Monday, March 28, 2011

நஞ்சுபுரம் பாடல்கள் – பாடலாசிரியர் குறிப்புகள்


நஞ்சுபுரம் பாடல்கள் – பாடலாசிரியர் குறிப்புகள்

1. ஊருல உனக்கொரு மேட :-

இந்தப் பாடல் கதைச் சூழல் மையம் பெற்று நிற்கையில் இடம்பெறுகிறது. புஷ்பவனம் குப்புசாமி மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறார். பாடல் பதிவகத்தில் இந்தப் பாடலைப் பாடி முடிக்க அவர் சுமார் நான்கு மணிநேரங்கள் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு வரியையும் தாம் கோத்து வைத்திருந்த துல்லியத்திற்குக் கொண்டுவரும்வரை இசையமைப்பாளர் ராகவ் அவரை விடவில்லை. கொஞ்சம் அயர்ந்தால் இந்தப் பாடல் வழக்கமான புஷ்பவனம் குப்புசாமி பாடலைப் போல் ஆகிவிடும் என்கிற ஆபத்தை ராகவ் உணர்ந்தேயிருந்ததால் அவர் அவ்வாறு மெனக்கெட்டார். பல்லவியும் அனுபல்லவியும் மெட்டுக்கேற்ப இயற்றப்பட்டது. சரணங்கள் யாவும் நான் எழுதித் தந்து பிறகு மெட்டமைக்கப்பட்டது. பாடலில் மூன்று சரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக நிறைய சரணங்களை எழுதினேன். இந்தப் பாடலை இயற்றித் தர என்னை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார் இயக்குநர் சார்லஸ். அங்கிருந்த குன்றின் முகட்டில் இருந்தபடி கீழேயிருந்த உலகைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியவரிகள்தாம் இவை:-

பார்க்கும் பார்வை பறவைப் பார்வையடா !

காணும் காட்சி கடவுள் காட்சியடா !

அனுபல்லவியின் வரிகள் மெட்டோடும் கதைச்சூழலோடும் சர்வ கச்சிதமாகப் பொருந்தியபோது நாங்கள் பரவச மனநிலைக்கு ஆளானோம் என்பதுதான் உண்மை. அவ்வரிகள் :-

பூமியெல்லாம் மைதானம்

பொட்டல்வெளித் தாம்பாளம்

ஆலகாலப் பரிகாரம்

அந்தரத்தில் சஞ்சாரம் !

மாத்துவது எளியது அல்ல ! மனம் மயங்கி ஆவதுமில்ல ! என்னும் வரிகள் ஒரு கிராமியப் பாடலில் மிகத் தோதாக வந்தமர்ந்துவிட்ட இடம் என்றும் அதைப் பாடுவதற்குச் சுகமாக இருந்தது என்றும் புஷ்பவனம் குப்புசாமி என்னிடம் குறிப்பிட்டார். பாடுவதற்காக வந்த புஷ்பவனம் குப்புசாமி, தம்மை இரண்டு மணிநேரங்களுக்குள்ளாக விட்டுவிடவேண்டும் என்றும் தமக்கு திண்டிவனத்தில் ஒரு கச்சேரி இருப்பதாகவும் ஒரு சின்ன வேண்டுகோளோடுதான் வந்திருந்தார். பாடலைப் பாடப் பாட அவர் நேரத்தை மறந்து முழுமையாகப் பாடி முடித்துவிட்டுத்தான் சென்றார். ஆக்கர் ஸ்டுடியோவில் இத்திரைப்படத்திற்குப் பணியாற்றிய நண்பர்கள் இப்பாடல் ஒரு பாடலாசிரியரால் இயற்றப்பட்டது என்பதை முதலில் நம்ப மறுத்தார்கள். இப்பாடல் நாட்டுப்புறத்தில் இன்றும் புழங்கிக்கொண்டிருக்கும் ஒரு கிராமியப் பாடலாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று அவர்கள் கருதியதாகச் சொன்னார்கள்.

2. தேளாகக் கொட்டுதம்மா

படத்தில் இடம்பெறும் டூயட் பாடல் இது. இந்தப் பாடலை இயல்பான திரைப்பாடல்களைப் போல் நெகிழ்வான சந்தப் பொருத்தமான சொற்களோடும், கொஞ்சம் இறுக்கமான இலக்கியத் தரமான சொற்றொடர்களோடு இருக்கும்படியாகவும் - கலந்து எழுதினேன். இதைப் போன்ற கல்யாண மனநிலையைச் சொல்லும் சோடிப் பாடல்கள் கொண்டாட்டத் தருணங்களைத் தம்மகத்தே கொண்டிருக்கும். ஆகையால், அமங்களச் சொற்களைப் பழைய பாடலாசியர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அந்த விதியை உடைக்கவேண்டும் என்றே என் முதல் வரியை இவ்வாறு அமைத்தேன்.

தேளாகக் கொட்டுதம்மா தேகத்தைக் காதல் கொடுக்கு !

