







கர்நாடக மாநிலத்தில் தாது மண் கொள்ளை போய்க்கொண்டிருப்பது குறித்து அண்மைக் காலங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கொள்ளை தமிழ்நாட்டில் ஒரு செய்தியாகப் பரவும் முன்பே, சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னதாக, ஒரு கவிதையாக எழுதினேன். அந்தக் கவிதை தீம்தரிகிட இதழில் வெளியானது என்று ஞாபகம். ஓர் அரசியல் எதிரியின் முன் நகர்த்தப்படத் தேவைப்படும் காய் என்பதால் மட்டுமே இந்தக் கொள்ளை ஊடக அளவில் விவாதப் பொருளாகிறதே தவிர யாருக்கும் உண்மையான அக்கறை இருக்கிறதா என்பது கேள்விக் குறியே. ஆனால், கவிஞர்களுக்கு உண்மைக்கும் சத்தியத்திற்கும் அப்பாற்பட்டு எந்தச் செயல்பாடும் இல்லை. கவிதை வெளிவந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கவிதை பேசிய பிரச்சனை குறித்து யாருக்கும் கவனமோ அறிதலோ இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அதனால் அந்தக் கவிதையை மீண்டும் இங்கே தருகிறேன். 2006 ஆம் ஆண்டு வெளியான மண்ணே மலர்ந்து மணக்கிறது என்ற என் கவிதைத் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது.
ஏற்றுமதி
நான் ஏற்றுமதியாளன்
பொருளாதாரத்தின் தூண்
ஏதாவது ஒன்றை
ஏற்றி அனுப்பிக்கொண்டே இருப்பேன்
எதையாவது ஒன்றை
எவனாவது ஒருவனுக்கு
விற்றுக்கொண்டே இருப்பேன்
என்னால் எதையும் விற்கமுடியாத அன்று
நான் இறந்துவிடுவேன்
ஆடைகளை
ஏற்றுமதி செய்து பார்த்தேன்
என்னைப்போலவே
பருத்திக்காடுகளும் விளைந்து களைத்துவிட்டன
தைத்துத்தைத்து
ஊசிகள் மூளையைப்போல மழுங்கிவிட்டன
நாள் பொழுது தட்பவெப்ப நிலைகளை இழந்து
உடல்கள் துவள்கின்றன
ஆனால், என்ன செய்வது !
பாவம்
தூங்காமல்
வேட்கையுடன் அலைகின்றன லாரிகள்
துறைமுகங்கள் காத்திருக்கின்றன
அங்கு
ராட்ஷசக் கப்பல்கள் நங்கூரமிட்டு
காலிக் கொள்கலன்களோடு
ஏங்கி நிற்கின்றன
வற்றிய நரியின் பசியோடு
வர்த்தகர் அழுகிறார்
என்னைத் தொடர்ந்து நச்சரிக்கிறார்
‘எதையாவது ஒன்றை
ஏற்றி அனுப்பு’ என்கிறார்
ஒரு மாறுதலுக்காக
மிளகாய் ஏற்றுமதி செய்தேன்
உமது காரங்களை
உமது துக்கங்களின் வீரிய விதைகளை
தூர தேசங்களுக்கு
ஏற்றி அனுப்ப முயன்றேன்
நீங்கள் சிந்திக்கொண்டிருக்கும் கண்ணீரை
வேறு எங்கோ எவனோ
சிந்தட்டுமென்று
வெங்காயம் ஏற்றுமதி செய்தேன்
தோல் ஏற்றுமதி செய்தேன்
உமது மதலைகளுக்குப் பால் புகட்டிய
ஆநிரைகளைக் கொன்றுரித்து
உலர வைத்து இறுக்கித் தைத்து
ஏற்றினேன்
எதுவும் சரியில்லை
இறுதியாக
தாதுமண்ணை ஏற்றுமதி செய்கிறேன்
உங்கள் மூதாதைகளின்
வியர்வையும் உதிரமும் கலந்து
கனிமமாகக் கரைந்திறுகிய மண்ணுக்கு
நல்ல கிராக்கி
பூமியின் ஒரு பகுதியைத் தோண்டி
இன்னொரு பகுதிக்கு
அனுப்பிக்கொண்டே இருக்கலாம்
பூமிக்குத் துளை விழுமா ?
