Sunday, October 3, 2010

என்னத்தைச் சொல்ல...!

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மரபுச் செய்யுள்களில் வடித்துப் பதிவேற்றிய பகுதிகளை இதுகாறும் வாசித்திருப்பீர்கள். இவற்றை எல்லாரும் வாசித்தீர்களா அல்லது திறந்து பார்த்துவிட்டுக் கடந்துபோய்விட்டீர்களா என்பது குறித்து எனக்கு ஐயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இந்தப் பகுதிகளில் இடப்படவேண்டிய பின்னூட்டங்களின் அக்கறையின்மை என்னை அவ்வாறு எண்ணச் செய்துவிட்டது. நீங்கள் ஏதாவது கூறப்போக நான் அதுகுறித்துக் கடுமையாக எதிர்வினை ஆற்றிவிடுவேனோ என்ற அச்சம் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கலாம். மூன்றாம் தரமான அக்கப்போர் விவாதங்களில் பதிவுலக நண்பர்கள் காட்டும் முனைப்பை நம் தேசப் பிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்பு விவகாரத்தில் காட்டாதது ஒன்றும் தற்செயலானது இல்லை. நீங்கள் எதற்கு யோக்கியதைப் பட்டவர்களாக இருக்கிறீர்களோ அதற்கேற்ற அரசியல், கருத்துலகம், ஆட்சித் தலைமை, கலை இலக்கியம், சமூக வாழ்க்கை போன்றவற்றுக்கே தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள். விதிவிலக்குகளை இனங்கண்டு போற்றாதவரை முன்னெடுத்து முழங்காதவரை இங்கே எதுவும் மாறாது.

காந்தியின் நிலைப்பாடுகளோடு இங்கே எல்லாரும் யாவரும் பெரிதும் முரண்படவும் செய்வோம். எனக்கும் அவரது ஒற்றைப்படையான மதவாதச் சிந்தனைகள் பல ஏற்புடையவை அல்ல. இந்தக் கவிதைகளிலே கூட ‘ஆய்பொருளில் கருத்துயர்ந்த கீதைபோன்ற சொற்றொடர்களை அமைக்கும் போது எனக்குள் எளிதில் தணியாத பதற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அதுவே காந்தியாரின் கருத்தும் என்பதால் என் நிலைப்பட்டுக்கு அங்கே என்ன வேலை ? அந்த ஒன்றோ அல்லது இன்னபிறவோ அவரைக் கண்டு வியக்கும் போற்றும் செயல்களுக்குத் தடையாக இருக்கப் போதுமானவையும் அல்ல. அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்து, ஏன் இந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்தும், அவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முன்பொருமுறை நான் பெரியார் காப்பியம் எழுதுவதாக முடிவு செய்து பகுதி எழுதி முடித்தும் இருந்தேன். அதற்காகக் கத்தை கத்தையாகப் புத்தகங்கள் வாங்கிப் பெரிய தொகையாகச் சேர்த்திருந்தேன். தமிழினி பதிப்பகமும் அந்த நூலை வெளிவரவிருக்கும் நூலாக அறிவித்திருந்தது. அந்த நேரமாகப் பார்த்து பெரியார் என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிக்கொண்டிருந்தது. முடிந்தது கதை. எங்கும் பெரியார் திரைப்படம் பற்றியே பேச்சு. கவனிக்கவும், பெரியார் என்கிற சமூகச் சீர்திருத்தவாதியைப் பற்றிய பேச்சே இல்லை. பெரியாராக சத்யராஜ் நடிக்கிறாராம், அது சிவாஜி கணேசன் நடிக்க விரும்பியிருந்த ரோலாம். பெரியார் விபச்சார விடுதிக்குப் போவது போல் காட்சிகளை எடுக்கிறார்களாம். இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசைமயமைக்க மறுத்துவிட்டாராம். ஜோதிர்மயி பெரியாருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். குஷ்பு மணியம்மையாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களையே கேவலமாகப் பேசிய குஷ்பு அவ்வேடத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று போலி அறிவு ஜீவிகள் மத்தியில் விவாதங்களாம். அந்த வேடத்தை ஏற்க அவரே மிகப் பொருத்தமானவராம். ஏப்ரல் மாதத்திலே ஸ்டான்லி அண்ணாதுரையாக நடிக்கிறாராம். அண்ணா ஒப்பனையில் இருக்கும் அவரோடு ஒரேயொரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒட்டுமொத்தப் படக்குழுவே போட்டிபோடுகிறதாம். விஜய் ஆதிராஜ் வீரமணியாம். தமிழ்நாடு அரசு படத்துக்கு இலட்சக் கணக்கில் மானியத்தை வாரியிறைக்கிறதாம். தமிழ்நாட்டு முதலமைச்சரே எடிட்டிங் டேபிளில் உட்காராத குறையாகப் படவேலைகளில் ஆர்வம் காட்டுகிறாராம். அடப்போங்கடா ஙொய்யாலெ... இந்த நேரத்தில் பெரியார் காப்பியத்தை எழுதவும் மாட்டேன் வெளியிடவும் மாட்டேன் என்று பதிப்பாளரிடம் தெரிவித்துவிட்டு அமர்ந்துவிட்டேன்.

