Wednesday, January 19, 2011

தமிழில் படிக்க வேண்டிய புத்தகங்கள்



எழுத்தாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் புத்தகங்களின் பட்டியல் குறித்துக் கூறுவதற்கு என்னிடம் சில கருத்துகள் இருக்கின்றன.

அவர்கள் தம் பட்டியல் படைப்பிலக்கியம் சார்ந்திருப்பதாகக் கூறுவதுண்டு. அப்படியே ஆயினும் அதில் அபிதான சிந்தாமணி போன்ற நூல்களை எல்லாம் சேர்த்துச் சொல்வதை மடமை என்றுதான் சொல்ல வேண்டும்.   அபிதான சிந்தாமணியைப் படித்து முடிக்கிறேன் என்று எந்த வாசகனாவது அமர்ந்தால் அவன் அதை எத்தனை காலத்திற்குப் படித்துக்கொண்டிருப்பான் ? அதைப் படிக்க முன்னெடுக்கும்  முயற்சியில் மூலதனத்தை மூன்று முறை படித்து முடித்துவிடலாம். தமிழ்ப் பெயர்ச்சொல் அகரமுதலியான அபிதான சிந்தாமணியை இளநிலை வாசகனுக்குக் கொடுத்துப் படி என்றால் அவன் தலைதெறிக்க ஓடி ஒளிந்துகொள்ள மாட்டானா ? விக்கிபீடியாவில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் படிக்கவேண்டிய பட்டியலில் முதலாகக் குறிப்பிடுவதைப் போன்ற அபத்தம் இது.

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகத்தை மிக எளிதாக வகைப்படுத்தலாம். அந்த வகையை முன்வைத்துத் தமிழ் இலக்கிய உலகத்தையே ஒருவன் கரைத்துக் குடித்தும் விடலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான தமிழ்ப் படைப்புலகம் செய்யுள் உலகம். செய்யுள் நூல்களில் சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், கதைக் காவியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என வகைக்குக் கொஞ்சமும் கணிசமும் இருக்கின்றன. இந்த நூல்களில் உள்ள மிகச்சிறந்த பகுதிகள் எனக் கருதத்தக்க ஆக்கங்களும் பாக்களும் கொங்குதேர் வாழ்க்கைஎன்ற பெருந்தொகையாகத் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதியைக் கைவிளக்காகக் கொண்டு ஓர் இலக்கிய வாசகன் பன்னூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களை அணுக முடியும். அந்த மாதிரிப் பாக்களில் எவையெவை அவனுக்கு விருப்பமாகவும் சுவையாகவும் உள்ளனவோ அவற்றைத் தேடி அவன் நேரடியாக மூழ்கலாம்.



அடுத்துத் தமிழின் நவீன கால மரபுச் செய்யுள்களும் மரபைத் துறந்த புதுக்கவிதைகளும் உள்ளன. தமிழில் கடந்த நூறாண்டுகளாக எழுதப்பட்ட மிகச் சிறந்த புதுக்கவிதைகளின் தொகுப்பும் அதே போல கொங்குதேர் வாழ்க்கை இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்றிருக்கக் கிடைக்கிறது. அந்தத் தொகுதியின் வழியாகத் தமிழ்ப் புதுக்கவிஞர்களை மாதிரி தேர்ந்து அடையலாம். அவ்வாறு சென்றடையும் ஒரு கவிஞனின் கவிதைத் தொகுதியைப் படித்து முடிக்க அதிகபட்சம் அரைமணி நேரம் ஆகும். அவ்வளவுதான். அதற்கும் மேலான நெடுங்குரலெடுத்து இங்கே யாரும் நீட்டி முழக்கவில்லை. எந்தத் தமிழ் நவீன கவிஞனின் வாழ்நாள் முழுமையுமான படைப்புகளையும் அமர்ந்து படித்தால் இரண்டொரு தினங்களில் முடிக்கலாம்.

உரைநடை எழுத்துகளில் அடுத்து எஞ்சுபவை கதைகளும் கட்டுரைகளும்.

என்னதான் அகலமான அளவுகோல்களை வைத்து அளந்தாலும் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என ஓராயிரம் (1000) மட்டுமே இருக்கின்றன. அவற்றைத் தேடுவதற்கோ கண்டடையவோ யாருக்கும் யாதொரு சிரமமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லாச் சிறுகதைகளும் அந்தந்த ஆசிரியர்களின் பெயரில் முழுத்தொகுதியாக வந்திருக்கின்றன. வந்துகொண்டுமிருக்கின்றன. சிறந்த சிறுகதைகளின் தேர்ந்த தொகுப்புகளும் வந்திருக்கின்றன. விட்டல்ராவ் (இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்), மாலன் (அன்று), தீபம் சிறுகதைகள், கணையாழி கதைகள் என அவை கிடைக்கின்றன. அவற்றின் வழிச் சென்றாலே போதும். தமிழ்ச் சிறுகதை உலகைக் கடைந்து எண்ணெய் எடுத்துவிடலாம்.

அப்புறம் தமிழ் நாவல்களின் உலகம். Thousand things to do before you die என்று கூட எப்படியாவது பட்டியலிட்டுவிடலாம். ஆனால், நாம் படித்தேயாகவேண்டிய நாவல்களைப் பட்டியலிட்டால் வெறும் நூறு என்ற எண்ணிக்கைக்குள்ளாகவே முடியும். அவற்றில் பத்திருபதை ஏற்கனவே படித்திருப்போம். மீதம் உள்ளனவற்றையும் மெதுவாகப் படித்துவிடலாம். இதோடு விஷயம் முடிந்தது.



