து விழுக்காடுவரை என்பதெல்லாம் வேண்டா. வளர்ந்த நாடுகளில் வீடுகள் என்பவை மதிப்பிழந்த சொத்துகள். சொல்வதற்கு இன்னும் ஓராயிரம் உள்ளன. பிறிதொரு நாள் மேலும் சொல்கிறேன். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று செய்வான் வினை - குன்றின்மீதிருந்து யானைப்போர் காண்பதைப்போன்றது நம் கையிலுள்ள பொருளைக்கொண்டு செய்கின்ற வினை. 

பின்குறிப்புகள் : 

1. 
இரண்டு இலட்சத்துக்கு வாங்கியது இருபது ஆகலாம். நாற்பதுகூட ஆகலாம். பத்துக்கோடி ஆகியிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஆகும் என்றால் அம்பானி எண்ணெய் சுத்திகரிக்க மாட்டார். அம்பத்தூரில் வாங்கிப் போடுவார்.  கொங்கு பகுதிகளில் மின்வெட்டால் எல்லாச் சொத்துகளும் விலையிறங்கின. 2000-இல் வாங்கிய இடம் ஒன்றை இன்றும் விற்கமுடியாத நிலையுள்ளது.

2. 1991 முதல் 2010 வரை ஏறிய விலையேற்றத்தின் மனப்பதிவுகளை மக்களிடமிருந்து அகற்றுவது பெரும்பணியாகத்தான் இருக்கும்போலுள்ளது. அந்த விலையேற்றம் மதிப்பேற்றம் இல்லை என்பதையும் பதிவில் விளக்கியுள்ளேன். எல்லார் உள்ளத்தையும் அரம்போன்று அறுத்துக்கொண்டிருப்பது நிலத்தின் விலையேற்றம். அந்த நிலத்தை சென்ட் முந்நூறு ரூபாய்க்கு விற்றுச் சென்ற குடும்பமும் அதை ஏதோ ஒரு கடனுக்காகத்தான் விற்றிருக்கும். அக்குடும்பத்தினர் நிலையை நினைத்துப் பார்க்கலாம். அவர்களும் இன்றும் அருகிலேயேதான் இருப்பர். ஆனால், அப்படியெல்லாம் சிந்திக்கமாட்டோம். நம் அக்கறைகளை வேறாக மாற்றிவிட்டார்கள். அடிபட்டுத் துள்ளத் துடிக்கச் சாகக் கிடப்பவனைப் பார்த்தும் பாராததுபோல் போகும்படி ஆக்கியவை நம் பொருளாதாரப் போக்குகள். கடன் அடைக்க வேண்டும். சம்பாதித்து நிலம் வாங்கிப் போடவேண்டும். உண்மையில் நாம் அத்தகைய கொடூர நெஞ்சத்தினர் அல்லர். ஆனால் நம்மையே அப்படி ஆக்கிவிட்டார்கள்.

Wednesday, July 9, 2014

உயிர்பெறும் திருப்பூர்


ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழகத் தொழில்நகரம் திருப்பூர். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் கடலுக்கு அப்பால் தொடங்கிய இந்தச் சுணக்கம் அத்தோடு நின்றுவிடவில்லை. அடுத்த ஆண்டுகளில் சாயப்பட்டறைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பாக மற்றொரு வடிவம் எடுத்தது. இடையில் உற்பத்திக்கான ஆற்றல் ஆதாரமான மின்சாரம் பகலைப் பாதியாய் முடக்கியது. ஆடை உற்பத்தித் தொழிலின் கச்சாப் பொருளான நூல்விலை சரசரவென்று ஏறியபடி இருந்தது. போட்டி நாடுகள்மீது வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதுமோகம் தோன்றத் தொடங்கியது. வங்கிகள் திருப்பூர்த் தொழிலுக்கு விரித்திருந்த வரவேற்புப் பந்தலை அவசர அவசரமாகப் பிரித்தன. தொழிலாளர் பற்றாக்குறை தலைவிரித்தாடத் தொடங்கியது.

‘திருப்பூருக்கு பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றபோது ஆள்கள் தேவை என்னும் விளம்பரங்களையே அதிகம் பார்த்தேன்’ என்று ஜெயலலிதா ஒருமுறை குறிப்பிட்டுச் சொன்னார். பெரிய நிறுவனத்தினர் அறுபது எழுபது கிலோமீட்டர்கள்வரை பணியாளர் பேருந்துகளை இயக்கி தொழிலாளர்களை ஏற்றிவந்து நிலைமையைச் சமாளித்தனர். வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை நாடி மெல்ல மெல்ல வரத் தொடங்கினர். எண்பதுகளின் இறுதியில் தொடங்கி 2006வரை கொடிகட்டிப் பறந்த திருப்பூர்ப் பின்னலாடை ஏற்றுமதித் தொழில் இன்று கறாரான சுயபரிசீலனைக் கட்டத்தில் இருக்கிறது.

விவசாய விளைபொருளான பருத்தியைக் கொள்முதல் செய்து பதமாக்கிப் பக்குவப்படுத்தி நூலாக நூற்கிறார்கள். இந்த நூற்கும் செயல் ஸ்பின்னிங் மில்கள் எனப்படுகிற பெருங்கூடத் தொழிலாக மாறியிருக்கிறது. இத்தகைய நூற்பாலைகளிடமிருந்து நூற்கண்டுகளைக் கொள்முதல் செய்யும் திருப்பூர் பின்னலாடைத் துறை அவற்றைத் துணியாக நூற்றுச் சலவை செய்து, சாயமேற்றிப் பல்வேறு பதச்செயல்முறைகள்மூலம் பண்படுத்துகின்றனர். அவ்வாறு பெறப்பட்ட துணியுருளை ஆடை உற்பத்தியாளரின் தொழிற்கூடத்தில் துண்டு துண்டுகளாய் வெட்டப்பட்டு நாம் அணிகின்ற டிசர்ட்-ஆக, டாப்ஸாகத் தைக்கப்படுகிறது. திருப்பூர்ப் பகுதியில் நடக்கின்ற தொழில் இதுதான்.

ஆடை உற்பத்தித் தொழிலின் கச்சாப் பொருளான பருத்தி, மனித நாகரிக வரலாற்றோடு தொடர்புடையது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் வளரும் பணப்பயிர் இது. பலபோக சாகுபடி தரவல்லது. தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் நலிவடைந்ததும் பருத்தி விளைச்சல் குறைந்தது. பருத்திக்கொள்முதலுக்கு நாம் வடமாநிலங்களையே பெரிதும் நம்பியுள்ளோம். பருத்தி விவசாயமும் இரசாயன உரங்களை நம்பியே நடக்கிறது. மிகை மற்றும் குறை விளைச்சலுக்கு ஏற்பப் பருத்தி ஏற்றுமதியை அனுமதிப்பதும் மறுப்பதுமான நிலையில் அரசாங்கம் உள்ளது. கச்சாப் பொருள்களை அப்படியே ஏற்றுமதி செய்வதைக்காட்டிலும் அவற்றைப் பயன்படுத்தி மதிப்பேற்றப்பட்ட உற்பத்திப் பொருளாக ஏற்றுமதி செய்வதையே கருத்தில்கொள்ளவேண்டும். பருத்தி வரத்தின் இந்த ஊசலாட்ட நிலைமை ஆடைத் தொழிலின் முதல் நிர்ணய காரணியாக மாறியிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. சிறுதொழில் முனைவோர் இத்தொழிலில் நுழைய இயலாது. பெரும் முதலீடு கோரும் ஆலைத்தொழில் இது. திருப்பூர் சுபிட்சமாக இருந்தபொழுது நூற்பாலைத் தொழில், ஆடை உற்பத்தித் தொழில்துறையை மிகவும் நம்பியிருந்தது. நூல் விற்பனையில் நூற்பாலைகளிடையே வலுவான போட்டி நிலவியது. இந்தச் சிரமங்களால் நூற்பாலையினர் தம் தொழில்மீதே களைப்படைந்த செய்தியெல்லாம் உண்டு. திருப்பூரின் சிறு தொழிலதிபர்கூட தமக்கான நூல் கொள்முதலைப் பேராலைகளிடமிருந்து கடனாகவே பெறவல்லவராக இருந்தார். ரொக்கத்திற்குக் கொள்முதல் செய்யும்போது இயன்றவரை நூல்விலையை அடித்துப் பேசி வாங்கினார். அவருக்கான தேவையை நிறைவேற்ற நூற்பாலையின் விற்பனைப் பிரிவு தினமும் அவரை அழைத்துப்பேசி வாய்ப்பு கோரின.

திடீரென்று இந்தக் காட்சி மாறியது. சர்வதேச நிலைமைகளைக் கருத்தில்கொண்டு நூல்விலை ஏறத் தொடங்கியது. பருத்தி விவசாயிகள் ஏற்றுமதிக்கு அனுமதி கோரிப் பெற்றனர். நூலுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டது. கடனாகத் தந்து பிற்பாடு வசூலித்துக்கொண்டிருந்த நூற்பாலைகளிடம் திருப்பூர்த் தொழில் துறையினர் ரொக்கம் செலுத்திக் காத்திருக்க வேண்டியவர்களானார்கள். கேஷ் அண்ட் கேரி முறை நிர்ப்பந்தமானது. விலையேற்றத்தைக் கணித்து நூல் விற்பனையைத் தாமதித்தார்கள் என்ற கருத்தும் நிலவியது. தம் அணுக்கமான வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றவே நூற்பாலைகளால் இயலவில்லை. ஒரு ஆர்டரின் மதிப்பில் நாற்பது விழுக்காடுவரை நூல்கொள்முதலுக்கு உடனே முதலிட வேண்டிய நிலைக்கு திருப்பூர்ப் பின்னலாடை அதிபர் தள்ளப்பட்டார். இதனால் ஆரோக்கியமான பொருளாதாரத்துடன் இயங்கிய நிறுவனங்கள்கூட தள்ளாட்டத்தை, வங்கி நெருக்கடிகளைச் சந்தித்தன. கடன் நெருக்கடிகளால் இயங்கிய நிறுவனங்கள் கழுத்தறுப்புக்கு ஆளாயின.

