Thursday, May 19, 2011

மொழியறிவற்றவன் எவ்வாறு எழுதுவான் ?


மொழியறிந்தவனுக்கும் மொழியறியாப் பேதைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கண்டுகொள்வது நமக்கு மிகுந்த பயனளிக்கும். மொழிப்புலமை துளியளவு கூட இல்லாதவனும் அதற்கான முனைப்பை எள்ளளவேனும் காட்டத் தயங்குபவனும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என நம்மிடையே உலவுகின்றனர். தேவையற்ற புகழ்ச்சிக்கு அத்தகையோரை ஆளாக்கி அவர்களையும் துன்புறுத்த வேண்டா. நாமும் துன்புற வேண்டியதில்லை.

நம் ஆழ்மனத்தில் கருந்திமிங்கலமாக நாம் பயன்படுத்தும் மொழி வீற்றிருக்கின்றது. பெருந்தொகையான புத்தகங்களில் எறும்புச் சாரையாக அச்சிடப்பட்டிருக்கும் அமிழ்தினும் இனிய தமிழ் மொழி, உயிர்ப்போடு உலவுமிடம் - அதைப் பேசும் எழுதும் வாசிக்கும் சிந்திக்கும் உயிர்த்திரளான மக்களிடம் தான். அதைத் தூய்மையாகவும் உயர்தனிப்பண்புகளோடும் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

மொழியைத் தவறாகப் பயன்படுத்தும் எழுத்துலக வறியவர்களைக் கண்டறிய எளிய வழிகள் பல உள்ளன. அவை எவை என்று பார்ப்போம்.

எண்களை எழுத்தால் எழுதுவது என்பது நாம் இரண்டாம் வகுப்பிலேயே கற்றறிந்த பாடமாகும். ஆனால், மொழியறியாத எழுத்தாளன் எண்களை எழுத்தால் எழுதும்போது குப்புற விழுவான்.

39 – இந்த எண்ணை எழுத்தால் எழுத வேண்டும். மொழியறியாதவன் ‘முப்பத்தி ஒன்பது’ என்றுதான் எழுதுவான். தமிழ்நாட்டிலுள்ள பாராளுமன்றத் தொகுதிகள் மொத்தம் முப்பத்தி ஒன்பது’ என்பான். மூன்று பத்தும் ஓர் ஒன்பதும் என்பதுதான் அவ்வெண் சுட்டும் பொருள். அதை எழுத்தால் ‘முப்பத்து ஒன்பது’ என்று எழுதவேண்டும். முப்பத்தி என்று எழுதலாமா ? இதைப் போலவே எல்லாப் பத்துகளையும் பிழையோடு அடித்து வீசுவான். இருபத்தி, முப்பத்தி, நாற்பத்தி, ஐம்பத்தி, அறுபத்தி, எழுபத்தி, எண்பத்தி... எனப் புழுதி கிளப்புவான். ‘ஆயிரத்து’ என்பதற்குப் பிழையாக ‘ஆயிரத்தி’ என்பான். 460 – இந்த எண்ணை நானூற்றி அறுபது என்பான். ‘நானூற்று அறுபது’ என்று ஒருபோதும் எழுதான்.

எண்களால் ஆள்கணக்கைச் சொல்லும்போதும் இரண்டு பேர், நான்கு பேர் என்றெழுதுவான். தமிழில் இவ்வகையான பயன்பாடுகளுக்கு அருமையான முழுமையான தமிழ்ச்சொற்கள் உள்ளன. அவற்றை அவன் பயன்படுத்த அறிந்தே இருக்கமாட்டான். ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர்... என உள்ள சொற்கள் யாராலும் பயன்படுத்தப் படாமல் பரண்மேல் கிடக்கின்றன.

176378 – இது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழர் மனங்களைவிட்டு நீங்கிவிட்ட, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகப் பத்திரிகையாளர்களால் தொடர்ச்சியாகப் புழக்கத்தில் விடப்பட்ட ஓர் எண்ணாகும். ஒருவரும் இந்த எண்ணை எழுத்தால் எழுதத் துணிந்தாரில்லை. அப்படி எழுதினால் ‘ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரத்தி முன்னூற்றி எழுபத்தெட்டு’ என்று தவறாகவே எழுதவும், அவ்வாறே உச்சரிக்கவும் செய்வான். முறையாக ‘ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முந்நூற்று எழுபத்தெட்டு’ என்றெழுத வேண்டும். இங்கேயும் முன்னூறு என்றெழுதி ‘முன்னே நூறு’ என்றே பொருளில் நிற்பார்கள். மூன்று நூறுகள் (மும்+நூறு) முந்நூறுகள் என்றே புணரும்.