தமிழில் பாரதிக்கு அடுத்து மிகச் சிறந்த மரபுக்கவிஞர் யார் என்றால் அவர் முடியரசன் தான். முடியரசன் கவிதைகள் முழுத்தொகுதி எங்கு கிடைக்கிறது ? எங்கும் கிடைக்காது என நினைக்கிறேன். கண்ணதாசனைவிடவும் பாரதிதாசனைவிடவும் முடியரசன் கவிதைகள் மேன்மையானவை. தமிழில் இயற்றப்பட்ட மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளில் சிகரம் போன்றது என்றால் அது மனோன்மணீயம் என்னும் நாடகக் காப்பியமே ! இதை இதுவரை யாராவது சொன்னார்களா என்று என் நினைவுக்கெட்டியவரை துழாவிப் பார்த்தேன். நாம் வணங்கிப் பாடும் தமிழ்த் தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த என்னும் பாடல் அந்நூலில்தானே இடம்பெற்றிருக்கிறது ! திரு. வி. க. வுக்கு நிகரான  தமிழ்க் கட்டுரையாளர் ஒருவர் நம் காலத்தில் இருக்கிறார் என்றால் அவர் கரு. ஆறுமுகத்தமிழன். அவரை ஏன் ஒருவரும் இனங்காட்டவில்லை ?

கட்டுரைகள், சுயசரிதைகள், மொழிபெயர்ப்புகள், அறிவியல்-வரலாறு-பொருளாதாரம்-அரசியல் என இனி மீதமுள்ள துறைகள்தாம் தமிழின் சாபக்கேடான இயல் துறைகள். ஆனால், இலக்கியத்தினின்று அகன்று ஒவ்வொரு அறிவுத் தேனீயும் பறந்து பறந்து நுகர வேண்டிய நூல்களெல்லாம் இவ்வகைப் பட்ட துறைகளுக்குள்ளே தாம் இருக்கவேண்டும். ஆனால், உண்மை நிலை இதற்கு நேர்மாறானது. இத்துறைகளில் வியக்கத்தக்க ஆளுமைகளால் இயற்றப்பட்ட தன்னிகரற்ற நூல்களுக்கு நம் மொழியில் பெரும் பஞ்சம் நிலவுவதைத்தான் நாம் காண்கிறோம்.

அட, ரொம்ப வேண்டா ! “ அருமையான தமிழில் சிறப்பாக விளக்கி எழுதப்பட்ட, எளிதில் பின்பற்றத்தக்க, நம்பகமான - நல்ல சமையல் கலை நூல் என்று ஒன்றைச் சொல்ல முடியுமா ? 

11 comments:

  1. ரொம்ப நல்ல கட்டுரைங்க

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை சார்.

    ReplyDelete
  3. நான் முரண்படுகிறேன்

    அபிதாந(na) (ம) சிந்தாமணி, தேவராம் போன்றவை படித்தால் மொழி ஆளுமை (வார்த்தைகளைப் பயன்படுத்தும்) ஆளுமை கிடைக்கும்.

    எந்த ஒரு வட்டார மொழி வழக்குக்குள்ளும் சிக்காமல் எழுத துணை புரிபவை.

    ReplyDelete
  4. அதிஷா, கோபி ராமமூர்த்தி... நன்றி !

    ராம்ஜி ! அபிதான சிந்தாமணி வாசிப்பைக் கோரும் நூல் அன்று. தமிழ்ச் சொற்கள் குறித்து மொழி மரபில் புதைந்திருக்கும் முழுமையான செய்திகளை அறிவதற்காக அணுக வேண்டிய தொகுதி. அதையும் நான் உட்கார்ந்து படித்து என் மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்வேன் என்று நீங்கள் முயன்று படித்து முழுமையாக முடித்தும் விட்டீர்களானால், எனக்கு உடனே தெரிவியுங்கள். நான் உங்களுக்கு என் சொந்த செலவில் விழா எடுக்கிறேன்.

    ReplyDelete
  5. எவ்வளவு நாளாயிற்று ... மிக பயனுள்ள கட்டுரைக்கு நன்றி

    ReplyDelete
  6. முதல் நாள் இதில் இடுகை இட முடியாத படி தடை இருந்தது, ஏனோ?

    நல்ல கட்டுரைதான், ஆனால் சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிவதற்கு முந்தி வந்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். (அல்லது ஒரு பிரபல எழுத்தாளரின் பரிந்துரையினால் வரப்போகும் பெரும்பாட்டில் இருந்து மக்களைக் காப்பாற்றவா இது? அப்படியெல்லாம் கவலைப்பட்டு விடாதீர்கள், அபிதான சிந்தாமணியின் கற்புக்குக் கேடு வர வாய்ப்பில்லை).

    ReplyDelete
  7. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி !

    புத்தகக் கண்காட்சிக் காய்ச்சலால், பாவம்... அநேக வாசகர்கள் அவதிப்படுகிறார்கள் போங்கள்.

    ஆம் அண்ணாச்சி !
    அபிதான சிந்தாமணியின்
    அடி பார்த்தோர் சிலர்.
    முடி பார்த்தோர் சிலர்.
    முழுமையாகக் கட்டித் தழுவி
    ஆலிங்கனம் செய்தோர் ஒருவரும் இலர் !
    அங்ஙனம்
    ஆலிங்கனம் செய்து
    ஆழங்களைக் கண்டார் யார், அவர் எங்கே உளர் ?

    ReplyDelete
  8. எஸ்.ரா மீது எதாவது கோபமா?

    ReplyDelete
  9. மதுமிதா ! சேச்சே... அதெல்லாம் ஒன்றுமில்லை.

    ReplyDelete