நூல் வணிகத்தில் ஆடை உற்பத்தியாளரிடமிருந்த மேலதிகாரம் நூற்பாலை அதிபர்களின் கைக்கு மாறியது. இடையில் திருப்பூர்ப் பின்னலாடைத் தொழில் துறையின் மேல்வரிசை முதலாளிகள் பலர் நூற்பாலைகள் நிறுவி அவற்றுக்கும் அதிபர்களாக, பங்குதாரர்களாக ஆகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பின்னலாடைத் தொழிலுக்காகக் குரல்கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்த அவர்கள் வெளிப்படையாக மௌனம் சாதித்தனர். இந்த இடத்திலிருந்து திருப்பூர்த் தொழிலதிபர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது. சிறுதொழில் முனைவோர்கள் கேட்பாரற்றவர்கள் ஆனார்கள்.

இந்தக் களேபரமான காலகட்டத்தில்தான் திருப்பூருக்கு ஆர்டர்கள் வழங்கிய ஐரோப்பிய அமெரிக்க இறக்குமதியாளர்கள் நொடித்துப்போயினர். பெரும்பெரும் தொகைகள் வந்துசேராமல் நின்றுபோயின. இலட்சக்கணக்கிலான தொகையை முகம்பார்த்துத் தந்துசென்றுகொண்டிருந்த திருப்பூர், பணமின்றித் திரும்பும் காசோலைகளால் தடுமாறியது. சின்ன சின்ன கொடுக்கல் வாங்கல்களுக்குக்கூட அரசியல் கட்சிப் போர்வையில் உருட்டல் மிரட்டல்கள் அரங்கேறின. டெபிட், க்ரெடிட் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம்கூடத் தெரியாத ஒரு கான்ஸ்டபிள் தகராறு முற்றிய இருவருக்கிடையே மேதாவியாய்ப் பஞ்சாயத்து செய்யவேண்டியவரானார்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அதற்கடுத்த ஆறு மாதங்களும் உறுதி செய்த ஆர்டர்களை முடிக்க இவ்வூர்க்காரர்கள் பட்டபாடுகளை எழுத்தில் வடிக்க இயலாது. உடனடியாகக் குஜராத்திலும் உலூதியானாவிலும் அலுவலகம் பிடித்து இங்கிருந்து பாரவுந்துகளில் துணிகளை ஏற்றி அனுப்பிச் சாயமிட்டுச் சமாளித்தார்கள். இந்தக் குழறுபடைகளில் கருநீலத்திற்குப் பதிலாக கறுப்புச் சாயம் தோய்த்து நட்டப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அதற்கடுத்த இடியாக இறங்கியது தீராத மின்வெட்டு. கடந்த ஏழெட்டு வருடங்களாகவே இதற்குப் பழகிப்போய்விட்டோமா அல்லது பாழ்பட்டுவிட்டோமா என்று பிரித்தறிய முடியவில்லை. முழுச் செயல்பாட்டில் பணியிருக்கும்போது, பாதி தைத்த நிலையில் மின்வெட்டானால் அந்த உடை எந்த அளவுக்குத் தரமதிப்பீட்டை நிறைவு செய்யும் ? இதனால் செலவுக்கணக்கில் தானாக பத்து விழுக்காடு உயர்ந்தது. சாவடியிலிருந்து டீசல் பிடித்துவந்து குறையக் குறைய ஊற்றி ஜெனெரேட்டரின் பாராமரிப்பையும் பார்க்கவேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். மின்வெட்டு நேர அறிவிப்பைப் பயன்படுத்தி பணிநேரங்களில் மாறுதல்களைக் கூடச் செய்து பார்த்தார்கள். பலனளிக்கவில்லை. இந்தப் பிரச்சனை வேலை நேரத்தில், வேலைத் தரத்தில், வேலையின் விரைவுவேகத்தில் கொடுமையான சுணக்கத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மற்ற தொழில் நகரங்களைவிட மூன்று மடங்கு வேகத்தில் வளர்ந்ததற்குக் காரணம் இங்கு எப்போதும் இருபத்து மணி நேரமும் பணி நடந்துகொண்டே இருந்ததுதான். முதல்முறையாக தொழிற்கூடங்களின் பணிநேரம் குறையத் தொடங்கியது.

பனியன் நிறுவனத்தில் செக்கிங் பணியாளாகச் சென்றுகொண்டிருந்த மல்லிகா கட்டிட வேலைக்குச் செல்லத் தொடங்கினார். பனியன் கம்பெனிக்குச் சென்றால் நிழலில் அலுங்காமல் பணியாற்றலாம், நேரத்திற்குச் சாப்பாடு, தேநீர். மல்லிகா அந்த வேலையை விடுத்து, கட்டிட வேலைக்கு வந்து வெயிலில் கட்டுமானத் தூசுகளில் வேலைசெய்ய முன்வந்தார். ஏன்?’ என்று கேட்டேன். ‘கம்பெனிக்குப் போனா ராத்திரி ஒன்பது மணிக்கு முன்னால வூட்டுக்கு வரமுடியல. அப்பப்ப வெடிநைட்டு வெச்சுச் செய்யச் சொல்றாங்க. சோறாக்கறதுக்கும் புள்ளங்களப் பார்க்கறதுக்கும் அஞ்சு ஆறு மணிக்குள்ளாற வூட்டுக்கு வந்துட்டாதான் பரவால்ல. கட்டட வேலைக்கி வந்தா அஞ்சரைக்கு வூட்டுல இருக்கலாம், பாருங்க. அதான் இந்த வேலைக்கு வந்துட்டேன்.’ என்று கூறினார். இந்த உரையாடல் நிகழ்ந்தது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன். இப்போது நிலைமையே வேறு. இந்த நொடிப்புக் காலத்தில் தம் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கமுடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உரிய இலாப விகிதமே இல்லாத ஆர்டர்களை எடுத்துச் செய்தவர்களும் இருக்கிறார்கள். தினமும் ஒன்று அல்லது ஒன்றரை ஷிப்டுகளை இயக்க முடிந்தால் அது ஆரோக்கியமான விஷயம்தான்.

’தமிழ்நாட்டில் ஊருக்கு நூறு பேர்களேனும் திருப்பூரை நம்பி இருக்கிறார்கள்’ என்று என் கவிதையொன்றில் குறிப்பிட்டு எழுதினேன். கடந்த இருபதாண்டுகளாக இந்நகரை நாடி வந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்ட குடும்பத்தினர் கணக்கிலடங்கா எண்ணிக்கையினர். இன்றும் குடும்ப அட்டை மாறுதல்வேண்டி தினமும் நூற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிகின்றன. நகரையொட்டிய புறநகர்ப் பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே சென்றது. தென் தமிழகத்தினர் மட்டுமன்று டெல்டாப் பகுதி மக்களும் வட தமிழகத்தினரும் திருப்பூரில் குடியேறி இவ்வூர்வாசிகளாகினர். கணவனும் மனைவியும் வயதுவந்த பிள்ளைகளும் பணிக்குச் சென்று பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சியை எளிதில் எட்டினர். தீபாவளி பொங்கலுக்குச் சொந்த ஊரை நாடித் திரும்பும் மக்கள்தொகையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியான இடத்தைத் திருப்பூர்தான் வகிக்கிறது. திருப்பூரை நோக்கி வரும் பேருந்துகளும் சரி, திருப்பூரிலிருந்து கிளம்பும் பேருந்துகளும் சரி - அமர இடமில்லாதபடி பயணிகளால் நிரம்பியிருக்கும்.

இந்த மக்கள்தொகைப் பெருக்கம் இவ்வூரை மாவட்டத் தலைநகராக்கவேண்டிய இடத்திற்கு இட்டுச் சென்றது. மாநகராட்சியாக விரிவுபடுத்த வேண்டி வந்தது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கோயம்புத்தூருக்கு உட்பட்ட நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த இவ்வூர், தொகுதி மறுசீரமைப்பில் தனி நாடாளுமன்றத் தொகுதியானது. அதாவது, மக்கள் விசையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உலகத் தொழில் நகரங்களின் வரைபடத்தில் தன்பெயரைப் பதிந்துகொண்ட இவ்வூருக்கு அரசாங்கத்தின் பார்வை கனிந்தபோது அது தன் தொழில்வளர்ச்சி வரலாற்றில் உச்சத்தில் நின்றிருந்தது.

இந்த மக்கள் நெரிசல் நகர்நாடித் தலைமறைவாக விரும்பும் குற்றவாளிகளுக்குப் பிடித்துப் போனது. தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் தேடப்படும் குற்றவாளிகள் திருப்பூர்ப் பகுதியில் அகப்படுவது வாடிக்கையானது. ஏனென்றால், பேருந்தை விட்டிறங்கியதும் நேராக ஒரு நிறுவனத்திற்குள் நுழைந்து வேலைசெய்ய இயல்கிற சூழல் இங்கு மட்டுமே நிலவுகிறது. எவ்வளவு பெரிய குற்றவாளியானாலும் அவன் சாதாரணத் தொழிலாளி வேடம் பூண்டு யாராலும் கண்டறியப்பட முடியாதவனாக இங்கு காலந்தள்ள வந்துவிடுகிறான். காவல்துறைக்கு இது பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. எப்படித் தேடித் துழாவி இவர்களைக் களையெடுப்பார்கள் என்பது சுவாரஸ்யமான கேள்வி. இப்போது காவல்துறை ஆணையரகம் அமைக்கப்பட்டு உரிய எண்ணிக்கையிலான காவலர்கள் நியமனம் பெற்றுவருகிறார்கள். நகரமெங்கும் பல்வேறு வகையான காவல் தணிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவ்வப்போது காணமுடிகிறது.

இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்புயர்வு ஏற்றுமதியை எங்கோ கொண்டுபோயிருக்கவேண்டும். ஆனால் நடந்தது என்ன ? எண்பதுகளில் சிலநூறு கோடிகளாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி தொண்ணூறுகளின் தொடக்கத்தில் முதன்முறையாக ஆயிரம் கோடிகளை எட்டிப் பிடித்தது. அதிலிருந்து வருடத்திற்கு ஆயிரம் கோடிகள் வீதம் ஏற்றுமதியின் மதிப்பு வளர்ச்சியின் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது. உச்சமாக 2005-2006 காலகட்டங்களில் ஏற்றுமதி மதிப்பு 13000 கோடிகளைத் தொட்டது. அதிலிருந்து அந்த இலக்கத்திலிருந்து குறைவதும் தொடுவதுமாகவே இருக்கிறது. ஆனால், முதலில் பதின்மூன்றாயிரம் கோடியைத் தொட்டபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சுமார் ரூ. 40 என்ற அளவில் இருந்தது. அதிலிருந்து இப்போது ரூ. 60/டாலர் என்ற மதிப்புக்கு சுமார் ஐம்பது விழுக்காடு உயர்ந்துகொண்டே சென்றபோதும் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பு 13000 கோடிகள் என்ற அளவில் அப்படியே இருக்கிறது. அதாவது மதிப்பளவில் அதேயளவு ஏற்றுமதி நிகழ்வதுபோல் தோன்றினாலும் சுமார் ஐம்பது விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி நிச்சயம் சரிந்திருக்கிறது. இடையில் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட அளவு மாற்றமும் உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியே இந்தத் தோற்றத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

சப்தகிரி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர் ரமேஷ் ‘பல பையர்கள் இந்திய ரூபாயில் விலையை உறுதி செய்கிறார்கள். இந்த ஏற்ற இறக்கம் அவர்கள் தரப்பிலும் கையைக் கடிப்பதால் தொகையைச் செலுத்துவதில் கால தாமதம் ஏற்படுத்துகிறார்கள். சமயத்தில் கணிசமாகப் பிடித்தமும் செய்துகொள்கிறார்கள்.’ என்கிறார். ‘டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நாற்பதாக இருந்தாலும் சரி… அறுபதாக இருந்தாலும் சரி… அது ஓரளவு நிலைத்த இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் ஏற்றுமதி இறக்குமதித் தொழிலுக்கே நல்லது. இந்த இயல்புக்கு மாறான சூழ்நிலைகளைக் கருதித்தான் நிறுவனத்தை விரிவுபடுத்தும் எண்ணத்தைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டுவிட்டேன்’ என்கிறார்.

திருப்பூர்த் தொழிலின் ஒட்டுமொத்த நிலவரத்தை அறிந்துகொள்வது அவசியமானது. இவ்வூரின் முன்னோடி ஏற்றுமதியாளர்களில் ஒருவரான யுவராஜ் சம்பத்துடன் பேசியபோது உலக நிலவரங்களைப் பட்டியலிட்டார். ’நம்முடைய முதல் போட்டியாளரான சீனாவில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி தளர்த்தப்பட்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். இது சீனாவில் உழைப்பாற்றலுள்ள இளையவர்கள் தொகை குறைந்துவிட்டதையே காட்டுகிறது. நம் தேசத்தில் இளையவர் எண்ணிக்கை சமவிகித எண்ணிக்கையில்தான் பேணப்படுகிறது. இதுவே நமக்கு நல்ல செய்தி. இந்த அடிப்படையில்தான் பருத்தி நூல்விலை இடையில் திடுமெனக் குறைந்தது. எல்லா நூற்பாலைகளுமே இருப்பை விரைந்து குறைத்துக்கொண்டுள்ளார்கள். இது ஆடைத்தொழில் துறைக்கு நல்ல வாய்ப்பு.’ என்றார். அவர் சொன்னது உண்மைதான். இடையில் நூல்கண்டுகளின் விலை பத்து விழுக்காடுவரை விலைவீழ்ச்சி கண்டது. ’நம்முடைய பிரச்சனை பேராலைகளாக நம் தொழிற்கூடங்களை அமைக்கவே முடியவில்லை. கம்போடியாவில் நான் பார்வையிட்ட தொழிற்கூடத்தில் சாதாரணமாக 3840 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். சீன முதலாளிகள் அங்கே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவ்வாறு நாமும் பல்வினைச் சீராலைகள் (Vertical Integrated Factory) அமைத்தால் இலட்சக்கணக்கான எண்ணிக்கையிலான ஆடைகளை சில நாள்களில் உற்பத்தி செய்து தரமுடியும்’ என்கிறார்.

திருப்பூர் போன்ற நகரங்களில் பணியுள்ள தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அருகிலுள்ள தொழிற்கூடத்திற்கு, நண்பர்கள் அதிகம் பணியாற்றும் தொழிற்கூடத்திற்கு, கூடுதலாக சம்பளம் கிடைக்கும் இடத்திற்கு - என அவர்கள் தேர்வு செய்து பணிக்குச் செல்கிறார்கள்.

கந்தன் மில்ஸ் என்ற பெயரில் சிறிய ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கியுள்ள சந்திரமோகன் என்ற இளைஞர் ஏற்றுமதி என்னும் வாய்ப்பைவிட உள்நாட்டுத் தேவைக்கென உற்பத்தியில் ஈடுபடுவதை விரும்புகிறார். ‘நமக்கென்று ஒரு நல்ல பிராண்ட்-ஐ உள்நாட்டுச் சந்தையில் உருவாக்கிவிட்டால் இந்தத் தொழிலில் பெரிய அளவில் சாதிக்கலாம்’ என்கிறார். ’வெளிநாட்டு ஏற்றுமதி மதிப்பான வாய்ப்புத்தான் என்றாலும் உள்நாட்டுச் சந்தை வாய்ப்பு அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. அமைதியாக அந்த வர்த்தகம் நடந்துகொண்டுதான் உள்ளது.’ என்பது அவர் கருத்து. உள்நாட்டுத் தேவைக்கான பனியன் ஜட்டி உற்பத்தியில்தான் திருப்பூர் தன் கணக்கைத் தொடங்கியது. எந்த நெருக்கடிகள் வந்தாலும் உள்நாட்டுச் சந்தையில் இவ்வூருக்கென்று தனி மதிப்பு இருக்கவே செய்கிறது.

திருப்பூர் என்னும் நகரம் ஒற்றைத் தொழிலை மையப்படுத்தி உருவான பன்முக நகரம். நெருக்கடிகள் அனைத்தையும் வென்று பழையபடி பயணிக்கக்கூடிய பண்பாட்டுச் செழுமை இங்கு வாழும் மக்களுக்கு உண்டு. இதற்கு முன்னேயும் பல சுணக்கங்களைப் பார்த்துப் பழகியவர்கள் இவர்கள். அவற்றோடு கடுமையாகப் போராடி வென்று காட்டியவர்கள். உணவுக்கான முதல் தேவை தீர்ந்ததும் மனிதர்கள் உடுத்தத் தேவையான பொருளைத்தான் உற்பத்தி செய்கின்றார்கள். உடை ஆடம்பரத் தேவையோ, நாகரிக - கால வளர்ச்சிப்போக்கில் காணாமற்போவதோ அன்று. இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் இவ்வூர் தன் முரண்கள் அனைத்தையும் களைந்து எவ்வூரும் எட்டமுடியாத உயரத்திற்குச் சென்றுவிடும் என்பது எங்கள் நம்பிக்கை !

Monday, November 18, 2013



இந்திய அணி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்றிருந்தது. ஸ்ரீகாந்த் தலைமையேற்ற அந்த அணிதான் இதுவரை அமைந்ததிலேயே மட்டமான அணி. 

டெண்டுல்கர் என்கிற பதினாறு வயதுப்பையனும் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது அவர் டெண்டுல்கர்தான். சச்சின் என்பதெல்லாம் பிற்பாடு வந்த பழக்கம். 

மதியம் விடுமுறை என்றதால் நண்பர்களோடு பள்ளியைவிட்டு வெளியேறிய எங்கள் கூட்டம் அருகிலிருந்த சாலிடர் டிவி கடையைநோக்கி ஓடியது. அங்கே பாகிஸ்தானுடன் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடிக்கொண்டிருந்தது.

ஸ்ரீகாந்த் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை எல்லாம் காற்றில் துழாவிக்கொண்டிருந்தார். ஏழெட்டு ஓவர்களுக்குப் பிறகு ஒரு ஃபோர் அடிப்பதுதான் அப்போதைய மரபு. ஐம்பது ஓவர்களில் 190 ஓட்டங்கள் என்பதை இலக்காக்கினாலே ’துரத்துவது கடினம்’ என்பார்கள் வர்ணனையாளர்கள். அந்த மாதிரி இலக்கைத்தான் பாகிஸ்தான் அணி நிர்ணயித்திருந்தது.