மொழியறியாதவன் பதட்டம் என்று எழுதுவான். அவனுக்குப் பதற்றம் என்ற பதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. பதறுவதுதான் பதற்றம். பதட்டத்தால் எப்படிப் பதடுவது என்று எனக்குத் தெரியவில்லை. உடமை என்றெழுதுவான். அவனுக்கு உடைமையைப் பற்றி ஒன்றும் தெரியாது. உடையதுதான் உடைமை. உடமையின் வழியாக அவன் எதை ‘உடுகிறான்’ என்று தெரியவில்லை. நிலமை என்றெழுதுவான். எந்த நிலத்தில் அவன் அந்த மையைக் கண்டுபிடித்தானோ ! நிலைமை என்றெழுத வேண்டும்.

இப்படி எழுதுபவன் தன் மொழியறிவின் நுனிப்புல் அறிவை நாம் அறியத் தருகிறான். நாம் அவனை இனங்கண்டுகொள்கிறோம்.

Tuesday, May 10, 2011

கேள்வியும் நானே பதிலும் நானே - 7

  • · ஏன் இத்தனை நாள்களாக கேள்வி-பதில்கள் எவற்றையும் எழுதாமல் இருந்தீர்கள் ?

அண்மைக் காலமாக என்முன் கேள்விகள் அதிகரித்தபடியே இருந்தன. அவற்றுக்கான பதில்கள் ஒன்றுமே துலக்கமாகத் தென்படவில்லை.

  • · பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சியில் அவருடைய மாமியார் மரணமடைந்துவிட்டாராமே...!

மாமியாருக்கும் மருமகனுக்கும் இடைநிலவும் பேரன்பின் உலகத்தை இன்னும் ஒருவரும் எழுதவில்லை. என் தந்தையார் இறந்தபோதும் பெருங்குரலெடுத்துக் கதறியழுதவர் என் தாயாரின் தாய் தான்.

  • · தனியார் பள்ளிகளில் +2 தேர்வுகளில் ஏராளமானோர் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறார்களே...!

சுமாராகப் படிக்கும் ஒரு மாணவன் பெருமதிப்பெண் பெற்றிருந்தான். காரணம் என்னவென்று வினவினேன். ஒருவனுக்கு விடை தெரிந்திருந்தால் அந்தத் தேர்வு அறை முழுவதுமே எழுதுவதாகத் தெரிவித்தான்.

  • · கொடநாட்டில் இருந்து அம்மா கிளம்பிவிட்டார். நேராக எங்கே செல்வார் ?

கோட்டைக்குத்தான் என்று குழந்தை கூடச் சொல்கிறது. யதார்த்தம் என்னவென்று பதின்மூன்றாம் தேதி தெரிந்துவிடப் போகிறது.

  • · அயோத்தி நிலப்பகிர்வுத் தீர்ப்புக்குத் தடை விதித்திருக்கிறதே உச்சநீதிமன்றம் ?

நீதிகள் மன்றத்துக்கு மன்றம் மாறுபடும் நிலையைக் களைய ஆட்சியாளர்களும் சட்டவல்லுநர்களும் ஏதேனும் ஆவன செய்தால் நலமாக இருக்கும்.

  • · இலங்கையும் 20/20 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளைத் துவக்கப் போகிறதாமே...

சொந்த மக்களையே குண்டுவீசிக் கொன்ற கொடுங்கோல் அரசுக்கு இந்த வேடிக்கைகள் மட்டும்தாம் குறையாகப்பட்டனவோ !

  • · சும்மா ஒரு பழமொழி சொல்லுங்களேன். சொந்த சரக்காக இருந்தால் நலம்.

ஆகாத பொண்டாட்டிக்கிட்டயே

ஆறுபுள்ள பெத்தவன்

தோதானவ கிடைச்சிருந்தா

தொண்ணூறு புள்ள இல்ல பெத்திருப்பான் ?

  • · கங்குலி மறுபடியும் கிரிக்கெட் ஆட வந்துவிட்டாரே...

கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனையில் வை !

  • · கனிமொழி ?