நல்ல கற்பனை
உமது வசிப்பிடங்கள்
சுரங்கங்களுக்குள் அமையலாம்
சுரங்கங்கள் வறண்டபிறகு
நான்
உங்களிடமிருந்து விடைபெறுவேன்
நீங்கள் மேலேறிவரும்
கயிற்றைத் துண்டித்துவிட்டு.
· காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி செய்ய வெறும் 4 இலட்ச ரூபாய் விலை மதிப்புள்ள டிரெட் மில் சாதனங்களை 10 இலட்சத்துக்கு வாடகைக்கு எடுத்தார்களாமே... ?
இதைத்தான் சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்றார்களோ !

· என்ன வகை செல்பேசி வைத்திருக்கிறீர்கள் ?
LG GX200. விலை மலிவு. மின்னேற்றம் வாரக்கணக்கில் தாங்குகிறது.
· ஜோதிடத்தின்மீது நம்பிக்கை வருகிறதா ?
வரூஊஊம். ஆனா வராது.
· பீகார் வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டார்களாமே கோவையில் இரண்டு வயதுக் குழந்தையிடம்...
அவர்களைப் பிடித்து கொரில்லா செல்லில் அடைக்கவேண்டும்.
· டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஜெயலலிதா ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளாரே...?
என்ன இருந்தாலும் அவர்கள் அம்மாவின் நியமனங்கள் அல்லவா...
· கார்கள் விற்பனை அதிகரித்திருக்கிறதாமே...?
கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் அதை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்த விற்பனையையா சொல்கிறீர்கள் ?
· திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி விரைவில் தி.மு.க.வில் இணையப் போகிறாராமே ?
தோழர்களை சித்தாந்தங்கள்தாம் வழிநடத்த வேண்டும். வேறு சிந்தனைகள் அல்ல. அவிநாசி சாலையில் பழைய ஸ்கூட்டரில் நிதானமாகச் சென்றுகொண்டிருக்கும் அவரை அநேக முறை பெருமையோடு கடந்து சென்றிருக்கிறேன்.

· பெண்கள் மட்டுமே வசிக்கும் தீவு ஒன்றுக்கு உங்களை அனுப்பி வைத்தால் என்ன செய்வீர்கள் ?
திரும்பி வரமாட்டேன்
· எந்திரன் அறிவியல் புனைகதை என்கிறார்கள். அதை நம் மக்கள் ஏற்பார்களா ?
அவர்கள் எடுத்திருப்பது எந்திரன் அல்ல. கால்குலேட்டட் ரிஸ்க்.
· பா.ம.க. வை ஒருவரும் சேர்த்துக்கொள்ளாமல் தவிக்க விட்டு விட்டார்களே...?
பொதுத்தேர்தல் வரும்போது பாருங்கள் அவர்களுக்கு ஏற்படும் கிராக்கியை.
· ஊட்டிக்குப் போகவில்லையா ?
எதற்கு... டால்பின் நோஸிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்கா ?
· மும்பையில் கப்பல்கள் மோதிக்கொண்டதால் கடல் பாழாகிக் கொண்டிருக்கிறதாமே...?
கப்பல்கள் மோதிக்கொண்டதுதான் புதிய செய்தி. கடல் பாழாகிக் கொண்டிருப்பது பழைய செய்திதான்.
தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சியோடு உரையாடும்போது மரபில் மூழ்கிப் புரண்டெழுந்துவரும் வீரியமான நவீன கவிதை வரிகள் சிலவற்றை சொல்லிச் செல்வார். அந்த வரிகளின் ஆசிரியர் ராஜசுந்தரராஜன்.
