Monday, March 28, 2011

நஞ்சுபுரம் பாடல்கள் – பாடலாசிரியர் குறிப்புகள்


நஞ்சுபுரம் பாடல்கள் – பாடலாசிரியர் குறிப்புகள்

1. ஊருல உனக்கொரு மேட :-

இந்தப் பாடல் கதைச் சூழல் மையம் பெற்று நிற்கையில் இடம்பெறுகிறது. புஷ்பவனம் குப்புசாமி மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறார். பாடல் பதிவகத்தில் இந்தப் பாடலைப் பாடி முடிக்க அவர் சுமார் நான்கு மணிநேரங்கள் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு வரியையும் தாம் கோத்து வைத்திருந்த துல்லியத்திற்குக் கொண்டுவரும்வரை இசையமைப்பாளர் ராகவ் அவரை விடவில்லை. கொஞ்சம் அயர்ந்தால் இந்தப் பாடல் வழக்கமான புஷ்பவனம் குப்புசாமி பாடலைப் போல் ஆகிவிடும் என்கிற ஆபத்தை ராகவ் உணர்ந்தேயிருந்ததால் அவர் அவ்வாறு மெனக்கெட்டார். பல்லவியும் அனுபல்லவியும் மெட்டுக்கேற்ப இயற்றப்பட்டது. சரணங்கள் யாவும் நான் எழுதித் தந்து பிறகு மெட்டமைக்கப்பட்டது. பாடலில் மூன்று சரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக நிறைய சரணங்களை எழுதினேன். இந்தப் பாடலை இயற்றித் தர என்னை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார் இயக்குநர் சார்லஸ். அங்கிருந்த குன்றின் முகட்டில் இருந்தபடி கீழேயிருந்த உலகைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியவரிகள்தாம் இவை:-

பார்க்கும் பார்வை பறவைப் பார்வையடா !

காணும் காட்சி கடவுள் காட்சியடா !

அனுபல்லவியின் வரிகள் மெட்டோடும் கதைச்சூழலோடும் சர்வ கச்சிதமாகப் பொருந்தியபோது நாங்கள் பரவச மனநிலைக்கு ஆளானோம் என்பதுதான் உண்மை. அவ்வரிகள் :-

பூமியெல்லாம் மைதானம்

பொட்டல்வெளித் தாம்பாளம்

ஆலகாலப் பரிகாரம்

அந்தரத்தில் சஞ்சாரம் !

மாத்துவது எளியது அல்ல ! மனம் மயங்கி ஆவதுமில்ல ! என்னும் வரிகள் ஒரு கிராமியப் பாடலில் மிகத் தோதாக வந்தமர்ந்துவிட்ட இடம் என்றும் அதைப் பாடுவதற்குச் சுகமாக இருந்தது என்றும் புஷ்பவனம் குப்புசாமி என்னிடம் குறிப்பிட்டார். பாடுவதற்காக வந்த புஷ்பவனம் குப்புசாமி, தம்மை இரண்டு மணிநேரங்களுக்குள்ளாக விட்டுவிடவேண்டும் என்றும் தமக்கு திண்டிவனத்தில் ஒரு கச்சேரி இருப்பதாகவும் ஒரு சின்ன வேண்டுகோளோடுதான் வந்திருந்தார். பாடலைப் பாடப் பாட அவர் நேரத்தை மறந்து முழுமையாகப் பாடி முடித்துவிட்டுத்தான் சென்றார். ஆக்கர் ஸ்டுடியோவில் இத்திரைப்படத்திற்குப் பணியாற்றிய நண்பர்கள் இப்பாடல் ஒரு பாடலாசிரியரால் இயற்றப்பட்டது என்பதை முதலில் நம்ப மறுத்தார்கள். இப்பாடல் நாட்டுப்புறத்தில் இன்றும் புழங்கிக்கொண்டிருக்கும் ஒரு கிராமியப் பாடலாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று அவர்கள் கருதியதாகச் சொன்னார்கள்.

2. தேளாகக் கொட்டுதம்மா

படத்தில் இடம்பெறும் டூயட் பாடல் இது. இந்தப் பாடலை இயல்பான திரைப்பாடல்களைப் போல் நெகிழ்வான சந்தப் பொருத்தமான சொற்களோடும், கொஞ்சம் இறுக்கமான இலக்கியத் தரமான சொற்றொடர்களோடு இருக்கும்படியாகவும் - கலந்து எழுதினேன். இதைப் போன்ற கல்யாண மனநிலையைச் சொல்லும் சோடிப் பாடல்கள் கொண்டாட்டத் தருணங்களைத் தம்மகத்தே கொண்டிருக்கும். ஆகையால், அமங்களச் சொற்களைப் பழைய பாடலாசியர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அந்த விதியை உடைக்கவேண்டும் என்றே என் முதல் வரியை இவ்வாறு அமைத்தேன்.