மாடத்தில் தோன்றிய மாதர் இலக்கிய நிலா

எளிமைக்குப் பெயரெடுத்த இளவரசி

(தெரிந்தவரை சொல்லிவிட்டேன்)

  • · +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியைப் பாராட்டுவீர்களா..?

அந்த முதல் மாணவி எனக்கு ஒரு பொருட்டே அல்ல. முதலிடம் பெறுகிறவர்கள் தங்கள் முன்னுள்ள வழக்கமாக செயல்திட்டத்தின் வழியே ஓர் இலகுவான வாழ்க்கையை அடைந்து காம்பவுண்டு வைத்துக் கட்டப்பட்ட வீட்டுக்குள் கேட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிவிடுவார்கள். என் அக்கறையெல்லாம் அந்தத் தேர்வுகளில் தோற்றுப்போய்விட்ட ஒரு லட்சம் மாணவ மாணவிகளைப் பற்றித்தான். அந்த ஒரு லட்சம் பேர்தான் எதிர்காலத்தில் இந்த உலகை ஆக்குவதில் அல்லது அழிப்பதில் பங்கெடுக்கப்போகிறவர்கள்.

  • · தேவையே இல்லாமல் ஒரு வேலையைத் துவங்கி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா...?

இந்த வலைப்பூவில் நான் எழுதிக்கொண்டிருப்பதை வேறு என்னவென்று நினைக்கிறீர்கள் ?

  • · அண்மையில் வாசித்தவற்றில் உங்கள் மனங்கவர்ந்த பத்திரிகை எது ?

தமிழக அரசியல். கட்டுரைகளின் கட்டுமானம் வழமையாய் இருந்தாலும் அதில் எழுதுபவர்கள் பிற்காலத்தில் நன்கு மலரக்கூடியவர்கள். அதற்கான அறிகுறிகளைக் கண்டேன்.

Saturday, April 30, 2011

செல்பேசிக்குள் சிறைப்பட்டிருந்த சித்திரங்கள்


ஓய்ந்த நேரத்தில் என் செல்பேசியின் ஒளிப்படங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அவற்றில் சிலவற்றைக் குறிப்புகளோடு பகிர்ந்துகொள்கிறேன். பழைய குமுதத்தைப் புரட்டுவதும் சமயத்தில் இன்பம்தானே !


அருவி
ஆயிரம் சொற்களால் விவரித்தாலும்
அருவி

கட்டுமானப் பணி
விதானப் பூச்சு நடந்துகொண்டிருக்கிறது
சிமெண்டு செய்யும் மாயம்
தொழிலாளிக்கும் வியப்பு !
துளிரும் இலை
அதை உண்ணும்
புழுவின் துளை
அடியில் மலையடுக்கு
இடையில் முகிலடுக்கு
முடியில் வெளியடுக்கு

நீலவானில்
நீந்திச் செல்லும் விமானம் !
காணமுடிகிறதா ?

பாலக்காடு அருகில்
கொடுவாயூர் சிவன் கோவில் குளம் !
உதவியாளரின் தமக்கை திருமணத்திற்குச் சென்றால்
மண்டபத்து எதிரே
மணிப்பவழ நீர்த்தடாகம் !
இறங்கி நீராடினேன்
நீரை
நீந்திக் குடைந்து குளித்தேன் !
குளத்தில் உள்ள முன் தலை
என் தலை !


சாலை வளையுமிடத்தில்
ஒரு சத்திர நிழல்
தூரத்தில் முகில்
மழைக்குத் திரண்ட திரள்


நான் அமர்ந்திருக்கிறேன்
என் கால்மீது அமர்ந்திருக்கிறது
சேவற்குஞ்சு


நான் உறங்குகிறேன்
என்மீது
பூனை உறங்குகிறது


Friday, April 15, 2011

நல்வரவு



உன் மோதிர விரல்கள்

அணிகலனற்று இருக்கின்றன

கணையாழி மீண்டும் வருகிறது !

Wednesday, April 6, 2011

படம் பார்த்தீர்களா ?

நஞ்சுபுரம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இணையதளம் ஒன்று சென்னை மாநகர வசூலில் நஞ்சுபுரம் இரண்டாம் இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. நண்பர்கள் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. திரையுலகில் படத்தைப்பற்றி கருத்தாக என்ன உலவுகிறது என்று விசாரித்ததற்கு ‘புதிது. மதிக்கத்தக்க முயற்சி’ என்று நண்பர்கள் பலர் தெரிவித்தனர்.