காந்தியைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தபோது அவ்வாறு ஏதாவது வலிய மனத்தடை ஏற்பட்டிருக்கலாம். நான் உங்களின் உதாசீனங்களிலிருந்து ஒருவேளை தப்பியிருப்பேன்.

(கலாநேசன், வெண்புரவி, மதுரை சரவணன், கொல்லான், மோகன்குமார் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள்)

13 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. போலித்தனமான மதிப்பீடுகளின் பின்னர் தான் உலகம் சுழற்கிறது என்பது எந்த யோசிக்கும் மூளைக்கும் தெரியும்.
  உலகமயமாக்கலின் முக்கியமான குறியே மேலை தேசத்தில் உதித்த தவறான போலித்தனங்களை உயர்ந்ததை போல் நம்ப செய்து ஏமாற்றி கொள்ளை அடிப்பது தான். மழுங்கடிக்க படும் மூளை திறத்தால் இந்திய சிந்தனை மரபின் வீச்சினை உணரும் திறனற்று செய்வது அறியாராய் சமுக பிரக்ஞை இன்றி மாக்களென எம் இனம் வாழ பழகி விட்டதில், எம்மால் உயர்ந்த விஷயங்களை கிரஹித்து பாரட்ட இயலும் நினைப்பது கடும் பாலையில் சந்தனமுல்லை படர்ந்து துளிர்க்கும் என்பதற்கு ஒப்பே.
  கவிஞரே! காந்தியுடன் எமக்கு ஒப்பு இல்லையெனிலும் உமது சமுதாய பரிவின் பால் உருவான இந்த நற்றமிழ் முயற்சிக்கு
  தலை வணங்கி என்னை உரமேற்றி கொள்கிறேன்

  ReplyDelete
 3. அவர் போதித்த அஹிம்ஸையே இன்னதென்று புரியாதவன் நான். எடுத்துக்காட்டாக, கருப்பசாமி கோவிற் கடாவெட்டு ஹிம்சையா? அல்லது விலைகொடுத்தொரு பெண் அம்மணத்தைச் சோதனைப் பயன் கொள்வது ஹிம்சையா?

  இந் நிலையில், //நீங்கள் எதற்கு யோக்கியதைப் பட்டவர்களாக இருக்கிறீர்களோ அதற்கேற்ற அரசியல், கருத்துலகம், ஆட்சித் தலைமை, கலை இலக்கியம், சமூக வாழ்க்கை போன்றவற்றுக்கே தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள்// என்று வேறு...