இதே மெட்டில் வேறு பல வரிகள் எழுதியதில் உருவான வரிகள்

ஏதேதோ எண்ணம் வந்து நாளங்கள் தந்தியடிக்க...!

மீளாத பாதைக்குள்ளே நம்கால்கள் மெல்ல நடக்க...!

இவ்வரிகளை இழக்க மனமில்லாமல் பாடலில் அவசியம் சேருங்கள் என்று ராகவை நான் கேட்டுக்கொண்டதால் அவ்வரிகளும் பாடலில் உண்டு.

இந்தப் பாடலுக்கு முதலிரு வரிகள் முதலில் வேறொன்றாகத்தாம் இருந்தன. கடைசி நொடியில்தான் மாற்றப்பட்டது. பாடல் பதிவுக்குக் கிளம்பும் சமயம் இசையமைப்பாளர் ராகவ் தொலைபேசினார். பாடலின் முதல் வரிகளின் மெட்டு மாற்றப்பட்டிருப்பதாகவும் அதற்கேற்ப எழுதி வாருங்கள் என்றும் கூறினார். என்ன மெட்டு என்றதற்குப் பாடிக்காட்டினார். தொலைபேசி என்பதாலும் கிளம்பும் அவசரத்தில் இருந்ததாலும் எனக்கு தத்தகாரம் ஒன்றும் பிடிபடவில்லை. ‘நீங்களே ஒரு டம்மி வார்த்தை போட்டு பாடிக்காட்டுங்கஎன்றேன். உடனே ராகவ் ‘ஆத்தாடி நெஞ்சுக்குள்ளே காத்தாடி வீசியடிக்க என்றார். ‘ரைட். வரிகளோடு வருவோம்என்று அங்கேயே பத்துப் பதினைந்து வரிகள் எழுதி உடனிருந்த இயக்குநர் சார்லஸிடம் தந்துவிட்டேன். அவர் தேளாகக் கொட்டுதம்மா-வைத் தேர்ந்தெடுத்தார். படக்குழுவினர் பிறகு இப்பாடலைக் காதல் கொடுக்கு சாங்என்றே அழைக்கலாயினர்.

இந்தப் பாடல் முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது. ராகவ் சுலபமாக இருப்பதைப்போல் அல்லாமல் கொஞ்சம் கறாராகவே இப்பாடலுக்கு மெட்டமைத்திருந்தார். இந்தப் பாடலுக்கு ஏராளமான தாளக் கருவிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார். பாடல் பதிவின்போது தாளக் குழு ஒன்று ஆட்டோ நிறைய தோல் தாள வாத்தியங்களோடு வந்திறங்கி பதிவுக்கூடத்தையே நிறைத்துவிட்டது. இந்தப் பாடலை அர்ச்சித் என்னும் இளம் பாடகரும் ராகவின் மனைவி ப்ரீத்தாவும் பாடினர். இது பொய்யாகக் கூடாது ! பூநெஞ்சம் தாங்காதம்மா !என்னும் வரிகள் ராகவை அந்தரங்கமாகத் தீண்டின. அதற்கு அவர் சொன்ன காரணம் கொஞ்சம் வலியானது, இங்கே நான் பகிர்வதற்கில்லை.’’ ‘இந்தக் கற்றாழைப் பூவுக்குள் கருவண்டு தேன் தேடுதோ !என்னும் வரி இயக்குநருக்கு மிகவிருப்பம்.

புலன்களை அறிந்தது முதலுனை அறிந்தேன்

தனிமையில் இருந்துமென் அமைதியைத் தொலைத்தேன்

- என்னும் வரிகளும்

படர்கிற பசலையில் தளிருடல் மெலிந்தேன்

பாழ்நதி ஆகினேன் மனநலம் இழந்தேன்

- என்னும் வரிகளும் இப்பாடலில் எனக்கு விருப்பமானவை.

(மற்ற பாடல்களைப் பற்றி நாளை நான் மேலும் சொல்வேன்).

Saturday, March 26, 2011

நஞ்சுபுரம் பாடல்கள் - விமர்சனம்


பிரபல வலைத்தளமான ‘ஒசீயா’-வில் நஞ்சுபுரம் திரைப்படப் பாடல் இசைத் தொகுப்பின் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் பார்வையிடலாம்.
அதற்கான இணைப்பு




Saturday, March 19, 2011

நஞ்சுபுரம்


நஞ்சுபுரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 17.03.2011 அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் என்னைப் பாடலாசிரியராக இயக்குநர் சார்லஸ் அறிமுகப்படுத்துகிறார். படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறேன். படத்தின் நாயகன் ராகவ் இசையமைத்துள்ளார். மூத்த இயக்குநர் இராம. நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடுகிறது. படத்தின் முன்னோட்டக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பலரும் பார்த்திருப்பீர்கள்.