அரங்குகளுக்கு வந்து திரைப்படம் பார்க்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடமிருந்து அகன்று கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் வெளியாகும் எல்லாத் திரைப்படங்களையும் திருட்டுக் குறுந்தகடுகளில் அல்லது விரைவில் நிகழும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் நிச்சயமாகப் பார்க்கிறார்கள். திரையுலகம் மீதமிருக்கும் ரசிகர்களைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாக முயன்றுகொண்டிருக்கிறது. நாயக மயக்கங்களுக்குத் தமிழகம் நிரந்தரப் புகலிடம் என்பது மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது.

படத்தைப் பற்றிய விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முன் தீர்மானமற்ற, மேதாவிக் கொழுப்பற்ற, ஆக்கபூர்வமான புதுமுயற்களின் மீது அக்கறையுள்ள விமர்சகனின் மனது நஞ்சுபுரத்தை முழுமையான இதயத்துடன் அங்கீகரிக்கிறது. பரிந்துரைக்கவும் செய்கிறது.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு துறைசார்ந்து பங்கேற்ற ஒவ்வொரு கலைஞரும் தம்மால் இயன்ற சிறப்பானவற்றை வழங்க முற்பட்டிருக்கிறார். ஒளிப்பதிவாகட்டும், படத்தொகுப்பாகட்டும், பாடலிசை/பின்னணி இசையாகட்டும், இயக்கமாகட்டும் !

விறுவிறுவென்று இத்திரைப்படத்திற்குக் கிடைத்த விளம்பரம் பற்பலரையும் கொஞ்சம் பொறாமை கொள்ளத் தூண்டிவிட்டது. அந்தப் பொறாமைக்கு இப்படக்குழுவில் பணியாற்றிய இளைய உள்ளங்களாகிய நாங்கள் சற்றும் இலக்காகிவிடத் தகுதியுடையோர் அல்லோம். உங்கள் நேசிப்புக்கும் அன்புக்கும் மட்டுமே உரிய எளியவர்களே யாம் யாவரும்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா ? படத்தின் உரையாடல்களில் தற்செயலாக இடம்பெற்றுவிட்ட மூன்று சொற்களைத் தவிர ( பி.ஏ. / பிரண்டு / லூசு ) வேறு ஆங்கில வார்த்தைகளே இல்லை எனலாம். படம் முழுக்க ஆண் கதாபாத்திரங்கள் எல்லாரும் வெள்ளை வேட்டி அல்லது லுங்கிகளில் (சோடிப்பாடலில் ஒருநொடி/மற்றும் தோழர் தவிர்த்து) மட்டுமே வருகின்றார்கள். இது சிறிய அளவிலான கலாச்சாரப் பங்களிப்பாகக் கருதப்பட மாட்டாதா என்ன ? மேலும், மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தி.சு.சதாசிவம் அவர்கள்தாம் வைத்தியராக நடித்திருப்பவர்.

சில குறிப்பிடத்தகுந்த விமர்சனங்களை வாசிக்க இங்கே செல்க !

http://ww5.4tamilmedia.com/index.php/cinema/movie-review/3802-nanjupuram-cinema

http://www.mysixer.com/?p=9651

http://chennaionline.com/tamil/cinema/movie-reviews/newsitem.aspx?NEWSID=8be70153-ca3b-4c94-980b-41cf5d5a5f19&CATEGORYNAME=Rview

http://www.lankafocus.com/cinema/?p=11921

http://tamilcinema.com/CINENEWS/REVIEW/2011/nanjupuram.asp

http://expressbuzz.com/entertainment/reviews/nanjupuram/262321.html

http://www.snehasallapam.com/malayalam-movie-discussions/4831-athimanoharam-ee-nanjupuram.html

http://www.getcinemas.com/nanjupuram-review

http://www.cinefundas.com/2011/04/02/nanjupuram-tamil-movie-review

படம் பார்த்திருந்தீர்களானால் உங்கள் கருத்துகளைப் பின்னூட்டமிடுக !