தேளாகக் கொட்டுதம்மா தேகத்தைக் காதல் கொடுக்கு !

இதே மெட்டில் வேறு பல வரிகள் எழுதியதில் உருவான வரிகள்

ஏதேதோ எண்ணம் வந்து நாளங்கள் தந்தியடிக்க...!

மீளாத பாதைக்குள்ளே நம்கால்கள் மெல்ல நடக்க...!

இவ்வரிகளை இழக்க மனமில்லாமல் பாடலில் அவசியம் சேருங்கள் என்று ராகவை நான் கேட்டுக்கொண்டதால் அவ்வரிகளும் பாடலில் உண்டு.

இந்தப் பாடலுக்கு முதலிரு வரிகள் முதலில் வேறொன்றாகத்தாம் இருந்தன. கடைசி நொடியில்தான் மாற்றப்பட்டது. பாடல் பதிவுக்குக் கிளம்பும் சமயம் இசையமைப்பாளர் ராகவ் தொலைபேசினார். பாடலின் முதல் வரிகளின் மெட்டு மாற்றப்பட்டிருப்பதாகவும் அதற்கேற்ப எழுதி வாருங்கள் என்றும் கூறினார். என்ன மெட்டு என்றதற்குப் பாடிக்காட்டினார். தொலைபேசி என்பதாலும் கிளம்பும் அவசரத்தில் இருந்ததாலும் எனக்கு தத்தகாரம் ஒன்றும் பிடிபடவில்லை. ‘நீங்களே ஒரு டம்மி வார்த்தை போட்டு பாடிக்காட்டுங்கஎன்றேன். உடனே ராகவ் ‘ஆத்தாடி நெஞ்சுக்குள்ளே காத்தாடி வீசியடிக்க என்றார். ‘ரைட். வரிகளோடு வருவோம்என்று அங்கேயே பத்துப் பதினைந்து வரிகள் எழுதி உடனிருந்த இயக்குநர் சார்லஸிடம் தந்துவிட்டேன். அவர் தேளாகக் கொட்டுதம்மா-வைத் தேர்ந்தெடுத்தார். படக்குழுவினர் பிறகு இப்பாடலைக் காதல் கொடுக்கு சாங்என்றே அழைக்கலாயினர்.

இந்தப் பாடல் முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது. ராகவ் சுலபமாக இருப்பதைப்போல் அல்லாமல் கொஞ்சம் கறாராகவே இப்பாடலுக்கு மெட்டமைத்திருந்தார். இந்தப் பாடலுக்கு ஏராளமான தாளக் கருவிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார். பாடல் பதிவின்போது தாளக் குழு ஒன்று ஆட்டோ நிறைய தோல் தாள வாத்தியங்களோடு வந்திறங்கி பதிவுக்கூடத்தையே நிறைத்துவிட்டது. இந்தப் பாடலை அர்ச்சித் என்னும் இளம் பாடகரும் ராகவின் மனைவி ப்ரீத்தாவும் பாடினர். இது பொய்யாகக் கூடாது ! பூநெஞ்சம் தாங்காதம்மா !என்னும் வரிகள் ராகவை அந்தரங்கமாகத் தீண்டின. அதற்கு அவர் சொன்ன காரணம் கொஞ்சம் வலியானது, இங்கே நான் பகிர்வதற்கில்லை.’’ ‘இந்தக் கற்றாழைப் பூவுக்குள் கருவண்டு தேன் தேடுதோ !என்னும் வரி இயக்குநருக்கு மிகவிருப்பம்.

புலன்களை அறிந்தது முதலுனை அறிந்தேன்

தனிமையில் இருந்துமென் அமைதியைத் தொலைத்தேன்

- என்னும் வரிகளும்

படர்கிற பசலையில் தளிருடல் மெலிந்தேன்

பாழ்நதி ஆகினேன் மனநலம் இழந்தேன்

- என்னும் வரிகளும் இப்பாடலில் எனக்கு விருப்பமானவை.

(மற்ற பாடல்களைப் பற்றி நாளை நான் மேலும் சொல்வேன்).

1 comment:

  1. //பாழ்நதி ஆகினேன் மனநலம் இழந்தேன்//
    நான் ஆகி இருக்கிறேன் கவிஞரே.

    உணர்வை வடித்ததற்க்கு நன்றி.

    ReplyDelete