நஞ்சுபுரம் திரைப்பட உருவாக்கத்தில் பங்குபெற்றது எனக்குக் கிட்டிய மிக இனிய அனுபவம். மகத்தான நண்பர்கள் பலர் அங்கே எனக்குக் கிடைத்தார்கள். அவர்களுள் இயக்குநர் சார்லஸும் ராகவும் மிக முக்கியமானவர்கள். சார்லஸின் உதவியாளர்கள் பாஸ்கர், கண்ணன், அதி, பால் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆண்டனி போன்றவர்களும் என் ஞாபகத்தில் என்றும் ஆசனமிட்டு அமர்ந்திருப்பவர்கள்.


திரையுலகில் பலரையும் நான் சந்தித்ததுண்டு. அவர்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்த சார்லஸ் மிக வித்தியாசமானவர். அவர் அதிகம் பேச மாட்டார். ஒவ்வொரு வாக்கியத்தையும் முடிக்கும் முன்பாக வசீகரமாகப் புன்னகைப்பார். குறைவாகப் பேசுகின்றவர்களின் திரைமொழி வன்மையாக இருக்கும் என்பதற்கு மணிரத்னம், பாலா போன்றவர்கள் உதாரணம். இசைவெளியீட்டுக்கு முந்தைய நாள்தான் நான் நஞ்சுபுரத்தைப் பார்த்தேன். சார்லஸின் திரைமொழியில் அதே வன்மையைக் கண்டேன்.

அவருடைய உலகத் திரைப்பட ஞானம் குறித்து வலையுலக வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். திரைப்படக் கல்லூரியில் திரைக்கலையைப் பாடமாகப் பயின்று, நிறைய இயக்குநர்களிடம் பயிற்சி பெற்று, ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களை இயக்கித் தம்மை முழுமையாகத் தகுதிப்படுத்திக்கொண்டவர் அவர். நஞ்சுபுரம் திரைப்படத்தை உருவாக்க அவர்முன் இருந்த வசதிகளைவிடவும் வரம்புகள்தாம் அதிகம். அந்த அளவீடுகளுக்குள் அவர் எத்துணை சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் எங்களை வியப்பிலாழ்த்திய விஷயம்.



நஞ்சுபுரம் படம் உருவாக்கத்தில் இருந்த காலகட்டத்தில் சார்லஸுடன் ஏராளமான உரையாடல்களை நேரிலும் செல்பேசியிலும் நிகழ்த்தியிருக்கிறேன். அந்தத் தருணங்களிலெல்லாம் அவர் உண்மைக்கு வெளியே ஒரு சொற்றொடரைக் கூடப் பயன்படுத்தியதில்லை. ஒரு தவறான வாக்கு அவர் வாய் தவறியும் வந்ததில்லை. நிலைமைக்கு மாறாக ஏதொன்றையும் மிகையாகவோ குறையாகவோ அவர் சொல்லவில்லை. இந்தப் பண்புதான் அவர் மீது என் அன்பைப் பெருக்கியது. திரையுலகில் இத்தகைய உண்மையும் நேர்மையும் உள்ளவர்கள் மிகவும் அரிதாக மட்டுமே காணக்கூடியவர்கள். படப்பிடிப்பில், வாய் நுரைக்கும் வரை காட்சிகளை விவரித்து, இரவும் பகலும் கணநேர ஓய்வின்றி இயக்கிய சார்லஸின் அந்த அசுர உழைப்பைக் கண்டு பிரமித்துவிட்டேன். அந்த நிமிடம் முதல் திரையுலகின் மீது நான் கொண்டிருந்த இரக்கமற்ற என் விமர்சனப் பார்வையை முற்றாக மாற்றிக்கொண்டேன். என்னோடு அமர்ந்து நஞ்சுபுரம் படத்தைப் பார்த்த வசந்தகுமார் அண்ணாச்சி சார்லஸைப் பற்றி சொன்ன வாசகம் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. அவர் சொன்னது, ‘இவர் ஒரு இயக்குநராகத் தேறி முன்னணிக்கு வரக்கூடியவர்தான். இந்தப் படத்தை இவர் ஹேண்டில் செய்துள்ள விதம் அருமை. படத்தில் நாவல்டியான அம்சங்கள் நிறைய’’ என்றார்.

படத்தைப் பற்றி நான் நிறைய சொல்லலாம். ஆனால், அதற்கு நீங்கள் படம் வெளியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும். படத்தில் நிறைய பாம்புகள் வருகின்றனவே, அதனால் இது ஒரு வழக்கமான பாம்புப் படமோ என்று ஐயுற வேண்டாம். அது ஜுராசிக் பார்க் படத்தை ஒரு டினோசர் படம் என்று அடையாளப்படுத்திக் கொள்வது போல் எளிமையானது.

(விழாபற்றிய மேலதிக புகைப்படங்களும் காணொளிகளும் பல்வேறு இணையப் பக்கங்களில் காணலாம்)

Friday, February 25, 2011

நாஞ்சில் நாடன் படைப்புகள் குறித்து...


நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு - அப்படைப்பாளி வீரியத்துடன் இயங்கிய படைப்பு வகைக்கு விருது கொடுப்பது என்பதெல்லாம் எப்பொழுதாவது நடக்கும் அதிசயம்தான்.

பாரதிதாசனுக்கு அவருடைய கவிதைக்கு விருது தராமல் பிசிராந்தையார் என்கிற நாடக நூலுக்குக் கொடுத்தார்கள். கண்ணதாசனுக்கும் - ஏன் வைரமுத்துவுக்கும் கூட, அவருடைய கவிதைக்கு விருது தராமல் உரைநடை எழுத்துக்குக் கொடுத்தார்கள். அத்தகைய அபகீர்த்திக்கெல்லாம் ஆளாகாமல் சிறந்த சிறுகதை எழுத்தாளராகிய நாஞ்சில் நாடன் சிறுகதைக்காகவே அரசாங்க விருதைப் பெற்றிருக்கிறார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிரதானமாக சிறுகதைகளில் இயங்கி வந்தார். நா. பார்த்தசாரதியின் தீபம் இதழ் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய நன்கொடை நம் நாஞ்சில் நாடன். பிறகு நாவல்களின் உலகத்திற்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் புதுப்பெண்கள் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறுகதையாகப் பேசுபவர்கள் போகப்போக பெருங்குரலெடுத்துப் பேசுவதைப் போல - சிறுகதை எழுதி எழுதி எழுத்தின் சைஸ் பெரிசானதாலும் பேனா பேப்பரின் மீது நழுவிச்செல்லும் வேகம் அதிகரித்ததாலும் சிலர் நாவல் எழுத ஆரம்பிப்பார்கள். நாஞ்சில் நாடன் அத்தகைய சொந்த இச்சையால் மொந்தை மொந்தையாக எழுதி நம்மை சிரமப்படுத்தாமல் சிறுகதைக்குரிய பொருள்களை மீறிய அரும்பெரும் வாழ்க்கைச் சித்திரங்களை வரைய வேண்டிய இலக்கியப் பொருள்கள் அவர்முன் நின்றமையால் நாவல் எழுத வந்தவர். நாவல்களில் தம்முடைய வெற்றிக்கொடியை நன்றாக நிலைநாட்டினார். தேசத்தின் பாதைகள் முழுவதும் பயணித்து, சொந்த ஊரின் வேர்ப்பற்றை - பாசத்தைத் துண்டித்தெறிய முடியாமல் வாழ்ந்து வதைபடும் மனித மனத்தை அவருடைய நாவல்களில் துலக்கமாகத் தரிசிக்கலாம்.

பிறகு அவர் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள் நாவல்கள் எழுத எதையாவது கூறத் துடிக்கும் மனம் போதும். ஆனால், கட்டுரைகள் எழுத அந்த எழுத்தார்வம் ஒரு விழுக்காடு கூட உதவாது. கட்டுரை எழுதுவதற்கு மூளை முழுக்க அறிவுத் தகவலகளும் பகுத்துக் கூறும் பாங்கும் பொங்கி நிறைந்திருக்க வேண்டும். ஒரு நாளின் பேருந்துப் பயணத்தைச் சிறுகதையாக எழுதிவிடலாம். நம் வாழ்க்கை முழுக்க நாம் பேருந்துகளில் பயணம் செய்த அனுபவங்களைத் திரட்டி நாவலாக எழுதிவிடலாம். ஆனால், கட்டுரை எழுதுவதற்கு பேருந்துப் பயணமும் ஜன்னலோரக் காட்சிகளும் போதாதவை. அந்தப் பேருந்து எவ்வாறு கட்டி அமைக்கப்பெற்றிருக்கிறது, அது இயங்குவதற்கான பொறியியல் இயக்கவியல் நுட்பங்கள் என்னென்ன என்கிற விரிவான அறிவும் கட்டுரை எழுதுவதற்கு வேண்டும். அதனால்தான், தேர்ந்த கதாசிரியர்கள் பலர் வெற்றிகரமான கட்டுரைக்காரரர்களாக இல்லை. நாஞ்சில் நாடன் இதில் தனித்த விதிவிலக்கானார்.

