Tuesday, March 3, 2009

ஏ ஆர் ரகுமான் தமிழ்ப் பாடல்களை வளர்த்தாரா ?

தமிழ் மொழி பாமரனோடு மிகவும் நெருங்கியிருந்த இடம் அவன் கேட்டுக்கொண்டிருந்த திரைப்பாடல்கள் ஆகும். தமிழினத்தின் ஆகப்பெரும் வர்க்கமான உழைப்பாளி தமிழ் மொழியின் ஒரே மனித வங்கி ஆவான். ஓர் இனத்தின் அடையாளத்தை வேரறுக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் மொழியைக் குலைக்க வேண்டும். இளையராஜா தம் காலம் முழுவதும் பாடல்களைக் கீழ்த்தரமாக உச்சரிக்கும் பாடகனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மேலும் இளையராஜா உள்ளிட்ட எந்த இசையமைப்பாளரும் பாடல் வரிகளை அடக்கி இசையொலிகளைப் பெருக்கிக் காட்டவில்லை. பாடலின் பின்புலமாக இசை நின்றதே ஒழிய பாடல் ஒலியின் ஒலிப்பை நெறித்துக் கருவிகளைக் கர்ண கடூரமாக ஒலிக்க விட்டதில்லை. அதனால்தான் பாடலை எங்கோ தூரத்துக் காற்றில் கேட்ட தமிழன் ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி / காதுக்கொரு கானக்குயில் / நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி / நீதானம்மா’ என்று பாடிச் சென்றான். அவனையறியாமலே நற்றமிழ்ச் சொற்கள் பத்துப் பதினைந்தை உயிருக்குள் ஊட்டிக் கொண்டான். ‘மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே’ என்று மொழியழகான வரிகளை ஆழ்மனத்திலிருந்து ஏற்றிப் பாடினான். மொழி பாடலின் முதுகேறி இனத்தின் உள்ளங்களைத் தீண்டிக்கொண்டிருந்த நிலையை முதலில் கொல்வதற்கு வழிகோலியவர் ஏ ஆர் ரகுமான் ஆவார். ‘காதலிஹ்ஹும் பெந்நின் ஹைஹல் தொட்டு நீட்டிநால்’ என்று உதித் நாராயணனைத் தமிழில் பாட வைத்தவர் ரகுமான். காதல் தேசம் என்ற படத்தின் பல பாடல்களை இன்றுவரை ஒற்றைத் தமிழனும் முழுதாகக் கேட்டறியவில்லை. கேட்டால் சொற்களைக் காணவில்லை. கருவிகளின் கோர ஒலிக்குள் சொற்களைப் பிணப்பாடம் செய்து அடக்கம் செய்யும் பணியை ரகுமான் தான் தொடங்கிவைத்தார். அந்தத் தொடக்கம் இன்று எத்தனை குப்பைப் பாடல்களைப் பெற்றுத் தள்ளியிருக்கிறது என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணி வெட்கித் தலைகுனிய வேண்டும். ஒன்றுமறியாப் பிஞ்சுகள் கூட ‘வேர் ஈஸ் த பார்ட்டி ? எங்க ஊட்ல பார்ட்டி’ என்று பாடிப் பலியாவதைக் கண்கூடாகக் காண்கிறோம். வாழ்க்கை நிகழ்வுகளோடு தொடர்புள்ள ஒரு பாடலைக் கூட ரகுமான் தரவில்லை. எல்லாப் பாடல்களும் காதல் மயக்கங்கள் அல்லது பிரிவு இம்சைகள் கேளிக்கை கொண்டாட்டங்கள். கறாரான விமர்சனங்களுக்குப் புகழ்பெற்ற எத்தனையோ மேதைமை மிக்க இசை விமர்சகர்களும் மொழிப் புலவர்களும் இன்று ஏதேனும் ஓர் அரசாங்கக் கட்டிடத்தில் ஓய்வூதிய நிலுவைகளுக்கு மனுச் செய்துகொண்டிருக்க வேண்டிய அவல வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டுவிட்டனர். அந்த தைரியத்தில் தான் இன்று ஏராளமான தட்டுக்கெட்ட தத்தாரிகள் கலைத்துறையின் எல்லாத் துளைகளிலும் நுழைந்து எந்த வரலாற்றாலும் மீட்கவே முடியாத இன மொழி உணர்வுக் கேடுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுவிட்டனர். இத்தகைய இழப்புகளோடு ஒப்பிட்டு ரகுமானின் ஆஸ்கரை விமர்சனம் செய்யவேண்டிய எத்தனையோ அறிவாளிகள் வாழைமட்டையாகக் குழைந்து நிற்பதைக் காணச் சகிக்கவில்லை.