  இம் மிரட்டல் என்ன ஹிம்சையா அல்லது அஹிம்சையா? நமக்கு வந்து சேர்ந்திருக்கும் இந்த அரசியல், கருத்துலகம், ஆட்சித் தலைமை, கலை இலக்கியம், சமூக வாழ்க்கை இத்தனையிலும் அவர் கைக்காரியம் இல்லவே இல்லையா? இன்னும் நேரு குடும்பத்தின் தலைமையின் கீழ்த்தான் இருக்கிறோம். இந்திரா காந்தியை ஒரு ஹிந்துவாக்கிக் காட்ட அவர் முன்னின்றதில் அரசியலாற்றுச் சீர்மை, அறத்தாற்றுச் சீர்மை இரண்டு வழியிலும் தெளிவு தேறாத என்போல் ஏற்கெனவே சபிக்கப்பட்டவர்களும் இருக்கிறோம்.

  படிமத்தைத் தெய்வமென்று காட்டுகிறீர்கள். படிதலற்ற நிலைபாட்டில் உள்ளார் பாலும் இரக்கமாய் இருங்கள் என்று வேண்டலாமா?

  ReplyDelete
 4. ஜெமினி ! உலகமயமாக்கல் அறிவுலகின் மீது சாட்டையெனச் சுழன்று எதிர்த்து நிற்கும் உரமேற்றி நிற்குமேயன்றி அதன் மீது ஏதொரு ஆதிக்கத்தையும் திணிக்கும் திறனற்றது. உலகமயமாக்கல் என்பது கார்பரேட் பொருளாதாரவாதிகளால் உருவாக்கப்பட்ட யதார்த்தம். அந்த உலகமயமாக்கலால் உங்கள் வீட்டுக் கொல்லையில் முருங்கையும் கீரையும் விளையும் வரை உங்களை உணவுக்கு வழியற்ற வறியவனாக ஆக்கவே முடியாது. மேலும், உங்கள் வீட்டு முருங்கைக்கு வெளிச்சந்தையில் காயொன்று எட்டு உரூபாய் என்ற விலையைத் தந்தும் நிற்கும். எல்லாரும் பட்டினியால் கிடக்கும் நேரத்தில் நீங்கள் உங்கள் 5 முருங்கையை விற்று அன்று பிரியாணி சாப்பிடலாம். உற்பத்தி உலகிற்குள்ளேயே உலகமயமாக்கல் என்பது உங்கள் மூக்கு நுனியை உரச முடியாது நிற்கையில் அறிவுலகு மயங்கி நிற்பதாக நான் எண்ணவில்லை.

  ReplyDelete
 5. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! அறிந்தோ அறியாமலோ பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பதை ஹிம்சை என்கிற அதே நேரத்தில், பிறவுயிர்கள் அந்த ஹிம்சையால் துன்புறாவண்ணம் வலியையும் துன்பங்களையும் தானே முன்வந்து ஏற்றல்தான் காந்தியின் அஹிம்சை ஆகிறது. என் வரையறை மிகக் கூர்மையாக இல்லாது போனாலும் காந்தியின் மனதில் அத்தகைய நோக்கப்பாடு தான் இருந்திருக்கக் கூடும். நீங்களாக முன்வந்து எந்தத் துன்பத்தையும் ஏற்று நிற்கையில் அதன் வலியும் வீர்யமும் நீர்த்துப் போய்விடுகிறது என்பதுதான் அதன் உள்நின்று இயங்கும் அறிவியல்.