தேவையற்ற ஒற்றைச் சொல் இல்லாத இரும்புக் கம்பிகளைப் போல் வன்மையாகத் திரண்டு நிற்கும் கவிதை வரிகளை ராஜசுந்தர ராஜனின் கவிதைகளில் தரிசித்தேன். இந்த இயல்பினாலோ என்னவோ ராஜசுந்தரராஜன் அளவு கருதி அமைந்து மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். என்னை மிகவும் பாதித்த கவிதை என்று அநேக அமர்வுகளில் நான் சொல்லும் ஒரு கவிதை ராஜசுந்தரராஜனுடையது. அதைப் படித்த தருணம் நான் இடிந்து அமர்ந்தேன். அந்தக் கவிதை இது –
விபரீதம்
கிறுக்கும் பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி !
அதற்கும் முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி ?
இந்தக் கவிதை என் இதயத்தில் ஆழமான வெட்டாகப் படிந்துவிட்ட காரணத்தால்தான் எல்லாரும் என்னைக் கண்டதும் சொல்லிச் செல்லும் கவிதையான ’’’‘வலியின் ஒலி’-யை எழுதியிருப்பேன் என்று நம்புகிறேன்.
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது உற்றுக்கேள்
கொல்லையில் சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை
நான் எழுதும் சிறுகவிதைகளின் அந்தரங்க அடி ஸ்கேலாக ராஜசுந்தரராஜனின் கவிதைகளும் கலாப்ரியாவின் சில கவிதைகளும் மாறியிருப்பதை இப்பொழுது அவதானிக்க முடிகிறது.
தமிழினி புத்தக அரங்கில் ராஜசுந்தரராஜனின் அறிமுகம் கிடைத்தது. சில கவிகளுடன் உரையாடினால் அது மலை முகட்டுக் கல்விளிம்பில் நின்றுகொண்டு உரையாடுவதைப் போலவே இருக்கும். கல்லும் புரளாமல் நாமும் உருளாமல் அத்தனை உஷாராக இருக்க வேண்டும். ஆனால், அண்ணாச்சி ராஜசுந்தரராஜன் எனக்கு உடனே ஒரு தந்தையைப் போல் நெருக்கமானவராகத் தென்பட்டார். அவரைப் போலவே ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து என்னைப் பார்க்கும் இன்னொருவர் பாதசாரி ஆவார். இவர்கள் இருவரையும் என் மனம் அங்கீகரித்து வைத்திருக்கும் இடம் அத்தனை பரிசுத்தமானது. தந்தையற்றவனாகிய எனக்கு இவ்வுணர்வுகள் கொஞ்சம் இயல்பை மீறிய அடர்த்தியோடு ஊற்றெடுக்கின்றன.
தேக்கடி பெரியார் அணைக்கு இலக்கிய நண்பர்களோடு உலாச் சென்றிருந்தோம். படகுக்கு நுழைவுச் சீட்டு பெற நெடிய வரிசை. யாராவது ஒருவர் குழுவுக்குச் சீட்டுகள் பெற வரிசையில் கால் கடுக்க நின்று வாங்கி வரவேண்டும். நியாயமாக என் வயதொத்தவர்கள் சென்று வரிசையில் நின்றிருக்க வேண்டும். எங்களுக்கு அது தோன்றி நிற்கும் முன்பாக அண்ணாச்சி ராஜசுந்தரராஜனையும் நாவலாசிரியர் எம். கோபாலகிருஷ்ணனையும் தேடினால் காணவில்லை. இருவரையும் எங்கே என்று பார்த்தால் நீண்ட வரிசையின் நடுமையத்தில் நின்றுகொண்டு கையசைக்கிறார்கள். நாங்கள் எத்தனிக்கும் முன்பே அவர்கள் செய்துமுடித்தார்கள். இவர்கள் இருவரிடமும் தலைமையைக் கைதந்துவிட்டு நாம் பின் தொடர்ந்து எங்கும் செல்லலாம். பார்த்துப் பக்குவமாகக் அழைத்துக்கொண்டு போய்ப் பத்திரமாகக் கூட்டி வருவார்கள். அண்ணாச்சி கைநிறைய படகுச் சீட்டுகளுடன் வந்ததும் நான் கேட்டேன்.