7 comments:

  1. நண்பர் மகுடேசன்.,

    எழுத்து மற்றும் நடை மிக சிறப்பாக இருக்கிறது. எழுதிய வரிகளில் உண்மையும் இருக்கிறது.

    வாழ்த்துக்கள்., தொடரவும்.

    ReplyDelete
  2. நண்பரே ரஹ்மான் தமிழை வளர்த்தார் தமிழ் பாடல்களை வளர்த்தார் என யாரும் சொல்லித் திரிவதாக தெரியவில்லை. அவரது பாணியில் இசையை அமைக்கிறார் அது,இந்தியாவிலும், உலக அரங்கிலும் பெரும்பாலானொருக்கு பிடித்திருக்கிறது.

    உங்களுக்கு ரஹ்மானின் இசை உங்களுக்கு பிடிக்கவில்லை போலும்!

    சினிமாக்களுக்கு இப்படித் தான் இசையமைக்க வேண்டும் என வரையறை ஏதும் இருக்கிறதா நண்பரே! சினிமாவும் பாடல்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து தான் ஒவ்வொரு இயக்குனரும் இசையமைப்பாளர்களும் மெனக்கெடுகின்றனர். 1980 களில் சினிமா பாடல் ரசிகர்கள் அதிகமாக மேற்கத்திய இசையினையோ, ஆங்கில பாடல்களையோ கேட்டு ரசித்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அதன் தாக்கமும் தெரியவில்லை 1990 க்கு பிறகு உலகமயமாக்கல் மூலம்,தொலைக்காட்சி சானல்கள் மூலம் ஆங்கில பாடல்களையும் ரசிக்கத் தொடங்கினர் . அதன் தாக்கம் அவர்களின் தமிழ் பாடல் ரசனைகளும் மாறியிருக்கின்றன.

    இதனை உணர்ந்தே மேற்கத்திய இசையை இந்திய இசையுடன் fusion ஆக ரசிகர்களுக்கு அளித்து வந்திருக்கிறார் ரஹ்மான். அதோடு ஒரு சினிமா பாடல் வெளியாகும் முன் சினிமாவின் இயக்குனரின் சம்மதமும் அவசியம் தேவை. ஒரு பாடல் ஹிட் ஆகாது என இயக்குனர் நினைத்தால் அதை அவர் மறுத்து விடுவார். அது போல வரிகளை இசையமைப்பாளர் கேட்டு வாங்குவதில்லை, இயக்குனருக்கும் பிடித்திருந்தால் மட்டுமே அது இசையமைக்கப்படும்.

    இது எல்லாம் தொழிலுங்க. சினிமாவ Cine industry என்று தானே சொல்கிறார்கள். சினிமா தொழிற்சாலையே ஒழிய தமிழை வளர்க்கும் ஒரு இடமல்ல நண்பரே.

    ரஹ்மானின் ஆஸ்கர் விருதிற்கு பின்னர் இசைஞானி இளையராஜாவைக் குறித்து பலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவது வருந்தத் தக்கது. ஆஸ்கர் விருது ஒரு குறிப்பிட்ட பாடல்/சினிமாவில் இசையமப்பு எப்படி என்று தான் தீர்மானிக்க முடியுமே ஒழிய ஒருவரின் இசை ஞானத்தை தீர்மானித்து விடுவதில்லை.