இலக்கைத் துரத்திய இந்திய அணி அடுத்தடுத்து முன்வரிசை வீரர்களை இழந்தது. ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். ஐந்தாறு விக்கெட்டுகள் சாய்ந்திருந்ததால் சாலிடர் டிவி கடைமுன் கூடிய கூட்டம் கலையத் தொடங்கியது. நானும் கிளம்ப எத்தனிக்கும்போதுதான் நண்பன் என்னை நிறுத்தினான். ‘இருடா... டெண்டுல்கர்னு புது ஆளு. எப்படி ஆடறான்னு பார்த்துட்டுப் போவோம்’ என்றான்.

நம்பிக்கையில்லாமல் பார்த்தேன். பாகிஸ்தான் அணியில் அப்துல் காதிர் என்று ஒரு சுழற்பந்து வீச்சாளர். கிலுகிலுப்பை ஆட்டுவது மாதிரி பந்தை எறிவதற்கு முன் ஒரு சுழற்று சுழற்றி வடகிழக்கிலிருந்து தென்மேற்காகப்போய்ப் பின் பந்து வீசுவார். டெண்டுல்கர் என்ற அந்த சின்ன பையன் அவர் பந்துவீச்சை எதிர்கொள்ள வந்து நிற்கிறார்.

வெற்றிக்கு அருகில் இருக்கும்போது பாகிஸ்தான் வீரர்கள் முகத்தில் ஓர் அலட்சிய பாவனை அப்பிக்கொள்ளும். மைதானத்திற்குள் சக வீரர்களுடன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்துப் பேசிக்கொள்வார்கள். அப்படி ஓர் அளவளாவலை முடித்துக்கொண்டு பந்து வீச வந்த அப்துல் காதிர் அந்தச் சின்ன பையனுக்குப் பந்து வீசத் தொடங்கினார்.

பந்து வீசிய அப்துல் காதிர் வானத்தைப் பார்த்தது மட்டும்தான் தெரிந்தது. ஆட்டம் நடந்தது பாகிஸ்தான் மண்ணில் என்பதால் பார்வையாளர் தரப்பில் திடுமென மைதானக் கூச்சல் அடங்கியது. நடுவர் ஆறு என்று இருகை உயர்த்தினார். கடைமுன் தொங்கிய முகங்களோடு பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. ‘பரவால்லயே. காதிர் பால்ல சிக்ஸ் அடிச்சிட்டாம்பா’ என்றார் ஒருவர்.

‘ஏதோ ஞாபகத்தில அந்தப் பந்தைப் போட்டுட்டேன்’ என்கிற தோரணையோடு அடுத்த பந்தை வீசினார் அப்துல் காதிர். டெண்டுல்கர் என்னும் அந்த இளம்வீரர் இறங்கி வீசினார் பாருங்கள், அதுவும் ஆறு. அடுத்தடுத்த பந்துகளும் ஆறும் நான்கும். இப்படி அந்த ஓவரில் சுமார் இருபத்தைந்து ரன்களைக் குவித்தார் டெண்டுல்கர்.

அப்போதெல்லாம் ஆட்டம் தொடங்கி எட்டாவது ஓவரில்தான் இருபத்தைந்து ரன்கள் என்பது அணியின் ஸ்கோராக இருக்கும். டெண்டுல்கர் ஒரே ஓவரில் வான வேடிக்கை காட்டியதால் இந்தியா ஜெயித்துவிடுமோ என்ற நம்பிக்கை தோன்றியது. அந்தப் போட்டியில் இந்தியா தோற்றது என்றாலும் டெண்டுல்கர் என்ற அந்தப் பெயர் காற்றின் திசையெங்கும் பரவத் தொடங்கியது.

'காதிர் வீசிய சுழற்பந்தில் டெண்டுல்கர் விட்ட முதல்சிக்ஸை லைவாகப் பார்த்த’ பெருமைக்குரியவர்களில் நானும் ஒருவன். அன்றிலிருந்து இரண்டாயிரத்து ஐந்துவரை டெண்டுல்கர் ஆடிய அனைத்து ஆட்டங்களையும் கண்கொட்டாமல் பார்த்திருக்கிறேன். அவர் ஆட்டங்களைக் கண்ணுற்ற தருணங்கள் நம் ரசனையின் மதிப்பான பொழுதுகள்.

இனி கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்கு அந்தப் பழைய மயக்கத்தை மக்கள் காட்டமாட்டார்கள். சச்சின் டெண்டுல்கரைப் போன்ற இன்னொருவர் அந்த வெற்றிடத்தை நிரப்பப் போவதும் இல்லை.

டெண்டுல்கர் விரைவில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்றுணர்ந்திருந்ததால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஆடிய ஆட்டங்கள் எதையும் பார்க்கவில்லை. அவர்பற்றிய செய்திகளிலும் நான் ஈடுபாடு காட்டவில்லை. அப்படி விலக்கிக்கொண்டதால்தான் இந்தப் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.

அறியாச் சிறுவனாக சர்வதேச அரங்கில் நுழைந்த அந்தச் சிறிய வீரர் எத்தனை மைதானங்களை, எத்தனை விளையாட்டுத் தருணங்களை, எத்தனை பந்தெறிவுகளை, எத்தனை ஏற்ற இறக்கங்களை, எத்தனை சவால்களை, எத்தனை வெற்றி தோல்விகளை - பார்த்திருப்பார்...! அந்தக் களத்திலிருந்து வெளியேறி வெளியே நிற்கவேண்டிய இந்தக் கணம் யாராலும் எளிதில் கடந்துபோகக் கூடியதன்று. அந்த மனத்திடத்தை அவர் பெறவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

Saturday, October 26, 2013

வலி மிகுதல் - இலக்கணத் தொடரின் மொத்தத் தொகுப்பு

தமிழ் இலக்கணம் தொடர்பான பதிவுகள் வரிசையில் இனி முக்கியமான பாடம் ஒன்றைச் சிறிய தொடராகவே எழுத உள்ளேன். வலி மிகுதல்’ பற்றியதே அது. 

அ.கி. பரந்தாமனார் எழுதியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு இன்னும் விரிவுபடுத்தி அல்லது எளிமைப்படுத்தி எல்லாருக்கும் புரியும்படி எழுதுவேன். 

வலி மிகுதல் மற்றும் வலி மிகாமை குறித்த தெளிவு ஏற்பட்டுவிட்டால் எழுதுவன எல்லாம் பெரிதும் பிழையற்றனவாகும். தலைவலி மிகாமல் பார்த்துக்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

வலி மிகுதல் என்றால் என்ன ? வல்லின மெய்யெழுத்துகள் வாக்கியக் கோவையில் இரண்டு சொற்களுக்கு இடையே கூடுதலாக மிகுதியாகி அமர்ந்துகொள்வது.

க்,ச்,ட்,த்,ப்,ற் - ஆகிய ஆறுமே வல்லின மெய்கள். டகர றகரங்களில் சொற்கள் இல்லாமல் இருப்பதால் இந்த இரண்டு எழுத்துகளும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் மிகுவது - மிகாதிருப்பது பற்றித் தெரிந்துகொள்வதே நம் நோக்கம்.

வலிமிகுதல் என்னும் மொழிப் பண்பு தமிழ் மற்றும் மலையாளம் தவிர்த்த வேறெந்த உலக மொழி இலக்கணங்களிலும் இல்லை என்று சொல்கிறார்கள்.


வலிமிகுதல் 1 :
---------------------
இனி நிலைமொழி, வருமொழி என்கிற பயன்பாடு அடிக்கடி இருக்கும். இரண்டு சொற்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுமிடத்தில் முதலில் உள்ள சொல் நிலைமொழி. அதை அடுத்து வருகிற இரண்டாம் சொல் வருமொழி. மல்லிகைப் பூ - என்பதில் முதலில் உள்ள மல்லிகை நிலைமொழி, அடுத்து வருகிற பூ வருமொழி. இதை நினைவில் வைத்துக்கொள்க. 

இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே வருமொழி வல்லினத்தில் இருந்தால் வலிமிகும். இது அடிப்படை.

ஆடித் தள்ளுபடி, போக்குவரத்துக் கழகம், கண்மணிப் பூங்கா. தமிழ்ப் பாட்டு, அழகுக் குறிப்புகள்.

உம்மைத் தொகையாக வரும் பெயர்ச்சொற்கள் எனில் வலிமிகாது.

சங்கப் புலவர்களில் கபிலர் பரணர் அறிவேன்.
தவறாமல் தினமணி கதிர் படிப்பேன்.

உம்மைத் தொகை என்றால் இரண்டு பெயர்ச்சொற்களையும் ‘உம்’ என்ற விகுதி சேர்த்துக் கருதுவது. சங்கப் புலவர்களில் கபிலரும் பரணரும் அறிவேன், தவறாமல் தினமணியும் கதிரும் படிப்பேன் - இவ்வாறு அவை பொருள் தருவன.


வலிமிகுதல் 2 :
---------------------
இரண்டு பெயர்ச் சொற்களுக்கிடையே எளிதில் வலி மிகும் என்று பார்த்தோம். அடுத்து, சொற்கூட்டங்களின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள சொல்லை அடுத்து வருவது வல்லினமாக இருந்தால் கட்டாயம் வலிமிகும். இந்த விதியைக் கேள்வியே இல்லாமல் பின்பற்றலாம். வலிமிகுதலில் எல்லாருமே தவறவிடும் இடம் இதுதான். அந்தச் சொற்களின் பட்டியல் இதோ :-

அ, இ, எ
அந்த, இந்த , எந்த
அங்கு, இங்கு, எங்கு
ஆங்கு, ஈங்கு, யாங்கு
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு, ஈண்டு, யாண்டு
அவ்வகை, இவ்வகை, எவ்வகை
அத்துணை, இத்துணை, எத்துணை
இனி, தனி
அன்றி, இன்றி
மற்ற, மற்றை
நடு, பொது, அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து, முன்னர், பின்னர்

இவற்றை அடுத்து வல்லினம் வந்தால் கட்டாயம் வலி மிக வேண்டும். நாம் இவற்றில் வலி மிகுதலைப் பெரும்பாலும் அனுசரிப்பதில்லை.