எங்களைப்போன்ற பலர் கவிதைகள் மட்டுமே எழுதிவந்தோம். நாங்கள் சிறுகதை நாவல்கள் எழுதுவதில்லை. முதல் காரணம் லேபர் காஸ்ட் எங்களுக்குக் கட்டுபடியாகாது. கவிதை எழுதுவதற்கு பேனாவையும் பேப்பரையும் கையில் வைத்துக்கொண்டு வடகிழக்கு மூலையைப் பார்த்துக்கொண்டு யோசித்தபடி போஸ் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் போதும், அவ்வப்போது ஒரே ஒரு வார்த்தை தோன்றும் அல்லது ஒரே ஒரு வரி தோன்றும், அதை அப்படியே தாளில் குறித்துக்கொண்டு மீண்டும் வடகிழக்கைப் பார்க்க ஆரம்பிக்கலாம். ஆனால், கதைகள் எழுதுவதற்கு யோசிப்பதோடு மட்டுமல்லாமல் மாங்குமாங்கு என்று எழுதவேண்டும். நம்மால் அது முடியாது. அதோடு மட்டுமல்ல, கவிதை எழுதி முடித்துவிட்டால் அடுத்து நிம்மதியாகத் தூங்கலாம், அந்தப் படைப்பழுத்தத்திலிருந்து விடுபட்டு வேறு வேலை பார்க்கலாம். எழுதி முடிக்கப்பட்ட கவிதை நல்ல உறக்கத்தைத் தந்துவிடுகிறது. ஆனால், சிறுகதை நாவல்கள் எழுதத் துவங்கிவிட்டால் அது அன்றைக்கோ, அடுத்தடுத்த நாள்களிலோ முடிந்துவிடுவதில்லை. பேரழகியைக் காணக்கூடாத கோலத்தில் கண்டுவிட்ட மாதிரி அன்றிலிருந்து உறங்கவே முடியாது. எழுதுவதும் நாள்கணக்கில் மாதக்கணக்கில் நின்று நகரும். உறக்கமும் நிம்மதியும் தொலைந்துவிடும். இந்த அவஸ்தைகள் எமக்கு ஆகிறதில்லை என்பதால் நாங்கள் நாவல் எழுதவில்லை. ஆனால், நாஞ்சில் நாடன் கட்டுரை கதை வடிவங்களோடு நின்றுவிடாமல் கவிதையும் எழுதலானார். இதை ரிலையன்ஸ் கம்பெனிக்காரன் மளிகைக் கடை வியாபாரத்திலும் இறங்கியதோடு ஒப்பிடலாம்.

சரி, நாஞ்சில் நாடன் கவிதை எழுதுகிறார் என்றதும் நாங்களெல்லாம் உஷாரானோம். அப்படி என்னத்தை எழுதிவிடப் போகிறார் என்றும் நாங்களெல்லாம் மூளையைப் பிசைந்து எழுதாத பொருள்களை அவர்மட்டும் எப்படிக் கண்டுபிடித்து வழங்கப் போகிறார் என்றும் ஆர்வமாகக் கவனித்தோம். வலப்பக்கக் கடல்மணலை இடப்பக்கம் இறைத்திறைத்து நகக்கணுக்கள் வலிக்கின்றன... அடியே வா ! என்றெல்லாம் அவர் வயதுக்கு எழுதினால் நன்றாகவா இருக்கும் என்றும் கவலைப் பட்டோம். ஆனால், நாஞ்சில் நாடன் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பச்சை நாயகி என்கின்ற அவருடைய கவிதை.

எங்கெனத் தேடுவதுன்

எழுலார்ந்த பொன்முகத்தை ?

காற்று வெளியதனுள், ககன விதானத்து,

பைந்நாகப் பாய்விரித்த பாற்கடலில் ?

யாண்டு செவிப்படுமுன் தேமதுரத் தமிழோசை ?

மைனா கிளி தேன்சிட்டு கானக்கருங்குயில்

வால் நீண்ட கரிக்குருவி, குருசு, மீன்கொத்தி யாவும்

கீசு கீசெனக் கலந்த அரவத்து ?

எவண்நுகரக் கிடைக்குமுன் மேனி நன்வாசம் ?

வேங்கை புங்கு நுணா வனப்பிச்சி

கமுகு புன்னை மலர்க்கூட்டம்

அடர்ந்து கிடக்கும் அருங்காட்டில் ?

தானாய்த் தென்பட்டால் அன்றித்

தேடுவது எங்ஙனம் ?

உன்னருளாலே உன் தோள் புல்லி

கூடுவதெப்போ சிலம்பார்க்கும் பூவடியை ?

துள்ளும் துடியிடையும் தோகைமயில் நடையும்

பவள இதழும் என்று பார்ப்பேன் என

குணங்குடி மஸ்தான் தேடிய மனோன்மணி

இந்த மனதை வைத்துக்கொண்டு

ஒன்றும் செய்ய முடியாது எனப்

பதைத்த நகுலனுக்கு சுசீலா

கொடுங்காற்றினில் கடும் மழையதனில்

காய்ச்சும் கதிரொளியில்

கலங்கிக் கிடந்தவென் கண்ணுக்கு

கானகத்துப் பச்சை நாயகி !

நாஞ்சில் நாடனிடமிருந்து கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுக் கிளைகளில் மொழித்தேனீ கட்டிய தேனடைகளாகத் தோன்றுகின்றன. கவிஞன் என்பவன் மொழியை ஆயுதமாகச் சுழற்றத் தெரிந்தவன். நாஞ்சில் நாடனின் கவிதைகளில் புழங்கும் மொழி இன்று தமிழில் இயங்குகிற எந்தவொரு நவீன கவிஞனின் மொழியைவிடவும் மேம்பட்டது. இத்தனை காலம் இவர் ஏன் இந்த மொழியைக் கவிதைப் புலத்தில் இயக்கிக் காட்டவில்லை என்பது ஆச்சர்யமே.