    இசையை வளர்க்க சினிமா தொழிலில் இல்லாத பிற இசைக்கலைஞர்கள் இருக்கும் போது, சினிமா இசையமைப்பாளர்களிடம் நாம் எதிர்பார்க்க இயலாது. ஏனென்றால் இது தொழில்.

    ReplyDelete
  3. நண்பர் எட்வின் அவர்களே ! ரகுமான் தமிழ்ப் பாடல்களை வளர்த்தார் என்று யாரும் சொல்லித் திரிவதாகத் தெரியவில்லை என்கிறீர்கள். அப்படியானால் வளர்க்கவில்லை என்றே ஒப்புக்கொள்கிறீர்கள்தாமே ! தமிழனாக உலக அரங்கில் அடையாளம் காணப்பட விரும்புகின்ற ரகுமான் தமிழுக்கு என்ன செய்தார் ? அல்லது அவருக்கு அறிமுகம் தந்து பிழைப்பைச் சாத்தியமாக்கி உலகுக்கு அனுப்பிய தமிழ்த் திரையிசைக்கு என்ன செய்தார் ? அது முன்னேறக் காரணமானாரா ? முடங்கக் காரணமானாரா ? இதுதான் என் கேள்வி.

    ஓர் இசையமைப்பாளனின் ஆதரவில்லாமல் தமிழ்த்திரையிசை மொழி வலிமை பெற வாய்ப்பேயில்லை என்பதை அறிவீர்களா ? தமிழ்மீது ரகுமான் அக்கறை கொண்டிருந்தார் என்றால் உதித் நாராயணன் உள்பட ஏராளமான மொழித் தற்குறிகளை இங்கே பாடவிட்டிருப்பாரா ? எத்தனையோ பிறமொழிப் பாடகர்கள் இங்கே வந்து தமிழைக் கற்று முறையாகப் பாடவில்லையா ? வரலாற்றில் அதுவரை எந்த ஒரு முன்னுதாரணமும் இல்லாத பொழுது, இது ரகுமான் தெரிந்தே வலிந்தே புரிந்த மொழிக்கொலைதானே ! செம்மையாக விளங்கும் ஒன்றைப் பலிதந்து நடக்கும் நடையை நாம் எவ்வாறு கைதட்டி வரவேற்க முடியும் ?

    ரகுமான் அவரது பாணியில் இசையமைக்கிறார் என்கிறீர்கள் ! மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் ! ரகுமான் இசையமைத்துக் கொண்டிருப்பது அவரது சொந்த பாணியிலா ? உலகெங்கும் பவனிவந்துகொண்டிருந்த தொழில்நுட்பத்தால் செறிவுபடுத்தப்பட்ட ஒலிகளை, ஏற்கனவே மேற்குலகெங்கும் சக்கைபோடு போட்ட இசைக்கோப்பு முறைகளை அப்படியே சுவீகரித்து அடித்ததுதானே ரகுமானின் இசை ? மறுக்க முடியுமா ? ரகுமானுக்கென்று ஏது தனிப்பாணி ?

    ரகுமானின் இசை எனக்குப் பிடிக்கவில்லை என்று ஐயுறுகிறீர்கள் ! நான் எழுப்பியிருக்கும் கேள்வியின் முன் என்னுடைய சொந்த ரசனை முக்கியமே இல்லை என்பதை அறியுங்கள். அது, நம்மைத் தேவையற்ற கண்மறைப்புக்கு இட்டுச்சென்று, உணர்ச்சிபூர்வமான மனச்சாய்வுகள் ஏற்பட்டு, உண்மைக்கு வெளியே வெகுதூரம் நம்மைக் கொண்டுபோய்விடும்.

