
வறுமை ஏழ்மை – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?
வறுமை என்பது
வறண்ட வற்றிய நிலை.
ஏழ்மை என்பது
என்றும் இருந்திராத இன்மை நிலை.
குளம் கோடைக்காலத்தில் நீரற்று வற்றி வறண்டு இருக்கும்.
அது குளத்தின் வறுமை !
பாலை எல்லாக்காலத்தும் நீர் காணாது நிரந்தரமாக இன்மையில் வாடும்.
அது பாலையின் ஏழ்மை !
எப்போதும் இல்லாத நிலை ஏழ்மை.
இப்போது ஏற்பட்டு விட்ட இல்லாத நிலை வறுமை.
எப்பொழுதும் கொள்கையில்லாத அரசியல் கட்சிகள் ஏழ்மையானவை.

மலர், பூ – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?
மலர் மலராக ஆவதற்கு முன்பு இளநிலைகள் சிலவற்றைக் கடந்தாக வேண்டும். அரும்பு, முகை, போது என அவற்றுக்கு வரிசைப்படியான பெயர்கள் உண்டு. மலரான பிறகும் முதுமைப் பெயர்கள் (அலர், வீ) உண்டு. மலர்களுக்கு வாசனையே முதன்மைப் பயன். அவை கனியாகிப் பயன் தரும் தன்மையில் கொஞ்சம் பின் தங்கியே இருப்பன. மலர்ந்து மணம்பரப்பி வாடி உதிர்வதில் முதன்மையானவை. மலர்கள் பெரும்பாலும் பற்றிப் படரும் கொடிகளின் பிள்ளைகள்.
பூ மிக நேரடியான பரிணாமத்தை உடையது. அதீத எளிமையும் அதீத வன்மையும் உடைய தாவர வெளிப்பாடு. கொழிஞ்சிப்பூவும் துளசிப்பூவும் எளிமை வகை. தாழம்பூ, வாழைப்பூ, நாகலிங்கப்பூ, பூசணிப் பூ, சூரியகாந்திப் பூ, ஊமத்தம் பூ ஆகியன வன்மையின் வகை. நறுமணம் பரப்புவது பூக்களின் முதன்மையான நோக்கம் அன்று. பூக்கள் காயாகவும் கனியாகவும் பரிணாமம் எய்துவதில் முன் நிற்பவை. பூக்கள் பெரும்பாலும் மரங்களின் பிள்ளைகள்.

வண்ணம், நிறம் – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?
வண்ணம் தோற்ற நிலை.
நிறம் உள்ளிருந்து இயங்கும் நிலை.
வண்ணம் என்கிற தோற்ற நிலையை வகுத்துத் தருபவர்கள் வண்ணார்கள். நிறம் என்கிற உள்ளிருந்து இயங்கும் நிலையை நிறுவுபவர்கள் சாயமிடுபவர்கள்.
வானத்தின் நீல நிறம் அதன் பகல்வண்ணம். ஆனால், இரவு வானத்தின் கருவண்ணம் அதன் நிரந்தர நிறம் !
வெள்ளை நிறக்கற்றை வானவில்லில் ஏழு வண்ணங்களாகத் தோற்றமளிக்கிறது !

மனைவி, பெண்டாட்டி – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?
தன் மனைமாட்சியால் உன்னை மகிழ்விப்பவள் மனைவி.


