Monday, March 28, 2011

நஞ்சுபுரம் பாடல்கள் – பாடலாசிரியர் குறிப்புகள்


நஞ்சுபுரம் பாடல்கள் – பாடலாசிரியர் குறிப்புகள்

1. ஊருல உனக்கொரு மேட :-

இந்தப் பாடல் கதைச் சூழல் மையம் பெற்று நிற்கையில் இடம்பெறுகிறது. புஷ்பவனம் குப்புசாமி மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறார். பாடல் பதிவகத்தில் இந்தப் பாடலைப் பாடி முடிக்க அவர் சுமார் நான்கு மணிநேரங்கள் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு வரியையும் தாம் கோத்து வைத்திருந்த துல்லியத்திற்குக் கொண்டுவரும்வரை இசையமைப்பாளர் ராகவ் அவரை விடவில்லை. கொஞ்சம் அயர்ந்தால் இந்தப் பாடல் வழக்கமான புஷ்பவனம் குப்புசாமி பாடலைப் போல் ஆகிவிடும் என்கிற ஆபத்தை ராகவ் உணர்ந்தேயிருந்ததால் அவர் அவ்வாறு மெனக்கெட்டார். பல்லவியும் அனுபல்லவியும் மெட்டுக்கேற்ப இயற்றப்பட்டது. சரணங்கள் யாவும் நான் எழுதித் தந்து பிறகு மெட்டமைக்கப்பட்டது. பாடலில் மூன்று சரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக நிறைய சரணங்களை எழுதினேன். இந்தப் பாடலை இயற்றித் தர என்னை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார் இயக்குநர் சார்லஸ். அங்கிருந்த குன்றின் முகட்டில் இருந்தபடி கீழேயிருந்த உலகைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியவரிகள்தாம் இவை:-

பார்க்கும் பார்வை பறவைப் பார்வையடா !

காணும் காட்சி கடவுள் காட்சியடா !

அனுபல்லவியின் வரிகள் மெட்டோடும் கதைச்சூழலோடும் சர்வ கச்சிதமாகப் பொருந்தியபோது நாங்கள் பரவச மனநிலைக்கு ஆளானோம் என்பதுதான் உண்மை. அவ்வரிகள் :-

பூமியெல்லாம் மைதானம்

பொட்டல்வெளித் தாம்பாளம்

ஆலகாலப் பரிகாரம்

அந்தரத்தில் சஞ்சாரம் !

மாத்துவது எளியது அல்ல ! மனம் மயங்கி ஆவதுமில்ல ! என்னும் வரிகள் ஒரு கிராமியப் பாடலில் மிகத் தோதாக வந்தமர்ந்துவிட்ட இடம் என்றும் அதைப் பாடுவதற்குச் சுகமாக இருந்தது என்றும் புஷ்பவனம் குப்புசாமி என்னிடம் குறிப்பிட்டார். பாடுவதற்காக வந்த புஷ்பவனம் குப்புசாமி, தம்மை இரண்டு மணிநேரங்களுக்குள்ளாக விட்டுவிடவேண்டும் என்றும் தமக்கு திண்டிவனத்தில் ஒரு கச்சேரி இருப்பதாகவும் ஒரு சின்ன வேண்டுகோளோடுதான் வந்திருந்தார். பாடலைப் பாடப் பாட அவர் நேரத்தை மறந்து முழுமையாகப் பாடி முடித்துவிட்டுத்தான் சென்றார். ஆக்கர் ஸ்டுடியோவில் இத்திரைப்படத்திற்குப் பணியாற்றிய நண்பர்கள் இப்பாடல் ஒரு பாடலாசிரியரால் இயற்றப்பட்டது என்பதை முதலில் நம்ப மறுத்தார்கள். இப்பாடல் நாட்டுப்புறத்தில் இன்றும் புழங்கிக்கொண்டிருக்கும் ஒரு கிராமியப் பாடலாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று அவர்கள் கருதியதாகச் சொன்னார்கள்.

2. தேளாகக் கொட்டுதம்மா

படத்தில் இடம்பெறும் டூயட் பாடல் இது. இந்தப் பாடலை இயல்பான திரைப்பாடல்களைப் போல் நெகிழ்வான சந்தப் பொருத்தமான சொற்களோடும், கொஞ்சம் இறுக்கமான இலக்கியத் தரமான சொற்றொடர்களோடு இருக்கும்படியாகவும் - கலந்து எழுதினேன். இதைப் போன்ற கல்யாண மனநிலையைச் சொல்லும் சோடிப் பாடல்கள் கொண்டாட்டத் தருணங்களைத் தம்மகத்தே கொண்டிருக்கும். ஆகையால், அமங்களச் சொற்களைப் பழைய பாடலாசியர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அந்த விதியை உடைக்கவேண்டும் என்றே என் முதல் வரியை இவ்வாறு அமைத்தேன்.