‘அண்ணாச்சி ! உங்களைக் கால்கடுக்க வரிசையில் நிற்க வைத்துவிட்டோமே !’
‘இதில என்ன இருக்கு ? இதெல்லாம் மூத்தவங்க பொறுப்புதான். நீங்க சின்ன பசங்க பலதையும் வேடிக்கை பாக்க வேண்டியிருக்குமில்லையா ?’ என்றார்.
ராஜசுந்தரராஜன் தமிழினி இதழில் நாடோடித் தடம் என்று இப்புவியின் நெடும் பரப்புகளில் தாம் அற்று அலைந்த சரிதையை மாத்தமிழ் நடையில் எழுதினார். அவரின் உரைநடையை ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கிய உலகமே விழிவிரிய வாசித்தது. அவர் எழுத்தை வாசிப்பதற்காகவே அடுத்த இதழுக்காகக் காத்திருந்தவர்கள் பலர். அந்த நாடோடித் தடங்களில் ஊடாடித் தோன்றி மறையும் மகளிர் ஒவ்வொருவரும் அண்ணாச்சியின் வாழ்க்கையில் எழுப்பிய ராகங்களை நாம் கண்ணீர் மல்கத்தான் எதிர்கொள்ள முடியும். விரைவில் அது கனமான புத்தகமாக வரக்கூடும். ஆனால், அண்ணாச்சியை யாராவது ஊக்கி நிற்காவிட்டால் அதைப் புத்தகமாக்காமலே இருந்தும் விடுவார். அதுவே அவர் இயல்பு !
ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி கைரேகை எண்கணிதம் முதலானவற்றிலும் நிபுணர். நாங்கள் எல்லா முற்போக்குகளையும் வாய் கிழியப் பேசிவிட்டு அண்ணாச்சியிடம் கையைக் கொடுத்து ‘அது கிடக்குது... எங்க கையைப் பார்த்து என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க’ என்போம். அண்ணாச்சி என் கையைப் பார்த்துவிட்டு ‘செல்வநிலை திருப்திகரம். முப்பத்தைந்தாம் வயதுக்கு மேல் உங்கள் தொழில் முற்றாக வேறாகும் வாய்ப்பிருக்கிறது’ என்றிருக்கிறார். இப்பொழுதுதான் எனக்கு முப்பத்து ஐந்து. திருப்பூர் போகும் போக்கைப் பார்த்தால் அண்ணாச்சியின் கணிப்பு உண்மையாகிவிடுமோ என்று எனக்கும் அச்சமாகத்தான் இருக்கிறது.
அண்ணாச்சி SPIC உர நிறுவனத்தில் பணியாற்றினார். தன் பணியின் நிமித்தம் வெளிநாடுகளில் வசித்துள்ளார். இந்தியாவில் அவர் கால்படாத பிரதேசங்களே இல்லை என்னும் அளவுக்குச் சுற்றியிருக்கிறார். ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை அவற்றின் புழுதியோடும் புன்மையோடும் நேர் நின்று சாட்சியாகக் கண்டதாலோ என்னவோ அவருக்கு இந்தப் பக்குவம் வந்திருக்க வேண்டும்.
அண்மையில்தான் பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதற்கு நான் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னேன். ‘நீங்கதான் வாழ்த்து சொன்னீங்க போங்க’ என்றார். ‘அண்ணாச்சி ! உங்கள் காலம் முழுக்க லட்சக்கணக்கான மைல்கள் பயணித்திருக்கிறீர்கள். அந்தத் தருணங்களிலெல்லாம் ஓய்வுக்காக மனம் தவித்திருக்கும். அந்த ஓய்வு இப்பொழுது சித்தித்திருக்கிறது. அதை முழுமையாக அனுபவியுங்கள்’ என்றேன். ‘ஆமா... இனி அப்படித்தான் இருக்கணும்’ என்றார்.