பாரதியார் ‘அங்கு சென்றான்’ என்றே எழுதுவாராம். அங்குச் சென்றான்’ என்று வலி மிகுவித்து எழுதுவதே சரி. நண்பர்கள் பாரதியிடம் ‘அங்கு சென்றான் என்றெழுதுவது தவறாயிற்றே... நீரே இப்படிச் செய்யலாமா ?’ என்று வினவுவார்களாம். ‘தவறுதான் ஓய்... அங்குச் சென்றான் என்றெழுதினால் நன்றாகவே இல்லை... அதனால்தான் அங்கு சென்றான் என்றே எழுதுகிறேன்...’ என்பாராம் பாரதியார்.

இவ்விடங்களில் வலி மிகுவித்து எழுதுவதே பிழையற்றிருக்கும். மிகவும் பல் கூச்சமெடுக்கும் பயன்பாடாக இருக்கிறதே என்று கருதினால் எழுதும் ஆசிரியரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல், அணுகுண்டு என்று பிழையாக எழுதுகிறோம். அணுக்குண்டு என்பதுதான் சரி.

வலிமிகுதல் 3
-------------------

இந்தத் தொடரின் அடுத்த இப்பதிவு சற்றே தாமதமானதற்குப் பொறுத்தருள்க. இந்த விளக்கங்களை எழுதியபின் பின்னூட்டங்களில்/உள்பெட்டியில் பதில் எழுதிக் கைவலி மிகுந்ததால் தள்ளிப் போட்டுவிட்டேன். பின்னூட்டங்களில் அவசியம் நான் விடையிறுத்தாக வேண்டிய இடங்களில் எப்போதும் தயங்காமல் எழுதியே வந்திருக்கிறேன். முடிந்தவரை அவ்வாறே செயல்படுவேன்.

குற்றியலுகரம் என்றால் என்னவென்று அறிவீர்கள்தாமே ? ஒரு சொல்லின் கடைசி எழுத்தாக வரும் கு,சு,டு,து.பு,று ஆகிய ஆறு உ’கர வல்லின உயிர்மெய்களும் உச்சரிப்பில் அரை மாத்திரையளவு தணிந்து ஒலிக்கும்.

க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று - என்று முடிகின்ற சொற்கள் யாவும் வல்லின மெய்யெழுத்தை அடுத்து வரும் குற்றியலுகரங்கள் என்பதால் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள் எனப்படும்.

இந்த வன் தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து க,ச,த,ப-கர வரிசையில் உயிர்மெய் எழுத்துகள் வந்தால் வலி மிகும்.

எடுத்துச் செல்.
முடித்துக் கொடு.
கற்றுக் கொள்.

படித்துப் பார்த்தான்’ என்பதில் வலி மிகுந்ததற்கும் - எழுந்து பார்த்தான்’ என்பதில் வலி மிகாததற்கும் இப்போது
உங்களுக்குக் காரணம் புரிந்திருக்கும்.

ன்று, ந்து, ண்டு - என முடிபவை மெல்லின மெய்யெழுத்துகளை அடுத்துவரும் வல்லின உகர உயிர்மெய்கள். இவற்றுக்கு மென் தொடர்க் குற்றியலுகரங்கள் என்று பெயர். மென் தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து வலி மிகாது.

உதாரணங்கள் :-

என்று சொன்னான்.
வந்து போனார்.

வலிமிகுதல் 4
-------------------

பெயரெச்சம் என்றால் என்னவென்று அறிவீர்களா ? முற்றுப்பெறாமல் முடிவுறாமல் எச்சமாகித் தொக்கி நிற்கும் ஒரு சொல் தன்னை அடுத்து ஒரு பெயரை வரவழைக்கும். அப்படி ஒரு பெயர்ச்சொல் வருவதால் மட்டுமே அது முற்றுப் பெறும். அத்தகைய சொற்கள் பெயரெச்சங்கள் எனப்படும்.

அடித்த கைகள், வெடித்த துப்பாக்கி, பணிந்த காவலன்.

மேலுள்ள இரண்டு சொற்களில் முதலில் உள்ள செயலைச் சொல்லும் சொல் தன்னை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தால் மட்டுமே நிறைவுறுவதைக் காண்கிறீர்கள் (அடித்த, வெடித்த, பணிந்த). இல்லையேல் பூர்த்தியடையாமல் எச்சமாகி அத்துவானத்தில் நிற்கும். அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்து முழுமையடைவது பெயரெச்சம்.

வினைச்சொல்லாக இருக்கையில் காலங்காட்டும்.

கடித்த பழம் - இறந்தகாலப் பெயரெச்சம்
கடிக்கின்ற பழம் - நிகழ்காலப் பெயரெச்சம்
கடிக்கும் பழம் - எதிர்காலப் பெயரெச்சம்

மேலுள்ள மூன்றும் வினையையும் காலத்தையும் காட்டுவதால் இவை தெரிநிலைப் பெயரெச்சங்கள் என்றும் வகைப்படும். இதில் கடித்த பழம் உடன்பாட்டுப் பெயரெச்சம். கடிக்காத பழம் என்று வந்தால் எதிர்மறைப் பெயரெச்சம்.

வினையையும் காலத்தையும் காட்டாமல் வெறுமனே பண்பை மட்டும் காட்டுகின்ற எச்சச்சொற்கள் உள்ளன. அவையும் தம்மை அடுத்துப் பெயர்ச்சொற்கள் வந்தால் மட்டுமே முழுமை பெறுவன. அவற்றைக் குறிப்புப் பெயரெச்சங்கள் என்று வகைப்படுத்துவர்.

சின்ன தம்பி
நல்ல குடும்பம்
அழகிய தமிழ்மகன்
புதிய பார்வை
இளைய தலைமுறை

மேலே காண்பவை பண்பை மட்டுமே சொல்லி அடுத்து ஒரு பெயர் வருவதால் மட்டுமே பூர்த்தியாகக் கூடிய குறிப்புப் பெயரெச்சங்கள்.

இப்பொழுது வலிமிகும் இடத்துக்கு வருகிறேன். மேலே விவரித்தபடியுள்ள பெயரெச்சங்கள் எவற்றுக்கும் - வினைச்சொல்லை அடுத்து வரும் பெயரெச்சங்கள் என்றாலும், அது மூன்று காலத்தைக் காட்டினாலும், உடன்பாடாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, வெறும் பண்பை மட்டுமே குறிக்கின்ற குறிப்புப் பெயரெச்சமாக இருந்தாலும் சரி - எங்கும் வலி மிகாது. எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள் - பெயரெச்சத்தை அடுத்து வலி மிகாது.

பாடாத தேனீ, ஓடாத குதிரை - போன்ற எதிர்மறைப் பெயரெச்சங்களில் கடைசி எழுத்து கெட்டு மறைவதும் உண்டு. பாடாத் தேனீ, ஓடாக் குதிரை - என. எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசி எழுத்து, ஈறு கெடுவதால் அது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று அழைக்கப்படும். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஆக பெயரெச்சங்களில் வலி மிகாது. உதாரணங்களின்படி - படித்த, அடித்த, நடக்கின்ற, ஓடுகின்ற, முடிக்கும், வெடிக்கும், உண்கின்ற, உண்ணாத, செய்த, செய்யாத, நல்ல, கெட்ட, தீய, சிறிய, பெரிய, பழைய, புதிய - எவ்வகைப் பெயரெச்சங்களிலும் வலி மிகா.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஒட்டுமொத்தமாக வகுத்துப் பகுத்துத் தொகுத்து கிளிப் பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

வலிமிகுதல் 5
-------------------
இத்தொடரின் முதல் பகுதியில் உம்மைத் தொகையில் வலிமிகாது என்று பார்த்தோம், நினைவிருக்கிறதா ?

பொதுவாக இரண்டு பெயர்ச் சொற்களுக்கு இடையே வலிமிகும் வாய்ப்பிருந்தால் மிகுவித்து விடுங்கள் (அது எப்படியும் சரியாகவே இருக்கும்) என்று ஆரம்பித்த நான் ஒரே ஒரு விதிவிலக்காக உம்மைத் தொகையைக் கூறினேன்.

காடுகரை என்பது உம்மைத் தொகை. காடும் கரையும் என்று இருபெயர்களுடன் ‘உம்’ சேர்த்து விரித்துப் பொருள் கொள்வதால் அது உம்மைத் தொகை என்றும் தெரிந்துகொண்டோம்.

மேலும் உதாரணங்கள் : பட்டிதொட்டி, செடிகொடி, இட்லி தோசை, இன்பதுன்பம், வள்ளி தெய்வானை, சேர சோழ பாண்டியர். இன்னும் சிலவற்றை நீங்களும் கற்பனை செய்து கண்டுபிடிக்கலாம். (அபூர்வமாக, ‘ஏற்றத்தாழ்வு’ போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்கிறார் அ.கி.ப.)

உம்மைத் தொகையைப் போலவே மேலும் இரண்டு தொகைகளைப் பார்க்கப் போகிறோம். உவமைத் தொகை மற்றும் பண்புத் தொகை.

