Saturday, February 5, 2011

சாயமிடும் தொழில் சாகும் எனில்...
முதலில் 
கையிலுள்ள தொகையைப் போட்டோம் 
பிறகு 
கடன் வாங்கிக் கொஞ்சம் போட்டோம் 
வங்கிக்கு 
நாய் பேயாய் அலைந்து 
கிடைத்த தொகையை எல்லாம் 
தொழிலில் 
போட்டுக்கொண்டே இருந்தோம் 

போதவில்லை 

கழுத்தில் இருந்தவற்றைக் 
கழற்றிப் போட்டோம் 
மனைவியின் 
கால்களைத் தொழுது அழுது 
தாலியையும் விற்று 
தொழிலில் போட்டோம் 

தொழில் செய்து ஈட்டியவை 
ஒருகாலத்தும் 
எம் முதலுக்கு அருகில் வந்திருக்கவில்லை 

முன்பு போலில்லை நிலைமை !
தொழிலாளியைக் 
கொஞ்சிக் கெஞ்சி வேலை வாங்குகிறோம் 
சொந்த வாகனத்தை அனுப்பி 
அவன் முற்றத்தில் காத்திருந்து 
அழைத்து  வருகிறோம் 
அனுப்பி வைக்கிறோம் 

நாங்களும் 
முன்னாள் விவசாயிகளே !
நாங்களும் 
மண்ணில் புரண்டெழுந்தவர்களே !
என்ன கொஞ்சம் முன்னதாய் 
மண்ணை விட்டு வெளியேறிவிட்டோம்  

இங்கே எதுவும் 
உவந்து ஏற்ற தொழிலில்லை 
ஊரோடு ஒத்துவாழ ஏற்றதுதான் 
உயிரோடிருக்க வேண்டுமென்று ஏற்றதுதான் 

ஈடுபட்ட தொழிலில் 
பாடுபட்டு உழைத்தோம் 
அதில் பாசாங்கு செய்தோமில்லை 

யாம் 
வண்ணமிட்ட துணிகள் 
வானவில்லைப் பழித்தன என்பது வரலாறு 
யாம் 
சாயமிட்ட துணிகள் 
சந்தையை வென்றன என்பது சரித்திரம் 

ஒன்றும் தெளிவாக இல்லை 

நதிகளை நாங்களா கெடுத்தோம் ?
நதிகளை 
நீரின்மை  கெடுத்தது !
நதிகள் 
இங்கே வெறும் பழைய நீர்த்தடங்களே. 

நீர்மம் பள்ளத்தை நோக்கித்தானே பாயும் !
மேட்டை நோக்கித் திருப்ப 
எம்மால்  எப்படி முடியும் ?

துரதிர்ஷ்ட வசமாக 
பள்ளத்தில் ஒரு நதிப்படுகை இருந்துவிட்டது 
அந்த நதித்தடத்தில் தான்
எங்கள் பாட்டனின் புதைமேடும் இருக்கிறது 

எங்கள் முன் 
உலகமயமாக்கல் என்னும் சவாலை 
நிறுத்தியிருக்கிறீர்கள்
அந்த யுத்தத்தில் 
நாங்கள் 
நிராயுதபாணியாக நின்றுகொண்டிருக்கும்போது 
நீங்கள் 
எங்கள் கெண்டைக்கால் நரம்பை வெட்டுகிறீர்கள் !

ஒன்றை மறவாதீர் !

தமிழகத்தில் 
ஊருக்கு நுறு பேர் 
உண்ணுவது 
திருப்பூர் போடும் சோற்றைத்தான். 

பேருந்தை விட்டிறங்கியதும் 
உங்களை 
ஒரு வேலைக்கு அழைத்துக்கொள்ளும் ஊர் இது. 

அரசே !
நீ இதுகாறும் வகித்த 
மௌன வேடம் போதும்.
இந்தக் கழிவை 
உன் கமண்டலத்தில் பிடி.
கடலில் கலப்பாயோ 
அல்லது 
காற்றில் கலப்பாயோ 
என்ன செய்யவேண்டுமோ அது 
உனக்கே தெரியும்.

7 comments:

 1. அரசாங்கக் காதுகளுக்கு மனிதர்களின் வாழ்க்கைத்துன்பங்கள் என்றைக்கும் எட்டியதே இல்லை.
  நன்றியில்லா அரசிடம் நல்லன எதிர்பார்த்தல் நம் தவறே.
  கொடுமைக்கு நேர்ந்து விடப்பட்ட சென்மங்கள் நாம்.

  ReplyDelete
 2. சாயக்கழிவு பற்றி உங்கள் பார்வையில் விஷயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். திருப்பூரில் நான் பார்த்திருக்கிறேன், குடிநீர் கூடச் சிவப்பாகத்தான் இருக்கும் சில இடங்களில்.

  திருப்பூர் நகரில் குடிநீர் மாசுபடுதல், அடுத்தடுத்து நடக்கும் தற்கொலைகள் இவை இரண்டும் அரசின் கவனத்தைப் பெற வேண்டும்.

  நான் ஆச்சரியப்படுவது என்னவென்றால், திருப்பூரில் நிறைய பதிவர்கள் உண்டு. யாரும் இப்பிரச்சனைகளைப் பற்றிப் பெரிதாக எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாதுதான். ஆனாலும் அதுகுறித்து எழுதாமல் இருக்கலாமா?

  அரசு - தனியார் இருவரும் ஒன்றுசேர்ந்து (public - private partnership)ஏதாவது செய்தால் இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்பது என் எண்ணம்.

  ReplyDelete
 3. சாயப்பட்டறை தொழிலாளர்கள்,முதலாளிகளின் நிலையையையும், அரசின் நிலையையும் உங்கள் பாணியில் சிறப்பாக கூறியுள்ளீர்கள்.தயாநிதிமாறன் எந்த துறைக்கு அமைச்சராக வந்தாலும் அந்த துறை வேகமாக வளர்ச்சி காண்பது உண்மையாகவே அவருடைய திறமையா..?! அல்லது சன் டிவியின் கைங்கர்யமா..?!

  ReplyDelete
 4. கவிஞருக்கு என் வணக்கங்கள்.. என் உள்ளத்தில் உள்ளதை நம் தரப்பின் வலியை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...

  ReplyDelete
 5. Till now nobody writes about tirupur dyeing factories real position. Since 1990 the dyeing factories spoil Tirupur, they rapes river Noyyal and agriculture in Tirupur. Those days dyeing factory owners earn very very much, and invest these in many assets and luxury lifE. Now they are crying for seeking govt help and for poor employees. They are acting. High court decision is correct and it will follow continously. Now many of them pity on labours, i agree but one thing we are Tirpur people our dynasity will remain in Tirupur. Tirupur Dyeing and hosiery owners dont mind it.

  ReplyDelete
 6. வடக்கு வாழ்கிறது ; தெற்கு தேய்கிறது..
  சரிதானே கவிஞரே ?
  ஆமதாபாத், சூரத், பம்பாயில் இதுபோன்ற தடைகள் ஏற்பட்டிருப்பின் அவர்களின் எதிர்விளைவுகள் நம்மைப் போல சப்பையாகவா இருந்திருக்கும்..?

  கேரளாவிற்குள் செல்லும் ரயில்களை ஒருநாளைக்குத் திருப்பூரில் நிறுத்திப் போராடினால் நம் பிரச்சினை இன்னும் வெளிச்சத்திற்கு வந்து தீர்வு கிடைக்காதா..?

  ReplyDelete
 7. அருமை பகிர்வுக்கு நன்றி அய்யா,,!

  ReplyDelete