அண்மையில் அவரோடு பேசியபோது ‘அண்ணாச்சி... நீங்கள் நிறைய எழுதவேண்டும்’ என்றேன். மெல்லிய சிரிப்புடன் சொன்னார். ‘இளைஞர்கள் நீங்க எழுதுங்க...’ என்றார்.
அண்ணாச்சி ராஜசுந்தரராஜன் நமக்குச் சொல்லும் செய்தியும் வேண்டுகோளும் அதுதான்.
அண்ணாச்சியின் ஒரு கவிதையைக் கொண்டு இப்பத்தியை முடிக்கவா ?
இரா முழுக்கத்
தவம் கிடந்தன
வான் நிறைய விண்மீன்கள்.
பரிதியை
நேர் நின்று கண்டதோ
விடிய வந்த ஒரு வெள்ளி.
(புகைப்படங்கள்: தமிழினி வசந்தகுமார்)
கருணாநிதி தாமாகவே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலையும் எழுதி பத்திரிகைகளுக்கு வழங்குவாராம். யாரும் நம்மைப் பார்த்து கேட்காத கேள்விகளை நாமே உருவாக்குவதற்கும் முக்கியமான சமூக நிகழ்வுகளின் மீதான நம் அபிப்பிராயத்தைப் பதிவு செய்வதற்கும் இது தோதான வழிதான். என் வலைப்பக்கத்தில் அப்படியொரு பகுதியை இனி அடிக்கடி இடலாம் என்றிருக்கிறேன். ஏ.பி. நாகராஜன் படத்துக் கடவுள் பேசும் வசனமான ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்று இந்தப் பகுதியை இனி அழைக்கலாம். இது இந்த வலைப்பக்கத்தின் பத்திரிகைத் தன்மையையும் வாசிப்பு அனுபவத்தையும் கொஞ்சம் கூட்டக் கூடும். இவ்வகைமைக்கு முன்மாதிரிகள் நம் பழைய பத்திரிகைகளே. சரியாக ஒரு டஜன் கேள்விகளும் அதற்கான பதில்களும் ஒவ்வொருமுறையும் இடம்பெறும்.
· ஹாலிவுட்டுக்கே சவால் விடுகிற மாதிரி எந்திரன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்களாமே ?
அவர்கள் எந்திரனுக்கே சவால் விடுகிற மாதிரி டெர்மினேட்டர் என்ற படத்தைப் பதினைந்து வருடங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டார்களே !
· சீமான் சிறையில் இருப்பதைப் பற்றி...
சிறைவாசம் அநேகரை வரலாற்று நாயகராக்கி இருக்கிறது.
· ஜெயலலிதா தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வாய்தா மேல் வாய்தாவாக வாங்கி இழுக்கடிக்கிறார்’ என்று ஆளுங்கட்சியான தி.மு.க.வினரே போராட்டம் நடத்துகின்றனரே..?
நீதிமன்றத்திலுள்ள ஒரு விவகாரம் குறித்து - சட்டம் இயற்ற வேண்டிய இடத்திலிருப்பவர்களே போராடுகிறார்கள் போங்கள்.
· அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் ?
ஷட்டர் ஐலண்ட் ! லியோனார்டோ டிகாப்ரியோ எல்லாரையும் அள்ளிச் சாப்பிட்டுவிட்டார்.
· பங்குச் சந்தை மேலேயும் செல்லாமல் கீழேயும் செல்லாமல் நொண்டியடிக்கிறதே ?
நாம் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான்.
· உங்களிடம் கேட்காமல் இருப்பதா...? ஒரு கவிதை சொல்லுங்களேன்.