தாமரைக்கண், மலைத்தோள் - இவற்றைத் தாமரை போன்ற கண், மலை போன்ற தோள் என விரித்துப் பொருள் காண்போம். முதலில் வருகின்ற சொல் அடுத்து வருகின்ற சொல்லுக்கு உவமையாய் இருப்பது. அச்சொற்கள் இரண்டுக்குமிடையில் போல, போன்ற என்று உவம உருபைத் தருவித்துப் பொருள் காண்பது வழக்கம். உவமைத்தொகை என்பது இதுதான். உவமைத் தொகைக்கு வலிமிகும்.

(உவமைத்தொகையைக் கண்ணாடி முன் நிறுத்தி இடவலம் மாற்றிப் போட்டால் அதுவே உருவகம் எனப்படும். மலைத்தோள் உவமைத்தொகை என்றால் தோள்மலை உருவகம்).

அடுத்து பண்புத் தொகை. உவமைத்தொகையில் முதற்சொல் உவமையாய் அமைந்ததைப் போல பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் அடுத்துள்ள சொல்லின் பண்பைக் குறிக்கும். அது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு (இன்னும் பல) என எவ்வொரு பண்பையும் குறிக்கக் கூடியது.

உவமைத்தொகைக்குப் ‘போன்ற’ என்ற உவம உருபை இடையிட்டுப் பொருள் விரித்ததுபோல பண்புத்தொகைக்கு ‘ஆகிய’ என்ற பண்புருபை இடையிட்டுப் பொருள் காண்பர்.
பண்புத்தொகையில் வலிமிகும்.

வெள்ளைத்தாள்
பொய்ப்பேச்சு
மெய்த்தன்மை

பண்புத்தொகையில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்ற வகையும் உண்டு. அதற்கும் வலிமிகும். நாம் அந்தப் பகுதிக்கே போக வேண்டியதில்லை. ஏனென்றால், முதலில் சொன்னதுபோல, இரண்டு பெயர்கள் காணப்பட்டாலே தயங்காமல் வலிமிகுவித்து விடுவோம்.

சுருக்கம் : உவமைத் தொகையிலும் பண்புத் தொகையிலும் வலிமிகும்.

வலிமிகுதல் 6
-------------------
வலிமிகுதல் பற்றிய இலக்கண அறிவைப் பெறுவதில் மிகவும் கடினமானது என்று கருதப்படக்கூடிய பகுதிக்குள் இப்போது நுழைகிறோம். அவ்வாறு கருதிக்கொண்டிருந்தது எத்தனை பெரிய மடத்தனம் என்று நீங்களே புரிந்துணரத் தக்க இடத்திற்குச் செல்லவிருக்கிறீர்கள். இலக்கணக் கதவுகள் உங்கள் கண்முன்னே பூவிதழ்களைப்போல் திறக்கக் காண்பீர்கள்.

மொழியில் சொல் என்பது அடிப்படையான ஓர் அலகு. தனித்துவமான துண்டு. ஒன்றுக்கு மேற்பட்டு, குறைந்தது இரண்டு சொற்களால் ஆவது சொல் தொடர் - சொற்றொடர். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றொடர்களால் ஆவதுதான் வாக்கியம். வாக்கியத்தின் வழியாக மொழி உச்சத்தை அடைந்து உலகை ஆள்கிறது.

வலிமிகுதல் என்பது இரண்டு சொற்களுக்கு இடையே நடைபெறும் செயல். சொற்றொடர் ஒன்றின் உள்ளுக்குள்ளே நடக்கும் மொழிவினைதான் வலிமிகுதல். வலிமிகுதலைப் பற்றிய பறவைப் பார்வையைப் பெற வேண்டுமானால் சொற்றொடர் குறித்த அறிதலையும் அதன் வகைகளையும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகைமைகளில் எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதை அறிந்தவுடன் இந்தப் பாடம் ஏறத்தாழ நிறைவு பெறவுள்ளது.

மாடு மேய்கிறது. மாடு ஒரு சொல். மேய்கிறது ஒரு சொல். மாடு மேய்கிறது என்பது சொற்களின் தொடர் வரிசை - சொற்றொடர். இந்தச் சொற்றொடர் மிக இயல்பாக எளிமையாக இருக்கிறது. ஆனால் மொழி என்பது இப்படி வெள்ளந்தியான எளிமையோடும் சாதாரண அம்சங்களோடும் இருப்பது மட்டுமில்லையே. அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நுண்மைகளையும் செறிவுகளையும் அறிவுப்புலத்தையும் தனக்குள் ஏற்றுச் செரித்து வன்மையடந்த ஒன்றல்லவா ?

முழுமையாகப் பொருள் காட்டும் எளிமையான சொற்றொடர்களால் ஆகியிருக்கும் தமிழ் மொழி, இன்னொரு புறத்தில், உள்மறைந்து தொக்கி நிற்கும் தன்மைகள் உள்ள சொற்றொடர்களாலும் உருவாகியிருக்கிறது. அத்தகைய சொற்றொடர்களை நாம் நம் அறிவைப் பயன்படுத்திச் சற்றே விரித்துப் பொருள் காண்கிறோம்.

மாடு புல் மேய்கிறது. இப்பொழுது ‘புல் மேய்கிறது’ என்கிற சொற்றொடரை மட்டும் கவனியுங்கள். புல் மேய்கிறது - முன் சொன்னதுபோல எளிமையாக அர்த்தப்படுத்தக் கூடாதல்லவா ? புல்லை மேய்கிறது’ என்று ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபை உடன் சேர்த்து விரித்துப் பொருள் கொள்கிறோம். மாடு புல்லை மேய்கிறது.

உள்ளுக்குள் ஒன்றும் தொக்கியிருக்காமல் வெகு இயல்பாய் எளிமையாய் அமைந்த சொற்றொடர்களைத் தொகாநிலைத் தொடர்கள் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொடர்’ என்பதும் உண்டு. மாடு மேய்கிறது மாதிரி.

உள்ளுக்குள் ஒன்று தொக்கி நிற்க (உருபு) அதைக்கொண்டு ஒரு சொற்றொடரை விரித்துப் பொருள்கொள்ள வேண்டிய, தொகுத்துப் பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர்களைத் தொகைநிலைத் தொடர் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொகை’ என்பார்கள். புல் மேய்கிறது மாதிரி.

தொடர்’ என்று சொல்லப்பட்ட எளிமையான சொற்றொடர் வடிவங்களிலும், தொகை’ என்று சொல்லப்பட்ட தொகுத்துப் பொருள்கொள்ளக்கூடிய சொற்றொடர் வடிவங்களிலும் - வலிமிகுமா மிகாதா என்பதைத்தான் நாம் இனி பார்க்கப் போகிறோம். 

வலிமிகுதல் 7
-------------------
இரண்டு சொற்கள் சேர்ந்தால் அது சொற்றொடராகிறது. அது எளிமையாய் வெளிப்படையாய் இருந்தால் தொகாநிலைத்தொடர் (தொடர்) என்றும், விரித்துப் பொருள் காண இடமிருக்குமானால் அது தொகைநிலைத்தொடர் (தொகை) என்றும் சென்ற பதிவில் புரிந்துகொண்டோம்.

முதலில் தொடரின் வகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

எழுவாய்த் தொடர்
விளித் தொடர்
வினைமுற்றுத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
வேற்றுமைத் தொடர்
இடைச்சொற்றொடர்
உரிச்சொற்றொடர்
அடுக்குத் தொடர்

எழுவாய்த் தொடர் -
கிளி பேசியது, புலி பாய்ந்தது - கிளி, புலி என எழுவாய் தொடங்கி நகரும் எளிமையான சொற்றொடர்கள். வலி மிகாது.

விளித் தொடர் -
தம்பி பார் - முதற்சொல் அழைக்கிறது அதாவது விளிக்கிறது. வலி மிகாது.

வினைமுற்றுத் தொடர் -
பாடியது பறவை - முதல் சொல் வினைமுற்றாக இருந்தும் மேலும் தொடர்வது. வலி மிகாது. (கண்டேன் சீதையை - புகழ்பெற்ற உதாரணம். வலிமிகும் தேவை இதற்கு இல்லை என்பதால் நமக்கு உதவவில்லை).

பெயரெச்சத் தொடர் -
வாடிய பயிர் - முதற்சொல்லாய் அமைந்த வினை, தன்னை அடுத்து பெயர் வந்து பூர்த்தியடையும்படி எச்சமாக இருப்பது. வலி மிகாது.

வினையெச்சத் தொடர் -
வரச் சொன்னான், பாடித் திரிந்தான் - முதற்சொல் வினையின் எச்சமாக நின்று அடுத்து ஒரு வினைச்சொல் வந்து பூர்த்தியடையும்படி இருப்பது. வலி மிகும்.

வேற்றுமைத் தொடர் -
இதைத் தனிப்பதிவில் விளக்குகிறேன்.

இடைச்சொற்றொடர் -
மற்றொன்று - மன், மற்று, கொல், போன்ற சொற்கள் பெயர் அல்லது வினைச்சொல்லுக்கு முன் வரும். மற்று+ஒன்று = மற்றொன்று. இதில் மற்று இடைச்சொல். ஒன்று என்னும் பெயருக்கு முன் வந்தது. செய்யுள்களில் அதிகம் பயன்பட்டது. வலி மிகாது. இப்போது தற்கால எழுத்து வழக்கில் இல்லை.

உரிச்சொற்றொடர் -
நனி பேதை, கடிகமழ் மலர், உறுபுகழ் - பெயருக்கோ வினைக்கோ உரியதாய் வரும் சொற்கள். வலிமிகாது. இதுவும் தற்கால வழக்கில் இல்லை.

அடுக்குத் தொடர் -
பாடு பாடு, போ போ, சிறு சிறு, சின்ன சின்ன - பொருள்தருகின்ற சொற்கள் அடுக்கி வருவது - வலி மிகாது.