நாஞ்சில் நாடன் எவ்வொரு கவிஞனை விடவும் அதிகமான சங்க இலக்கியப் பரிச்சயம் உடையவர். சங்க இலக்கியத்தில் எமக்கேதும் ஐயம் என்றால் அவரை அழைக்கலாம். அது தொடர்பான நூல்கள் எவை என வினவலாம். அதற்கு அவருடைய கவிதைகள் எல்லாமே ஆசிரியப்பாவின் அகவலோசையோடு இருப்பதுவே சாட்சி. மரபுச் சொற்றொடர்கள் கவிதைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன.

நம் கவிஞர்களை, ஒரு மரபான முன் தொடர்ச்சியை இனங்கண்டு அடையாளம் காணலாம். ஞானக்கூத்தன் போன்றவர்கள் கவி காளமேகத்தின் பரம்பரை என்று சொல்லலாம். பாரதிதாசன் பரம்பரை என்று ஒரு கவிஞர்கள் வரிசை இருக்கிறது. பாரதியாரைத் தமிழ்ச் சித்தர்களின் பரம்பரை என்று வகுப்பார்கள்.

தம்முன்பாக இருந்த வன்மையான நிறுவனங்களை எல்லாம் எதிர்த்துக்கொண்டு எல்லாவற்றையும் அதன் வேரோடு நோண்டியெடுத்து விமர்சிக்கின்ற, அந்த விமர்சனங்களை எந்தப் பயமும் இல்லாமல் முன்வைக்கின்ற, முற்றும் உணர்ந்த, முழுமையும் துறந்த ஒரு மனோபாவம் சித்தர் கவிதைகளின் இயல்பு. பாரதியார் வகுத்துக்கொண்ட அதே சித்தர் பரம்பரைப் பாதையைத் தமிழ் நவீன கவிதையுலகில் தனக்கென வரித்துக்கொண்ட கவிஞராக நாஞ்சில் நாடனை நான் இனங்காண்கின்றேன்.

· (கடந்த 23.02.2011 அன்று, ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் படைப்புகள் குறித்த கருத்தரங்கில் கவிஞர் மகுடேசுவரன் ஆற்றிய உரை)

Saturday, February 5, 2011

சாயமிடும் தொழில் சாகும் எனில்...




முதலில் 
கையிலுள்ள தொகையைப் போட்டோம் 
பிறகு 
கடன் வாங்கிக் கொஞ்சம் போட்டோம் 
வங்கிக்கு 
நாய் பேயாய் அலைந்து 
கிடைத்த தொகையை எல்லாம் 
தொழிலில் 
போட்டுக்கொண்டே இருந்தோம் 

போதவில்லை 

கழுத்தில் இருந்தவற்றைக் 
கழற்றிப் போட்டோம் 
மனைவியின் 
கால்களைத் தொழுது அழுது 
தாலியையும் விற்று 
தொழிலில் போட்டோம் 

தொழில் செய்து ஈட்டியவை 
ஒருகாலத்தும் 
எம் முதலுக்கு அருகில் வந்திருக்கவில்லை 

முன்பு போலில்லை நிலைமை !
தொழிலாளியைக் 
கொஞ்சிக் கெஞ்சி வேலை வாங்குகிறோம் 
சொந்த வாகனத்தை அனுப்பி 
அவன் முற்றத்தில் காத்திருந்து 
அழைத்து  வருகிறோம் 
அனுப்பி வைக்கிறோம் 

நாங்களும் 
முன்னாள் விவசாயிகளே !
நாங்களும் 
மண்ணில் புரண்டெழுந்தவர்களே !
என்ன கொஞ்சம் முன்னதாய் 
மண்ணை விட்டு வெளியேறிவிட்டோம்  

இங்கே எதுவும் 
உவந்து ஏற்ற தொழிலில்லை 
ஊரோடு ஒத்துவாழ ஏற்றதுதான் 
உயிரோடிருக்க வேண்டுமென்று ஏற்றதுதான் 

ஈடுபட்ட தொழிலில் 
பாடுபட்டு உழைத்தோம் 
அதில் பாசாங்கு செய்தோமில்லை 

யாம் 
வண்ணமிட்ட துணிகள் 
வானவில்லைப் பழித்தன என்பது வரலாறு 
யாம் 
சாயமிட்ட துணிகள் 
சந்தையை வென்றன என்பது சரித்திரம் 

ஒன்றும் தெளிவாக இல்லை 

நதிகளை நாங்களா கெடுத்தோம் ?
நதிகளை 
நீரின்மை  கெடுத்தது !
நதிகள் 
இங்கே வெறும் பழைய நீர்த்தடங்களே. 

நீர்மம் பள்ளத்தை நோக்கித்தானே பாயும் !
மேட்டை நோக்கித் திருப்ப 
எம்மால்  எப்படி முடியும் ?