    சினிமாவுக்கு இப்படித்தான் இசையமைக்க வேண்டும் என்று வரையறை ஒன்றுமில்லைதான். ஆனால், அமைக்கப்பட்ட இசையில் நிகழ்ந்த கொலைகளுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்தானே ? அதேபோல இப்படியெல்லாம் நீ இசையமைப்பாயாக என்று யாரும் விண்ணப்பிக்கவும் இல்லையே !

    உலகமயமாக்கலால் தொலைக்காட்சி வழியாக நுழைந்த மேற்கத்திய இசையால் நாம் ரசனை மாறினோம் என்கிறீர்கள் ! அப்படியானால் தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்படுவது MTV, CHANNEL V ஆகியனவாகத்தாமே இருக்க வேண்டும் ? மண்மணக்கிற தமிழ்ப் பாமரனின் மொழியில் நகைச்சுவை செய்கிற வடிவேலு என்கிற ஒற்றைக் கலைஞனை நம்பி மூன்று
    புதிய தொலைக்காட்சிக் கால்வாய்கள் முளைத்திருக்கின்றனவே அது ஏனாம் எதற்காம் ? மூன்று என்பதே பொய்க்கணக்கு. இன்று தமிழில் வழங்குகிற இருபத்தைந்து தொலைக்காட்சி வாய்க்கால்களும் வடிவேலுவை நம்பியிருக்கின்றன. காசு கொழுக்கும் நேரமான Prime Time முழுக்கவே வடிவேலுவை வைத்து அவை நிகழ்ச்சிகள் செய்கின்றன ! ஏனென்றால் வடிவேலு தமிழ் உலகின் ஆகப்பெரும் வர்க்கமான உழைப்பாளியோடு அவனறிந்த சுக துக்க மொழியில் வலிமையாக உரையாடுகிறான். ஆதலால், உலகமயமாக்கல் மட்டுமன்று சூரியமண்டலமயமாக்கல் நிகழ்ந்தாலும் மக்கள் ரசனை மொழியைத் தொலைத்து வளர்வதில்லை.

    இயக்குநரை மீறி இசையமைப்பாளர் ஒன்றும் செய்வதில்லை என்பதெல்லாம் மாயை. இசையமைப்பாளன் ஒலித்துத் தருவதைத் திருத்தத் தெரியாத அப்பாவிதான் சினிமா இயக்குநன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நன்றாக இல்லை என்று புகழ்பெற்ற இசையமைப்பாளனிடம் எந்த இயக்குநன் தைரியமாகச் சொல்வான் ! போட்டுக் கொடுத்ததைப் பொறுக்கிக் கொண்டு போகிற ஆள்களாகத்தாம் இயக்குநர்களை இசையமைப்பாளர்கள் வைத்திருக்கிறார்கள். ‘ரைட்டர் எழுதிக்குடுத்துர்றார், நடிகர் நடிச்சுக்குடுத்துர்றார், சினிமாட்டோகிராபர் எடுத்துக்குடுத்துர்றார், எடிட்டர் கோத்துக்குடுத்துர்றார், இசையமைப்பாளர் இசையமைச்சுக் குடுத்துர்றார் - ஒரு டைரக்டரா எங்க வேலை இவங்க எல்லாரும் செய்யற வேலையை ஒருங்கிணைக்கிறதுதான்’ என்று மணிரத்னம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

    சினிமா ஒரு தொழில் என்றால் அத்தொழிலுக்கு ஓர் அறம் உண்டுதானே ! மருந்து தயாரித்தல் ஒரு தொழில் என்றால் அம்மருந்தின் நோய்தீர்க்கும் தன்மையே அத்தொழிலின் அறம். அந்த இடத்தில்தான் உங்கள் வியாபாரத்திற்கும் நீங்கள் அடையும் இலாபத்திற்கும் இச்சமூகம் இலக்காகும். பணம் ஈட்டுதல் என்ற நோக்கின் முன் அறமென்ன தர்மமென்ன என்றால் விஷயம் வேறு.