  கருப்பசாமி கோயிலுக்குக் கிடா வெட்டுவது ஹிம்சைதான். அரசியல் கோணம் மட்டுமே அதை ஒடுக்கப்பட்ட வர்க்கத்துக்கான அடையாளம் என்று முழங்கி நிற்குமேயன்றி வெட்டப்பட்ட ஆட்டுத் தலையின் திறந்த கண்களைச் சந்தித்துவிட்டுப் பார்த்தால் அது காட்டுமிராண்டித் தனமும் தான். இந்தப் பார்வையை இன்னும் விஸ்தரித்தால் ஒவ்வொரு அரிசி மணியும் ஒரு புல்லின் உயிரே. பிறவுயிருக்குத் தீங்கே இல்லாமால் நம் உணவுப் பழக்கம் அமையவேண்டுமானால் நாம் கனிகளை மட்டுமே உண்ணவேண்டும். மனித ஜீவராசிகள் உணவுப் பழக்கத்தால் Vegetarian அல்லவே அல்ல... நாம் Fruitarianகள். பழ உண்ணிகள். நமக்கு நிகரான மற்ற பிரதான பழ உண்ணிகள் வௌவாலும் குரங்கும் கரடியும். தக்காளிப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு பொட்டல் வெளியில் மலம் கழித்தால் நாம் ஏதொரு உயிருக்கும் கெடுதலில்லாத உணவை உண்டு, நமக்கு உணவான பழத்தையே வேறொரு இடத்தில் விதைக்கவும் செய்தவர்களாக ஆகிறோம். இந்த இடத்தில்தான் உலகிலுள்ள மதங்களிலெல்லாம் உண்மையான உயிரன்பை வலியுறுத்திய மதம் என்று சமணத்தைச் சொல்லவேண்டியிருக்கும். நான் வேறு வேறான செய்திகளை இவ்விடத்தில் சொல்லியிருக்கிறேன் தான் என்றாலும் அஹிம்சை, ஹிம்சை போன்றவற்றை உயிரன்பு, உயிர்வதை இவற்றுக்கிடையிலான வரையறைகளை வைத்துத்தான் நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.

  காந்தியால் நமக்குக் கிடைத்த மகத்தான அற்புதம் நம் அரசியல் சுதந்திரம். அந்தக் காலகட்டத்தைத் தவற விட்டிருப்போமானால் நமக்கு இன்றுவரையிலும் அது கிடைக்காமலே போயிருக்கலாம். ஏனெனில், ஆளும் வர்க்கத்திற்கு விடுதலைப் போரை அடக்க ஒரேயொரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும் உருத்தெரியாமல் ஆக்கிவிடுவார்கள் என்பதை நாம் கண்கூடாகவே கண்டோம். அந்த வாய்ப்பைக் காந்தி ஆங்கிலேயருக்கு வழங்கவே இல்லை.

  காந்தியின் காலத்திற்குப் பின்பு நிகழ்ந்துவிட்ட இந்திய அரசியலுக்குக் காந்தியைப் பொறுப்பாக்கவேண்டுமானால், அதில் எனக்கும் உங்களுக்கும் பங்காகியுள்ள பொறுப்பைவிடக் குறைவானதாகத் தானே அவரை ஆக்க முடியும் ?

  குடும்பத்து அரசியல் வாரிசுகள் என்கிற சீரழிவு தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த இடத்திலிருந்தே காந்தியைப் புரிந்துகொள்ள நாம் ஆரம்பிக்கலாம். அந்த இடமும் சரியான துவக்கப்புள்ளிதான்.

  காந்தியை வழிபாட்டுருவாக்க நான் முயலவில்லை. அப்படி ஏதேனும் தோற்றம் கவிதைப் போக்கில் நேர்ந்திருந்தால் அது உயர்வு நவிற்சியே.

  தங்களைப் போன்ற படிதலற்றவர்களுக்கு காந்தி அந்நியமானவர் அல்லர். அவரும் படிதலற்றவரே.

  ReplyDelete
 6. //அறிந்தோ அறியாமலோ பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பதை ஹிம்சை என்கிற அதே நேரத்தில், பிறவுயிர்கள் அந்த ஹிம்சையால் துன்புறாவண்ணம் வலியையும் துன்பங்களையும் தானே முன்வந்து ஏற்றல்தான் காந்தியின் அஹிம்சை ஆகிறது.//

  Sadist-ஆ இருக்கக் கூடாது; masochist-ஆ இருக்கலாம் என்கிறீர்கள். இரண்டும் குணக்கோணல்தான் இல்லையா?