துரதிர்ஷ்ட வசமாக 
பள்ளத்தில் ஒரு நதிப்படுகை இருந்துவிட்டது 
அந்த நதித்தடத்தில் தான்
எங்கள் பாட்டனின் புதைமேடும் இருக்கிறது 

எங்கள் முன் 
உலகமயமாக்கல் என்னும் சவாலை 
நிறுத்தியிருக்கிறீர்கள்
அந்த யுத்தத்தில் 
நாங்கள் 
நிராயுதபாணியாக நின்றுகொண்டிருக்கும்போது 
நீங்கள் 
எங்கள் கெண்டைக்கால் நரம்பை வெட்டுகிறீர்கள் !

ஒன்றை மறவாதீர் !

தமிழகத்தில் 
ஊருக்கு நுறு பேர் 
உண்ணுவது 
திருப்பூர் போடும் சோற்றைத்தான். 

பேருந்தை விட்டிறங்கியதும் 
உங்களை 
ஒரு வேலைக்கு அழைத்துக்கொள்ளும் ஊர் இது. 

அரசே !
நீ இதுகாறும் வகித்த 
மௌன வேடம் போதும்.
இந்தக் கழிவை 
உன் கமண்டலத்தில் பிடி.
கடலில் கலப்பாயோ 
அல்லது 
காற்றில் கலப்பாயோ 
என்ன செய்யவேண்டுமோ அது 
உனக்கே தெரியும்.

Saturday, January 22, 2011

எதிர் உறவு


எதிர் உறவு

  •  

கிழக்கிலிருந்து

மேற்காகச் செல்கிறது

கதிர்

 

அதன்

அடியொற்றி வாழும்

நிழல்

என்றும் சென்றுகொண்டிருக்கிறது

மேற்கிலிருந்து கிழக்காக 

Wednesday, January 19, 2011

தமிழில் படிக்க வேண்டிய புத்தகங்கள்



எழுத்தாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் புத்தகங்களின் பட்டியல் குறித்துக் கூறுவதற்கு என்னிடம் சில கருத்துகள் இருக்கின்றன.

அவர்கள் தம் பட்டியல் படைப்பிலக்கியம் சார்ந்திருப்பதாகக் கூறுவதுண்டு. அப்படியே ஆயினும் அதில் அபிதான சிந்தாமணி போன்ற நூல்களை எல்லாம் சேர்த்துச் சொல்வதை மடமை என்றுதான் சொல்ல வேண்டும்.   அபிதான சிந்தாமணியைப் படித்து முடிக்கிறேன் என்று எந்த வாசகனாவது அமர்ந்தால் அவன் அதை எத்தனை காலத்திற்குப் படித்துக்கொண்டிருப்பான் ? அதைப் படிக்க முன்னெடுக்கும்  முயற்சியில் மூலதனத்தை மூன்று முறை படித்து முடித்துவிடலாம். தமிழ்ப் பெயர்ச்சொல் அகரமுதலியான அபிதான சிந்தாமணியை இளநிலை வாசகனுக்குக் கொடுத்துப் படி என்றால் அவன் தலைதெறிக்க ஓடி ஒளிந்துகொள்ள மாட்டானா ? விக்கிபீடியாவில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் படிக்கவேண்டிய பட்டியலில் முதலாகக் குறிப்பிடுவதைப் போன்ற அபத்தம் இது.

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகத்தை மிக எளிதாக வகைப்படுத்தலாம். அந்த வகையை முன்வைத்துத் தமிழ் இலக்கிய உலகத்தையே ஒருவன் கரைத்துக் குடித்தும் விடலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான தமிழ்ப் படைப்புலகம் செய்யுள் உலகம். செய்யுள் நூல்களில் சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், கதைக் காவியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என வகைக்குக் கொஞ்சமும் கணிசமும் இருக்கின்றன. இந்த நூல்களில் உள்ள மிகச்சிறந்த பகுதிகள் எனக் கருதத்தக்க ஆக்கங்களும் பாக்களும் கொங்குதேர் வாழ்க்கைஎன்ற பெருந்தொகையாகத் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதியைக் கைவிளக்காகக் கொண்டு ஓர் இலக்கிய வாசகன் பன்னூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களை அணுக முடியும். அந்த மாதிரிப் பாக்களில் எவையெவை அவனுக்கு விருப்பமாகவும் சுவையாகவும் உள்ளனவோ அவற்றைத் தேடி அவன் நேரடியாக மூழ்கலாம்.