சாகித்ய அகாதமி வெளியீடான இந்தியன் லிட்டரேச்சர் புத்தகத்தில் வாசித்த இரண்டு ஆங்கில ஹைக்கூ-களைச் சொல்கிறேன்.
காலம்
பசுவின் அசையாகிறது !
தன் தித்திப்பை
தியாகம் செய்கிறது !
· சமீபத்தில் விளக்கம் சொல்லத்தெரியாமல் சமாளித்த அனுபவம்...?
என் மேசையிலிருந்து கள்ளி நாவலைப் பார்த்த நண்பர் அதன் ஆசிரியர் பெயரைப் பார்த்து வினவினார் ‘இது என்னங்க பேரு வாமு கோமு?’
‘அது வந்துங்க... இந்த சிங்கி மங்கி... கிய்யான் முய்யான் மாதிரி வாமு கோமு’ என்றேன்.
· தமன்னா தமன்னா என்று இளவட்டங்கள் உருகுகின்றார்களே... ?
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆழிப் பேரலைகளையே பார்த்தவர்கள். சிற்றலைகள் அவர்களை என்ன செய்துவிடும் !
· மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கலாமா ?
ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டங்களில் நாம் யார் பக்கம் நிற்கவேண்டும் ?
· போன வாரம் நீயா நானா பார்த்தீர்களா ?
பார்த்தேன்... ஜெயமோகனும் மதுரை முத்துகிருஷ்ணனும் டாக்டர்களுக்கே ஊசி போட்டதை.
· மக்கள் மக்கள் என்கிறார்களே அவர்கள் எவர்கள் ?
அது ஒரு மாயையான சொல்தானோ என்று எனக்கும் ஐயம் உண்டு
· காலத்தின் கட்டாயம் என்று எதைச் சொல்வீர்கள் ?
நானும் பிளாக் எழுத வந்ததைத்தான்.
மொழியின் துல்லிய உலகம்
சுப்ரபாரதிமணியன்
எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் உலகின் சுற்றுப்புறத் தாக்கங்களைத் தங்கள் படைப்புகளில் எப்பொழுதுமே முன்வைத்து எழுதுவார்கள். நகரங்களில்தாம் எல்லா வகையான நடவடிக்கைகளும் அதீதங்களும் அரங்கேறிவிடுகின்றன. அதிலும், திருப்பூர் போன்ற வளரும் பெருநகரங்களில் செயல்பட்டுவரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், குறும்படக் கலைஞர்கள் - தாம் வாழும் நகர் சார்ந்து படைப்பில் இயங்கவேண்டிய அளவுக்குப் பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன. இந்நகரின் பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் படைப்பில் பிரதானமாக வந்து போவார்கள்.
இந்நகரிலிருந்து இயங்கும் கவிஞர் மகுடேசுவரனின் படைப்புகளிலும் இவ்வூர்த் தன்மைகள் மிகுந்திருப்பதும் கதை மாந்தர்கள் இவ்வூரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதும் இயல்பான ஒன்றுதான்.
மகுடேசுவரனிடமிருந்து இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘பூக்கள்பற்றிய தகவல்கள்’-ஐ நான் தான் கனவு சார்பாக வெளியிட்டேன். அது மிக முக்கியமான தொகுப்பு. வெளிவந்ததும் அத்தொகுப்பு மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட்து. சுஜாதா உள்ளிட்ட மூத்த தமிழ் எழுத்தாளர்கள் பலரும் அத்தொகுப்பை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். கமல்ஹாசன், இயக்குநர் பாலசந்தர், பாலுமகேந்திரா, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வசந்த் போன்றோர் அத்தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
அதற்குப் பின்பு அண்மை, யாரோ ஒருத்தியின் நடனம், காமக் கடும்புனல், மண்ணே மலர்ந்து மணக்கிறது, இன்னும் தொலையாத தனிமை என இதுவரை அவர் ஆறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இக்கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து பொதுவாக தமிழ்ச் சூழலின் கவிதையுலகம் பற்றியும் மகுடேசுவரன் கவிதைகளின் ஆதார மையம் பற்றியும் பேசுவது இங்கே பொருத்தமாக இருக்கும்.