  வேதயக்ஞர்கள் உயிர்ப்பலி கொடுத்தல் இக்கால வழக்கில் இன்மையால், கருப்பசாமிக் கடாவெட்டைச் சொன்னேன், அவ்வளவுதான். அரசியல் நாட்டமில்லை. வெட்டப்பட்ட ஆட்டுத் தலையின் திறந்த கண்களைச் சந்தித்து அதிரத் தெரிந்திருக்கிற நமக்கு அரிசிமணிகளின் கண்களைச் சந்திக்கத் தெரியாமற் போனது ஆட்டை விட, உயிர்வரலாற்று இரத்த உறவில், அரிசிமணி விலகி இருப்பதால் அல்லவா?

  காந்தியார் பொறுத்துக் கொண்டதைப் பற்றியோ சுபாஷ் சந்திரபோஸ் பொங்கி எழுந்ததைப் பற்றியோ நான் பேசவில்லை. உடல் நோவுதான் ஹிம்சையா, மனநோவு கணக்கில் வராதா என்பதுதான் என் ஐய வினா. ஏனென்றால் மனநோவு வாய்ப்பில்லை என்று கணக்கு வைத்து, எங்களை அம்மணமாக்கித் தங்களது சுரணையின்மையை மீண்டும் மீண்டும் சோதித்துக் கொள்கிறார்கள் அரசியலாளர்.

  //காந்தியின் காலத்திற்குப் பின்பு நிகழ்ந்துவிட்ட இந்திய அரசியலுக்குக் காந்தியைப் பொறுப்பாக்கவேண்டுமானால், அதில் எனக்கும் உங்களுக்கும் பங்காகியுள்ள பொறுப்பைவிடக் குறைவானதாகத் தானே அவரை ஆக்க முடியும்?//

  மார்க்ஸின் காலத்துக்குப் பிறகு நிகழ்ந்துவிட்ட கம்யூனிஸ உலக அரசியலுக்கு ஸ்டாலினுக்கும் மாவோவிற்கும் இருந்ததைவிடக் குறைவாகத்தானே மார்க்ஸைப் பொறுப்பாக்க முடியும்?

  மோசஸின் காலத்துக்குப் பிறகு நிகழ்ந்துவிட்ட விவிலியத் திருத்தல்களுக்கு யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் உள்ளதைவிடக் குறைவாகத்தானே மோசஸைப் பொறுப்பாக்க முடியும்?

  (ஓரொரு மரமும் அதனதன் கனிகளால் அறியப்படும் என்றவர் யார்?)

  பின்னகர்ந்து குறுக்கினால் திருக்குர்ஆனைப் போலவே காந்தியமும் மார்க்ஸியமும் கூடப் படிதலுறக் காணலாம்.

  அந்தக் காலத்துக்கு அது சரி. ஆனால் இந்தக் காலத்துக்கு ஒரு திருக்கிர்ஆனோ, கீர்க்ஸியமோ அல்லது கீந்தியமோ தேவையாய் இருக்கக் கூடும். அது இன்னதென்ற தெளிவின்மையால் இன்று நாம் சோனியா காந்தீயத்திற்கே யோக்கியதைப் பட்டிருக்கிறோம். இதுதான் உண்மை.

  (இது ஒரு வழக்காடல்தான். நீங்களும் இதை வாசிக்க நேரும் உங்களை ஒத்த இளைஞர்களும் என்னிலும் சிறப்பாக வாதிக்க முடியும்.)

  ReplyDelete
 7. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி !

  மாசோக்கிஸத்தில் தன்னை வருத்திக்கொள்ளும் இயல்பு சொந்த இன்பத்திற்காகத் தானே அன்றி அதில் வேறெந்தக் குறிக்கோளும் இல்லையே. ஆண் ஒருவன் தன்னைப் புணரும் தருணத்தில் ஆப்பிரிக்கப் பெண் ஒருத்தித் தன் சுண்டு விரலைப் பற்களுக்கிடையில் வைத்து ரத்தம் கொட்டும் வரை கடிக்கிறாள். இப்படி ஒரு காட்சியை Moolade (2004) என்கிற ஆப்பிரிக்கப் படத்தில் கண்டேன். இதுதானே மாசோக்கிசம். தன்னை வருத்திக்கொள்வதில் ஏதொரு நோக்கமும் இல்லை, தன்னின்பத்தை மேலும் முடுக்கிப் பெருக்கிக்கொள்வதைத் தவிர. அத்தகைய இயல்போடு அஹிம்சாவாதிகளின் இயல்பைப் பொருத்திப் பார்ப்பது சரியாகத்தான் இருக்குமா என்பதை நீங்களே சொல்லுங்கள். அஹிம்சாவாதிகளுக்கு தம்முயிர் உள்பட எந்தவோர் உயிரையும் வதைக்கும் நோக்கம் இல்லை. ஆனால், அவ்வாறு வதையுறவேண்டிய சூழல் தம்மெதிர் நிற்குமெனில் அதற்காக துளியும் அச்சப்படுவதில்லை. பின்வாங்குவதுமில்லை.

  ஆம் அண்ணாச்சி ! பாலூட்டிகளையும் பறவைகளையும் கொல்வதே கொலையாகக் கருதப்படுகிறது. நுண்ணிய பொருளில் நம் வீட்டுக் கதவும் நிலவும் ’ஒரு பாடம் செய்யப்பட்ட காடு’ என்பதுதானே உண்மை ? நம் கதவு கொலை பட்ட உயிரேயன்றி வேறில்லை. தானாக இறந்து விழும் தென்னை ஓலையில்தான் நாம் நம் குடிலை அமைத்துக்கொள்ள வேண்டும்.

  மனவதையும் கணக்கில் வரும். ஆனால், நீங்கள் துவங்கியிருக்கும் இந்தப் பார்வையில் யார் இவற்றைப் பார்த்தார்கள் ? நித்யானந்தரைப் பற்றிய காணொளிச் செய்தி திருமண வாய்ப்பற்ற ஒவ்வொருவன் மீதும் நிகழ்த்தப்பட்ட மனவதையே.
  காந்தி ஆங்கிலேயரின் மீது நிகழ்த்திய யுத்தமும் அவன் மனதை நொறுங்க வதைத்த வகையைத்தான் சாரும். அந்த யுத்தத்தால் விளைந்த கனியின் மீது ஒரு பறவையைப் போல் நாம் அமர்ந்திருக்கிறோமா இல்லையா ?

  உங்கள் கேள்வியிலேயே கேள்விக்குறியை நீக்கிவிட்டால் கிடைப்பது பதில் தான். மார்க்சியக் குளறுபடிகளுக்கு ஸ்டாலினையும் மாவோவையும் விட மார்க்ஸைக் குறைவாகத்தான் பொறுப்பாக்க முடியும் !

  இதை இன்னும் தெளிவான உதாரணத்திற்கு எடுத்துச் செல்கிறேன்.

  இஸ்லாத்தின் பெயரால் அல்கொய்தா நடத்திய யுத்தத்திற்கு ஒசாமா பின்லேடனைத்தான் பொறுப்பாக்க முடியும் ! நபிகள் நாயகத்தையா பொறுப்பாக்க முடியும் ?