அடுத்துத் தமிழின் நவீன கால மரபுச் செய்யுள்களும் மரபைத் துறந்த புதுக்கவிதைகளும் உள்ளன. தமிழில் கடந்த நூறாண்டுகளாக எழுதப்பட்ட மிகச் சிறந்த புதுக்கவிதைகளின் தொகுப்பும் அதே போல கொங்குதேர் வாழ்க்கை இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்றிருக்கக் கிடைக்கிறது. அந்தத் தொகுதியின் வழியாகத் தமிழ்ப் புதுக்கவிஞர்களை மாதிரி தேர்ந்து அடையலாம். அவ்வாறு சென்றடையும் ஒரு கவிஞனின் கவிதைத் தொகுதியைப் படித்து முடிக்க அதிகபட்சம் அரைமணி நேரம் ஆகும். அவ்வளவுதான். அதற்கும் மேலான நெடுங்குரலெடுத்து இங்கே யாரும் நீட்டி முழக்கவில்லை. எந்தத் தமிழ் நவீன கவிஞனின் வாழ்நாள் முழுமையுமான படைப்புகளையும் அமர்ந்து படித்தால் இரண்டொரு தினங்களில் முடிக்கலாம்.

உரைநடை எழுத்துகளில் அடுத்து எஞ்சுபவை கதைகளும் கட்டுரைகளும்.

என்னதான் அகலமான அளவுகோல்களை வைத்து அளந்தாலும் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என ஓராயிரம் (1000) மட்டுமே இருக்கின்றன. அவற்றைத் தேடுவதற்கோ கண்டடையவோ யாருக்கும் யாதொரு சிரமமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லாச் சிறுகதைகளும் அந்தந்த ஆசிரியர்களின் பெயரில் முழுத்தொகுதியாக வந்திருக்கின்றன. வந்துகொண்டுமிருக்கின்றன. சிறந்த சிறுகதைகளின் தேர்ந்த தொகுப்புகளும் வந்திருக்கின்றன. விட்டல்ராவ் (இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்), மாலன் (அன்று), தீபம் சிறுகதைகள், கணையாழி கதைகள் என அவை கிடைக்கின்றன. அவற்றின் வழிச் சென்றாலே போதும். தமிழ்ச் சிறுகதை உலகைக் கடைந்து எண்ணெய் எடுத்துவிடலாம்.

அப்புறம் தமிழ் நாவல்களின் உலகம். Thousand things to do before you die என்று கூட எப்படியாவது பட்டியலிட்டுவிடலாம். ஆனால், நாம் படித்தேயாகவேண்டிய நாவல்களைப் பட்டியலிட்டால் வெறும் நூறு என்ற எண்ணிக்கைக்குள்ளாகவே முடியும். அவற்றில் பத்திருபதை ஏற்கனவே படித்திருப்போம். மீதம் உள்ளனவற்றையும் மெதுவாகப் படித்துவிடலாம். இதோடு விஷயம் முடிந்தது.



தமிழில் பாரதிக்கு அடுத்து மிகச் சிறந்த மரபுக்கவிஞர் யார் என்றால் அவர் முடியரசன் தான். முடியரசன் கவிதைகள் முழுத்தொகுதி எங்கு கிடைக்கிறது ? எங்கும் கிடைக்காது என நினைக்கிறேன். கண்ணதாசனைவிடவும் பாரதிதாசனைவிடவும் முடியரசன் கவிதைகள் மேன்மையானவை. தமிழில் இயற்றப்பட்ட மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளில் சிகரம் போன்றது என்றால் அது மனோன்மணீயம் என்னும் நாடகக் காப்பியமே ! இதை இதுவரை யாராவது சொன்னார்களா என்று என் நினைவுக்கெட்டியவரை துழாவிப் பார்த்தேன். நாம் வணங்கிப் பாடும் தமிழ்த் தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த என்னும் பாடல் அந்நூலில்தானே இடம்பெற்றிருக்கிறது ! திரு. வி. க. வுக்கு நிகரான  தமிழ்க் கட்டுரையாளர் ஒருவர் நம் காலத்தில் இருக்கிறார் என்றால் அவர் கரு. ஆறுமுகத்தமிழன். அவரை ஏன் ஒருவரும் இனங்காட்டவில்லை ?

கட்டுரைகள், சுயசரிதைகள், மொழிபெயர்ப்புகள், அறிவியல்-வரலாறு-பொருளாதாரம்-அரசியல் என இனி மீதமுள்ள துறைகள்தாம் தமிழின் சாபக்கேடான இயல் துறைகள். ஆனால், இலக்கியத்தினின்று அகன்று ஒவ்வொரு அறிவுத் தேனீயும் பறந்து பறந்து நுகர வேண்டிய நூல்களெல்லாம் இவ்வகைப் பட்ட துறைகளுக்குள்ளே தாம் இருக்கவேண்டும். ஆனால், உண்மை நிலை இதற்கு நேர்மாறானது. இத்துறைகளில் வியக்கத்தக்க ஆளுமைகளால் இயற்றப்பட்ட தன்னிகரற்ற நூல்களுக்கு நம் மொழியில் பெரும் பஞ்சம் நிலவுவதைத்தான் நாம் காண்கிறோம்.

அட, ரொம்ப வேண்டா ! “ அருமையான தமிழில் சிறப்பாக விளக்கி எழுதப்பட்ட, எளிதில் பின்பற்றத்தக்க, நம்பகமான - நல்ல சமையல் கலை நூல் என்று ஒன்றைச் சொல்ல முடியுமா ?