கவிதைகளின் இயங்குதளம் மொழியாகவே இருக்கிறது. நடையும் மொழிநேர்த்தியும் கைகூடிவருமிடத்திலிருந்தே கவிதை பிறக்கிறது. தனக்குக் கைவந்த அத்திறனிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்வதற்கோ, தான் உணர்ந்த வலியை மற்றவருக்கு உணர்த்துவதற்கோ கவிதைகள் கதைகளை எழுதுகிறார்கள். மகுடேசுவரன் தன் படைப்புலகைக் கவிதைகளில் ஆரம்பிக்கிறார். நானும் கவிதையில்தான் ஆரம்பித்தேன். கவிதையிலிருந்துதான் கதைகள், நாவல்கள் என்று வெவ்வேறு படைப்புகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.
மகுடேசுவரன் தன்னுடைய ஆறு தொகுப்புகளில் என்ன மாதிரியாக இயங்கியிருக்கிறார் – அவருடைய கவிதைகளின் பொதுத்தன்மை என்ன – அவர் தன் கவிதைகளுக்காக எடுத்தாளும் பாடுபொருள்கள் எவையாக இருக்கின்றன - என்பன குறித்தெல்லாம் பார்க்கலாம்.
கவிதைக்கான முக்கியமான மூலதனம் மொழியும் சொந்த அனுபங்களும் தாம். அதிலும் மொழிக்கே பிரதான இடம். இப்பொழுதுங்கூட கடந்த நூற்றைம்பது வருடங்களாக உலகில் ஏராளமான மொழிகள் அழிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் அந்தமானில் ஒரு மொழி அழிந்துபோய்விட்டதாக அறிகிறோம். தமிழைச் செம்மொழி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உலகிலுள்ள அழிந்துவரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று சொல்கிறார்கள்.
எதுவாயினும் நமக்கான ஒரே தொடர்பு சாதனம் மொழிதான். மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டுமேயன்று – அது ஒரு கலாச்சார ரீதியிலான கூர்மையான ஆயுதம். கலாச்சாரத் தளத்தில் படைக்கும் பணியைச் செய்பவர்கள் கையில் அதன் வலிமை இன்னும் இன்னும் அதிகம்.
கவிதைத் தொகுப்புகள் தற்சமயம் மிகுதியாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த இரண்டாயிரம் இரண்டாயிரத்து ஐந்திற்குப் பிறகு தமிழ்க் கவிதைகள் உலகத் தரத்திற்கு ஈடாக எழுதப்பட்டு வருகின்றன. இதுவரை எழுதாத பாடுபொருள்களில் எல்லாம் கவிதைகள், கதைகள், நாவல்கள் பீறிட்டுக் கிளம்பியிருக்கின்றன. ஒரு காலத்தில் இந்திய இலக்கியங்கள் என்றால் முதலில் இந்தி இலக்கியங்களைச் சொல்வார்கள். அதோடு அதிகபட்சம் வங்காள இலக்கியங்களைச் சொல்வார்கள். ஆனால், இன்று இந்திய இலக்கியங்களை அடையாளப்படுத்தத் தமிழைப் புறந்தள்ளி யாரும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெரிய மாறுதல் !
ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பண்டிதர்கள்தாம் கவிதை எழுதினார்கள். பா வடிவிலான அவற்றில் எதுகை மோனை சீர் சந்தம் அடி தளை என யாப்பு முன்வைத்த வடிவத்தில் அவற்றை எழுதினார்கள். பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத புதுக்கவிதை தோன்றியது. அதன் தோற்றமே எல்லாரும் கவிதை எழுதலாம் என்ற நிலையை உருவாக்கியது. இப்பொழுது சாதாரண கையடக்கக் கேமரா இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு குறும்படத்தை எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதைப் போல, எண்பதுகளில் யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டது. அந்தக் காலகட்டங்களில் வீட்டுக்கொரு மரம் இருந்ததைப் போல வீட்டுக்கொரு கவிஞர் இருந்தார்.