தேளாகக் கொட்டுதம்மா தேகத்தைக் காதல் கொடுக்கு !

இதே மெட்டில் வேறு பல வரிகள் எழுதியதில் உருவான வரிகள்

ஏதேதோ எண்ணம் வந்து நாளங்கள் தந்தியடிக்க...!

மீளாத பாதைக்குள்ளே நம்கால்கள் மெல்ல நடக்க...!

இவ்வரிகளை இழக்க மனமில்லாமல் பாடலில் அவசியம் சேருங்கள் என்று ராகவை நான் கேட்டுக்கொண்டதால் அவ்வரிகளும் பாடலில் உண்டு.

இந்தப் பாடலுக்கு முதலிரு வரிகள் முதலில் வேறொன்றாகத்தாம் இருந்தன. கடைசி நொடியில்தான் மாற்றப்பட்டது. பாடல் பதிவுக்குக் கிளம்பும் சமயம் இசையமைப்பாளர் ராகவ் தொலைபேசினார். பாடலின் முதல் வரிகளின் மெட்டு மாற்றப்பட்டிருப்பதாகவும் அதற்கேற்ப எழுதி வாருங்கள் என்றும் கூறினார். என்ன மெட்டு என்றதற்குப் பாடிக்காட்டினார். தொலைபேசி என்பதாலும் கிளம்பும் அவசரத்தில் இருந்ததாலும் எனக்கு தத்தகாரம் ஒன்றும் பிடிபடவில்லை. ‘நீங்களே ஒரு டம்மி வார்த்தை போட்டு பாடிக்காட்டுங்கஎன்றேன். உடனே ராகவ் ‘ஆத்தாடி நெஞ்சுக்குள்ளே காத்தாடி வீசியடிக்க என்றார். ‘ரைட். வரிகளோடு வருவோம்என்று அங்கேயே பத்துப் பதினைந்து வரிகள் எழுதி உடனிருந்த இயக்குநர் சார்லஸிடம் தந்துவிட்டேன். அவர் தேளாகக் கொட்டுதம்மா-வைத் தேர்ந்தெடுத்தார். படக்குழுவினர் பிறகு இப்பாடலைக் காதல் கொடுக்கு சாங்என்றே அழைக்கலாயினர்.

இந்தப் பாடல் முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது. ராகவ் சுலபமாக இருப்பதைப்போல் அல்லாமல் கொஞ்சம் கறாராகவே இப்பாடலுக்கு மெட்டமைத்திருந்தார். இந்தப் பாடலுக்கு ஏராளமான தாளக் கருவிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார். பாடல் பதிவின்போது தாளக் குழு ஒன்று ஆட்டோ நிறைய தோல் தாள வாத்தியங்களோடு வந்திறங்கி பதிவுக்கூடத்தையே நிறைத்துவிட்டது. இந்தப் பாடலை அர்ச்சித் என்னும் இளம் பாடகரும் ராகவின் மனைவி ப்ரீத்தாவும் பாடினர். இது பொய்யாகக் கூடாது ! பூநெஞ்சம் தாங்காதம்மா !என்னும் வரிகள் ராகவை அந்தரங்கமாகத் தீண்டின. அதற்கு அவர் சொன்ன காரணம் கொஞ்சம் வலியானது, இங்கே நான் பகிர்வதற்கில்லை.’’ ‘இந்தக் கற்றாழைப் பூவுக்குள் கருவண்டு தேன் தேடுதோ !என்னும் வரி இயக்குநருக்கு மிகவிருப்பம்.

புலன்களை அறிந்தது முதலுனை அறிந்தேன்

தனிமையில் இருந்துமென் அமைதியைத் தொலைத்தேன்

- என்னும் வரிகளும்

படர்கிற பசலையில் தளிருடல் மெலிந்தேன்

பாழ்நதி ஆகினேன் மனநலம் இழந்தேன்

- என்னும் வரிகளும் இப்பாடலில் எனக்கு விருப்பமானவை.

(மற்ற பாடல்களைப் பற்றி நாளை நான் மேலும் சொல்வேன்).

Saturday, March 26, 2011

நஞ்சுபுரம் பாடல்கள் - விமர்சனம்


பிரபல வலைத்தளமான ‘ஒசீயா’-வில் நஞ்சுபுரம் திரைப்படப் பாடல் இசைத் தொகுப்பின் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் பார்வையிடலாம்.
அதற்கான இணைப்பு