சுருக்கம் : வினையெச்சத் தொடர் தவிர்த்த வேறெந்தத் தொடர்களுக்கும் வலிமிகாது. (வேற்றுமைத் தொடரை நாம் கடைசியில் பார்க்கவிருக்கிறோம்).

வலிமிகுதல் 8
-------------------
முந்திய பகுதியில் ‘தொடர்’களின் வகைகளையும் அவற்றில் வலி மிகும் மிகா இடங்களையும் பார்த்தோம். இனி ‘தொகை’களின் வகைகளையும் அவற்றில் வலிமிகும் மிகா இடங்களையும் பார்ப்போம்.

தொகை என்பது இரண்டு சொற்களுக்கு இடையே தொகையுருபு மறைந்திருப்பதால் நாம் விரித்துப் பொருள் கொள்வதற்கு இடம் தருவது. அது ஆறு வகைப்படும்.

1. வேற்றுமைத் தொகை
2. வினைத் தொகை
3. உவமைத் தொகை
4. பண்புத் தொகை
5. உம்மைத் தொகை
6. அன்மொழித் தொகை

சென்ற பதிவில் ‘தொடர்’ வகைகளில் வேற்றுமைத் தொடரை விளக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். அத்துடன் இந்தப் பதிவிலும் முதல் வகையான வேற்றுமைத் தொகையையும் நிறுத்தி வைக்கிறேன். வேற்றுமைத் தொடரையும் வேற்றுமைத் தொகையையும் சேர்த்துத் தனியாகக் கற்க உள்ளோம். மீதமுள்ளவற்றைப் பார்ப்போம்.

வினைத்தொகை -
ஊறுகாய், சுடுசோறு, ஆடுகளம் - இரண்டு சொல்லில் முதற்சொல் ஏவல் பொருள் தந்து முக்காலத்திற்கும் விரித்துப் பொருள் காணும்படி அமைவது. வலி மிகாது என்பதைத் தெளிவாக அறிவீர்கள்.

உவமைத் தொகை -
தாமரைக்கண், மலைத்தோள், பனிப்பார்வை - முதற்சொல் இரண்டாம் சொல்லுக்கு உவமையாக வந்து இடையில் போன்ற என்ற உவம உருபை இட்டுத் தொகுத்துப் பொருள் காண்பது. வலி மிகும்.

பண்புத் தொகை -
பொய்ப்பேச்சு, மெய்க்கருத்து, கறுப்புக்குதிரை - முதற்சொல் இரண்டாம் சொல்லின் பண்பை விளக்குவதாய் அமைந்து ‘ஆன, ஆகிய’ போன்ற பண்புருவுகளை இட்டுத் தொகுத்துப் பொருள் காணும்படி இருப்பது. வலி மிகும்.

உம்மைத் தொகை -
காடுகரை, குழந்தைகுட்டி, தாய்தந்தை - இரண்டு பெயர்ச்சொற்களோடும் உம் விகுதியைச் சேர்த்துத் தொகுத்துப் பொருள் கொள்வது. வலி மிகாது.

அன்மொழித் தொகை -
துடியிடை தோன்றினாள், எழுகதிர் கிளம்பிற்று - மேற்காணும் எவ்வகைக்குள்ளும் அடங்காமல் தொகுத்துப் பொருள் காண வேண்டியிருப்பது. துடிபோன்ற இடையை உடைய பெண் தோன்றினாள். எழுந்த கதிர் கிழக்கிலிருந்து கிளம்புகிறது. இதில் வலி மிகுவதற்கும் மிகாமைக்கும் இதுவரை கற்ற விதிகளின்படி உரிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளும்படி இருக்கும்.

தொகைகளின் தனித்த குணம் - இரண்டும் வினைச்சொற்கள் என்றால் அவற்றுக்கு இடையே தொகை தோன்றாது.

அடுத்த பகுதியில் இந்தத் தொடரின் க்ளைமாக்ஸ் !

வலிமிகுதல் 9
---------------------
வினையொன்றே உயிராகப்
பண்பு காத்திருந்தேன்.

என்மொழிக்குள் உன்மொழி
அன்றிலின் அன்மொழியானது.

வேற்றுமை தீர்ந்து
உவமையாய் முன் நின்றாய்.

‘உம்மைப் பிடிக்கும்’
என்றாய்.

‘உம்மைத் தொகை பிடிக்குமா ?’
என்றேன்.

‘உம்’ என்றாள்.
‘ஏன் ?’ என்றேன்.

‘உன்னையும் என்னையும்
அதுவே சேர்க்கிறது.
நீயும் நானும்
அதனால் இணைகிறோம்’ என்றாள்.

‘உம்’ என்னும்
உன் சம்மதச் சொல் கொண்டிருப்பதால்
எனக்கும் அதுவே பிடிக்கும்’ என்றேன்.

‘எனக்குப் பிடித்ததற்கு
இன்னொரு காரணமும் உண்டு’ என்றாள்.

‘என்ன ?’ என்றேன்.

‘இணைப்பில் வலி தோன்றாது.
உணர்த்த விரும்பும் பொருள் மட்டுமே
தோன்றும் ’ என்று கண் தாழ்ந்தாள்.

வலிமிகுதல் 10
--------------------
வலிமிகுதல் தொடரின் கிளைமாக்ஸ்-ஐப் படிக்கவுள்ளீர்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் புரியாமை என்னும் வில்லன் வென்றுவிடுவான் என்பதால் ஊன்றிப் படியுங்கள்.

ஒரு சொற்றொடரின் பொருள் வெவ்வேறு விதமாகவும் வேற்றுமைப்படலாம். அந்த வேற்றுமையை உணர்த்த வேற்றுமை உருபுகள் எனச் சில இருக்கின்றன. மரவேலி என்பதை எத்தனை விதமாய் விரிக்கலாம் பாருங்கள். மரத்தில் செய்த வேலி, மரத்திற்கு வேலி, மரத்தினது வேலி, மரத்தால் ஆகிய வேலி என்று புலமைக்கு எட்டிய வகையில் பொருள் கொள்ளலாம்.

இவ்வாறு சொற்றொடர் இடையே துல்லியமாய்ப் பொருள் வேற்றுமை தோன்றப் புரிந்துகொள்ளத் தோன்றியதே வேற்றுமை. சொற்றொடரின் பொருள் நுணுக்கங்களில் வேற்றுமை கற்பிக்கிறது.

இந்த வேற்றுமைக்கு உருபுகள் உள்ளன. அவற்றை எண்வாரியாகப் பெயரிட்டு இனங்காட்டுகிறார்கள். ஒன்று முதல் எட்டு வரையிலான வேற்றுமைத் தொடர்கள் மற்றும் தொகைகள். தொடர் என்றால் இயல்பாய் வருவது, தொகை என்றால் தொகுத்துப் பொருள் பெறுவது என்று நமக்குத் தெரியும்.

முன்னதாக வேற்றுமை உருபுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல், ஆன், ஒடு, ஓடு.
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல்
ஆறாம் வேற்றுமை உருபு – அது, ஆது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

இப்போது விளக்கத்திற்கு வருகிறேன். இந்த வேற்றுமை
உருபுகள் ஒரு சொற்றொடரில் மறைந்திருக்க நாம் அவற்றை விரித்துத் தொகுத்துப் பொருள் காண்கிறோம். அதுவே வேற்றுமைத் தொகை. விரிவு செய்து பொருள் காண்பதற்காக சம்பந்தப்பட்ட சொற்றொடரோடு உரிய வேற்றுமை உருபை இணைத்து இயல்பான ஒரு சொற்றொடரை விளைச்சலாய்ப் பெறுவோம் அல்லவா, அந்த இயல்பான சொற்றொடர் வேற்றுமைத் தொடர்.

மற்றொரு நிலைமையும் இங்கே உண்டு. ஒரு சொற்றொடரில் வேற்றுமை உருபை மட்டும் சேர்த்து விரித்துப் பொருள்கொண்டாலும் போதாத நிலை ஏற்படும். வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு ‘வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை’ என்று பெயர். புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கிறதல்லவா ? உதாரணத்திற்கே போவோம், வாருங்கள்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதால் இரண்டாம் வேற்றுமையிலிருந்து தொடங்குகிறேன்.

தண்ணீர் குடித்தான் – இது இரண்டாம் வேற்றுமைத் தொகை – எப்படி ? – தண்ணீரைக் குடித்தான்’ என்றே ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபை முதற்சொல்லோடு இணைத்துப் பொருள் கொள்கிறோம். தண்ணீர் குடித்தான்’ என்பது வேற்றுமை உருபு உள்மறைந்து தொகுத்துப் பொருள்காணும்படி இருக்கிறது. அந்த வேற்றுமை உருபு இரண்டாம் வேற்றுமை உருபு. ஆக,

தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை (தொகுக்கச் சொல்கிறது)

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொடர் (தொகுத்தபின் இயல்பாகிவிட்டது).

தண்ணீர்க்குடம் – இதை எப்படிப் பொருள் விரிப்பீர்கள் ? ‘தண்ணீரை உடைய குடம், தண்ணீரைப் பிடிக்கும் குடம்’ இப்படி இரண்டாம் வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்து (அந்த வினைச்சொல் இரண்டாம் சொல்லின் – குடம் - பயனை விளக்குவதாக இருக்கும்) அர்த்தம் கண்டோம். இதுவே இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

இப்போது நாம் வழக்குக்குள் நுழைகிறோம்.

இரண்டாம் வேற்றுமை (ஐ)
--------------------------------------
தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்.

தண்ணீர்க் குடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

இப்படி எட்டு வேற்றுமைகளுக்கும் பார்க்கப் போகிறோம்.