    உதவி இயக்குநர் ஒருவர் புகழ்பெற்ற நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். அந்த உதவி இயக்குநரின் தாயார் தமிழ்நாட்டின் மூலைக் கிராமம் ஒன்றில் கல்லுரலில் மாவாட்டி இட்லி சுட்டு விற்றுத் தன் மகனை வளர்த்தவர். அந்த உதவி இயக்குநர் சினிமா இயக்குநராகி சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு கூட தம் தாயாருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஏனென்று எட்டிப் பார்க்கவில்லை. அவர் தம் பட நாயகியைத் திடீர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குத் தம் தாயாரை அவர் அழைக்கவுமில்லை. பிறகு மனம் மாறித் தம் தாயாரிடம் ஆசி பெற புது மனைவியோடு சென்றார். அதே ஊரில் அதே நிலையில் இட்லி சுட்டு விற்றுக்கொண்டிருந்தார் அவர் தாயார். அதுவரையிலும் தம் மகனால் ஏதொரு நலனும் கண்டறியாத அக்கிழட்டுத் தாய், ‘நீ பிழைத்து எனக்கு என்ன ஆயிற்று ? என்றைக்கும் என்னைக் கவனிக்காத நீ இன்றைக்கு எதற்கு வந்தாய் ? இன்றைக்கு உனக்குப் பட்டம் வந்ததும் ஊர் வாய்ச்சொல் பொறுக்க முடியாமல் பார்க்க வந்தாயோ ? போடா... எங்கேயோ போய் எப்படியோ பிழை’ என்றார்.

    அந்தக் கிழட்டுத் தாயின் இடத்தில் தமிழ்மொழியை அமர்த்திப் பாருங்கள் !

    நன்றி !

    ReplyDelete
  4. தங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்...உங்கள் தலையங்கத்திற்கான ரஹ்மான் தமிழை வளர்த்தாரா என்பதற்கு முந்தைய பின்னூட்டத்திலேயே இல்லை என்றிருக்கிறேன். இன்றைய சினிமாவின் மூலம் எந்த அளவிற்கு தமிழை வளர்க்க முடியுமென தெரியவில்லை.

    ReplyDelete
  5. மறுக்கவே முடியாத சொற்கள்...

    மகுடேஸ்வரன்,
    நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது மீண்டும் பதிவுகள் எழுதலாமே...

    அன்புடன்,
    ஒவ்வாக்காசு.

    ReplyDelete
  6. அன்பு மகுடேஸ்வரன்...ஏ.ஆர் ரஹ்மானின் பெரும்பான்மைப் பாடல்கள் அப்படி இருந்தாலும்”கத்தாழங் காட்டு வழி(கிழக்குச் சீமையிலே), என் மேல் விழுந்த (மே மாதம்),சின்ன சின்ன ஆசை (ரோஜா), என் காதலி (டூயட்) போன்ற பாடல்களின் வார்த்தைகளை நாம் தெளிவாகக் கேட்க முடியும். இளையராஜா திரைக்கு வந்த போது நாம் நாட்டுப்புற இசையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தோம். அதனால் அந்த வாசனை தூக்கலாக இருந்தது.ஆனால் நகரமயமாக்கப்பட்டு விட்ட நிலையில் கோவில் திருவிழாக்களில் கூட நாட்டுப்புற கலைஞர்கள் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசித்தான் மக்களை மயக்க முடியும் என்ற இந்த சூழலில் நாம் மேற்கத்திய இசையோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். ஆக ரஹ்மானை மட்டும் சொல்லி என்ன ஆகப் போகிறது.

    மற்றபடி வடிவேலுவைப் பொறுத்த வரை நம் கிராம எச்சங்களை அவரிடம் பார்த்து திருப்திப் பட்டுக் கொள்கிறோம்.

    என்னைப் பொறுத்த வரை மக்களை மகிழ்விப்பதற்கு இளையராஜா ஒரு வழி என்றால், ரஹ்மான் மற்றொரு வழி.

    ஆனால் என் விருப்பம் இளையராஜா தான். :-)

    ReplyDelete