  ReplyDelete
 8. கவிஞரே , மன்னிக்கவும்
  //இந்த நேரத்தில் பெரியார் காப்பியத்தை எழுதவும் மாட்டேன் வெளியிடவும் மாட்டேன் என்று பதிப்பாளரிடம் தெரிவித்துவிட்டு அமர்ந்துவிட்டேன்//
  உங்களின் கோபத்தை மதிக்கிறேன்.
  காந்தியை மரபு செய்யுளில் வடித்தமைக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  வாசித்தவர்கள் எல்லோரும் பின்னூட்டம் இடவேண்டும் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
  பொதுவில் நான் இணையத்தில் அதிகம் படிக்கும் பழக்கம் இல்லாதவன் தற்போது பழகி கொண்டிருக்கிறேன். எத்தனயோ நல்ல பதிவுகளை(ஏகப்பட்ட குப்பையும் உண்டு) படிக்கிறேன்.
  ஆனால் அவைகளுக்கு எல்லாம் பின்னூட்டம் இட்டதில்லை. அதனால் நான் அதனை படிக்கவில்லை என்றோ நல்லாயில்லை என்றோ அர்த்தம் இல்லை.
  இணையத்தில் இதுவெல்லாம் சாதாரணம். புத்தங்களில் எவ்வளவோ நல்ல புத்தகங்கள் இருக்கு. அவையெல்லாம் கொண்டாடபடவேண்டாம் குறைந்த பட்சம்
  அதைபற்றிய பேச்சு கூட('இப்படி ஒரு புத்தகம் இருக்கா?') இல்லாமல் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்தவர் தானே. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு
  அப்படியான நல்ல புத்தங்கள் என்றாவது ஒரு நாள் படிக்க வேண்டும் என்று தாகம் எடுப்பவர்களுக்கு நிச்சயமாக தாகம் தணிக்கும். இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. பெரியாரின் காப்பியத்தை கொண்டு வாருங்கள். 'காந்தி அண்ணல்' போல் அதுவும் மிகவும் சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். நன்றி கவிஞரே

  ReplyDelete
 9. நான் வேல்கண்ணன் சொன்னதை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 10. சரிதான் நண்பர்களே ! இந்த விவகாரத்தை இதோடு முடித்துக்கொள்வோம்.

  வலுவான வாதங்களை முன்வைத்த அண்ணாச்சி ராஜசுந்தரராஜனுக்கு என் வந்தனமும் நன்றியும்.

  மற்றும் ஜெமினி, வேல்கண்ணன், செல்வராஜ் ஜெகதீசன் ! நன்றிகள்.

  ReplyDelete
 11. தவறி தவறி இன்றுதான் காந்தி செய்யுள்களை படித்து முடித்தேன் , மரபுகவி எனினும் புதுக்கவிதைக்குறிய பலவும் (இன்னதென்று சொல்ல தெரியவில்லை எனினு) .
  காந்தியை பிடிக்கும் , இப்போது இந்த பாக்ககளையும் உங்களையும் , நன்றி

  ReplyDelete
 12. கே.வி. அரங்கசாமி ! வாருங்கள். வரவேற்கிறேன் !

  ReplyDelete
 13. அன்பின் மகுடேஸ்வரன்,

  உங்கள் காந்தி காவியத்தையும் , பின்னூட்டங்களே இல்லையே என்ற உங்கள் ஆதங்கத்தையும் இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.
  காந்தி காவியம் ஆத்மார்த்தமான ஒரு மிக நல்ல முயற்சி. படிக்கும் பலருக்கும் பின்னூட்டமிடும் பொறுமை இருப்பதில்லை
  என்பதுதான் உண்மை. இதற்காக மனம் தளராமல் மற்ற பெருந்தலைவர்களைப் பற்றியும் எழுதவும்.

  மகாத்மாவைப் பற்றி நான் எழுதிய சில வரிகள் கீழே:

  வாழ்க நீ எம்மான்!
  http://cinemavirumbi.blogspot.in/2011/09/blog-post.html
  அண்ணலே!

  http://cinemavirumbi.blogspot.in/2009/11/blog-post.html

  நன்றி !

  சினிமா விரும்பி

  ReplyDelete