மூன்றாம் வேற்றுமை (ஆல்)
---------------------------------------
கை காட்டினான் – மூன்றாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

கையால் காட்டினான் – மூன்றாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகாது

தங்கக் கிண்ணம் - தங்கத்தால் செய்த கிண்ணம் – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

நான்காம் வேற்றுமை (கு)
------------------------------------
வள்ளித் திருமணம் – நான்காம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

வள்ளிக்குத் திருமணம் – நான்காம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்

கூலிப்படை – கூலிக்குக் கூடிய படை – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலிமிகும்.

ஐந்தாம் வேற்றுமை (இன், இல்)
--------------------------------------------
தாய்மொழி கூறு – ஐந்தாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தாய்மொழியில் கூறு – ஐந்தாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

பழச்சாறு – பழத்தில் பிழிந்த சாறு – ஐந்தாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

ஆறாம் வேற்றுமை (அது)
------------------------------------
கிளிப்பேச்சு – ஆறாம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

கிளியினது பேச்சு – ஆறாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

ஆறாம் வேற்றுமைக்கு உடன் தொக்க தொகை அபூர்வம்.

ஏழாம் வேற்றுமை (கண்)
-----------------------------------
மலை திரிவோர் – ஏழாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

மலையின்கண் திரிவோர் – ஏழாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

மலைக்கோவில் – மலையின்கண் எழுந்த கோவில் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

முதலாம் வேற்றுமையை இன்னும் பார்க்கவில்லை. முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது. அது வேறொன்றுமில்லை. எழுவாய்த் தொடர் என்று பார்த்தோமில்லையா ? அதையே தொகையில் முதலாம் வேற்றுமைத் தொகை (எழுவாய் வேற்றுமை) என்பார்கள். எளிமையாய் இருக்கும். காற்று குளிர்ந்தது. கை சுருங்கியது. – வலி மிகாது.

இன்னொன்று - எட்டாம் வேற்றுமை, இதை விளி வேற்றுமை என்பார்கள். தொடரில் பார்த்த விளித்தொடர் போன்றதுதான் இதுவும். அண்ணா தோற்காதே – அண்ணா யாரிடம் தோற்காதே – என்பதுபோல் தொகுத்துக்கொள்ள இடமிருப்பதால். இங்கும் வலிமிகாது.

வலிமிகுதல் குறித்த பாடங்கள் ஏறத்தாழ நிறைவை எய்துகின்றன. இன்னும் எளிய விதிகள் சில இருக்கின்றன. அவற்றை அடுத்த பகுதியில் எழுதுவேன்.

பிறகு இவற்றில் உள்ள ஓரிரு முரண்கள், அவற்றைக் களையும் விதங்கள் பற்றிய தெளிவையும் எழுதவுள்ளேன். அத்துடன் இப்பகுதி நிறைவடையும்.

வலிமிகுதல் 11 - கள் விகுதிக்கு வலி மிகுமா ?
----------------------------------------------------------------
கள் - மது என்ற பொருளில் வந்தால் தனிச்சொல். பன்மைச் சொற்களில் கள் என்று இடம்பெறும் ஈற்று விகுதிக்குப் பன்மை விகுதி என்று பெயர். வெறும் விகுதியாய் வருவதால் அது தனிச்சொல் இல்லை.

சொல் வகைமையில் கள் விகுதியை இடைச்சொல்லில் சேர்ப்பார்கள். இடைச்சொல்லுக்கு வலி மிகாது. கிறு, கின்று, ஆநின்று - ஆகியவை கூட இடைச்சொல்தான்.

வாழ்த்துக்கிறோம் என்று வலி மிகை செய்து எழுதுவதில்லை. வாழ்த்துகிறோம் என்றே எழுதுகிறோம். அதுபோலவே வாழ்த்துகள் என்றே எழுத வேண்டும். வாழ்த்துக்கள் என்பது பெரும் பிழை.

வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் என்பதால்தான் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள், பாட்டுக்கள் என்று எழுதுவதாகச் சொல்வார்கள். பரிமேலழகரே ‘எழுத்துக்கள்’ என்று எழுதியிருப்பதாக ஆதாரமும் உண்டு.

வன்தொடர்க் குற்றியலுகர வலிமிகும் விதி தன்னை அடுத்து மற்றொரு தனிச்சொல் வந்தால்தான் பொருந்துமே அன்றி கள் என்னும் இடைச்சொல்லான பன்மை விகுதிக்குப் பொருந்தாது.

கள் விகுதி வலிமிகுந்தும் மிகாமலும் குழப்பமான புழக்கத்தில் இருக்கிறது. அந்தப் பழக்கத்தால்தான் வாழ்த்துக்கள் என்கிறோம்.

1. தனி நெடிலை அடுத்தோ (ஓரெழுத்து ஒருமொழி) நெடிலில் முடியும் சொற்களை அடுத்தோ கள் விகுதிக்கு வலி மிகும்.

ஆக்கள், ஈக்கள், பாக்கள், தேனீக்கள், வெண்பாக்கள்.

ஆனால், ஐகாரத்திலும் ஔகாரத்திலும் வலி மிகாது. கைகள், பைகள், பண்டிகைகள்.

ஔகாரத்தில் ஏதும் சொற்கள் உள்ளதாகத் தெரியவில்லை.

2. உ’கரத்தில் முடியும் இரண்டு குறில் எழுத்துகள் (குறிலிணை) உள்ள சொற்களை அடுத்து கள் விகுதி வந்தால் வலிமிகும். தெருக்கள், அணுக்கள், வடுக்கள், பருக்கள்.

உ’கரத்தில் முடியும் இரண்டுக்கும் மேற்பட்ட குறில்கள் என்றாலோ அல்லது நெடிலை அடுத்த உகரக் குறில் என்றாலோ வலி மிகாது. அழகுகள், விழுதுகள், ஆடுகள், வீடுகள்.

ள்’ என்று முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் புணர்த்தவும் கூடாது. ஏனென்றால் புணர்ச்சி விதி ஏற்க இது தனிச்சொல் இல்லை. நாள்கள், பொருள்கள், வாள்கள், தோள்கள் என்றுதான் எழுதவேண்டும். நாட்கள், பொருட்கள் என்று எழுதக் கூடாது.

கள் விகுதி சார்ந்த ஐயங்களில் முழுமையாகத் தெளிவு பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள் !

வலி மிகுதல் 12 – இன்னும் சில நிலைமைகள்
--------------------------------------------------------------
1. ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலிமிகும். ஓரெழுத்துச் சொற்களால் ஆகியவையே ஓரெழுத்தில் அமைந்த ஒருமொழி. பூப்பறித்தான். டீக்கடை. தீத்தெறித்தது. ஓரெழுத்து ஒருமொழியில் வலி மிகாத நிலைமைகளும் இருக்கின்றன. நீ செல். போ பணிந்து.

2. வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகவேண்டும் என்பது அடிப்படை. அதன்படி கொக்குப் பறந்தது, சிட்டுப் பாடியது என்றே எழுத வேண்டும். செய்யுளில் இவ்வாறு எழுதுகின்ற வழக்கம் இருக்கிறது. ஆனால் உரையில் இவ்வழக்கு கைவிடப்பட்டுவிட்டது. தமிழறிஞர்களின் வாதப் பிரதிவாதங்கள் இரண்டையும் சரியென்றே ஏற்கின்றன.

3. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகாது. ஆனால் சிற்சில இடங்களில் அதுவும் ‘கள்’ விகுதியிலும் கூட வலி மிகுத்து எழுதுவது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்துக்கள், பந்துக்கள், கந்துக்கடன். கந்துக்காரன்.

4. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பதால் மருந்து விற்கும் கடையை ‘மருந்து கடை’ என்று எழுதவேண்டும். இதற்கு ‘மருந்தைக் கடைந்து தா’ -இரண்டாம் வேற்றுமைத் தொகையில் - என்பதுபோன்ற ஒரு பொருளும் வருகிறது. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாக ‘மருந்தை விற்கும் கடை’ என்ற பொருளில் மருந்துக் கடை என்றே எழுதுகிறோம்.

5. ஊர்காவலர், மெய்க்காவலர் என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாக வலிமிகாமல் எழுதப்படவேண்டும். ஆனால், ஊர்க்காவலர், மெய்க்காப்பாளர் என்றே எழுதப்படுகிறது.

6. ஒன்று, ஒரு, இரண்டு, இரு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, அறு, ஏழு, எழு – ஆகிய எண்சொற்களை அடுத்து வலி மிகாது. அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய சொற்களுக்குப் பின் கட்டாயம் வலி மிக வேண்டும்.

7. படி’ என்ற சொல் தான் சேர்ந்தாலும் தன்னை அடுத்து வல்லினம் வந்தாலும் வலி மிகாது. அதன்படி இதன்படி, சொன்னபடி, செய்தபடி. ஆனால் அப்படி, இப்படி, எப்படி – ஆகிய சொற்களை அடுத்து வலி மிக வேண்டும்.

8. அத்தனை, இத்தனை, எத்தனைக்கு வலி மிகாது. அத்துணை, இத்துணை, எத்துணைக்கு வலி மிகும்.

9. கீழ் என்பதை அடுத்து வலிமிகுவதும் மிகாததும் ஏற்கப்படுகிறது. கீழ்க்கணக்கு, கீழ்த்திசை, கீழ்தளம்.

10. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே- என்பதற்கொப்ப மரபையும் தொல் பெருமைகளையும் போற்றிக்காப்பதையும் தகுதியான புதுமைகளை ஏற்று நடப்பதையும் இருகண்களாகக் கருதி இந்தத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன். ஆர்வத்துடன் பின்தொடர்ந்த அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !
(முற்றும்)