எளிமை என்பதற்காக எழுதுவதெல்லாமே கவிதையாகிவிடுகிறதா என்றால் இல்லை. நாம் சாதாரணமாக உரையாடுகிறோம் – அது கவிதையாகிவிடுமா என்றால் ஆகாது. புதுக்கவிதை எளிமையின் வழியாக அடையப்படவேண்டிய இறுக்கமான கட்டுமானம். அங்கே மொழி சுண்டக் காய்ச்சப்பட்ட பால்.
இன்று கவிதைகள் நிறைய எழுதப்படுகின்றன. எழுதுகிற எவரேனும் மொழி குறித்த அக்கறை கொண்டிருக்கிறார்களா என்றால் வருத்தமே எஞ்சுகிறது. கவிதை வெளிப்பாட்டு முறைகளில் காட்டப்படும் மேதைமை கவிதைக்கு மிகவும் பிரயோஜனமானது.
இன்றைய வாழ்க்கை மிகவும் இறுக்கம் நிரம்பியதாகவே இருக்கிறது. அந்த வாழ்க்கையிலிருந்து எழும் கவிதைகள் மேலும் இறுக்கம் கொண்டதாக இருக்கவேண்டுமா, அல்லது சாதாரண எளிமையோடு இருந்தால் போதுமா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. எது எப்படியாயினும் மொழி மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் சலுகை எதுவும் இல்லை.
மக்களிடத்தே புழங்குகிற அதே மொழியை இலக்கியமாக்குவதில் முதன்மையாக வாய்மொழி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் என்று சொல்லப்படுகிறவை முன்னால் நிற்கின்றன. மக்கள் வாயிலிருந்து விழுகிற அதே சொற்களை அப்படியே பயன்படுத்தி ஏராளமானவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த மக்கள் மொழியினை அதே கவிச்சத்தோடு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இல்லாமலில்லை.
இன்னொரு தரப்பில் கனவுகள், நனவுநிலைகள், அதீத எண்ணங்கள் போன்றவற்றைச் சொல்வதற்கு மிகச் சிக்கலான மொழியையே பயன்படுத்துகிறார்கள். மொழியின் இலக்கண அழகுகளைக் கெடுக்காமல் யார் பயன்படுத்துவார்கள் என்றால் தமிழை அறிந்தவர்கள் பயன்படுத்துவார்கள். அவர்கள் பெரும்பாலும் பழைய ஆள்களாகவே இருப்பார்கள். கண்ணதாசன் வாய்மொழிச் சொற்களை - அது சினிமாப் பாடலாக இருந்தாலும் கூட - இலக்கிய வடிவமாக்கிப் பயன்படுத்துவார். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற மொழிப் பேராசிரியர்கள் மரபையும் அறிந்து புதுக்கவிதை எழுத வந்தவர்கள் ஆதலால் இருவகைப் போக்குகளையும் உணர்ந்து எழுதுவார்கள். ஞானக்கூத்தன் போன்றவர்கள் கவிதையைச் சந்த ஒழுங்குக்கு உட்படுத்தி எழுதினார்கள்.
மகுடேசுவரன் தன் கவிதையில் மொழியைச் செறிவாக ஒழுங்குபடுத்திப் பயன்படுத்துகிறார். மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்று தமிழைப் பாடமாகப் பயிலவில்லை. ஆனால், அவரிடத்தில் கவிதை குறித்து கனமான அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையே அவரை மொழியை வல்லமையோடு பயன்படுத்துபவராக மாற்றியிருக்கிறது. அதனால் சொற்களை மிகக் கவனத்தோடு பொருத்தமாகப் பயன்படுத்துகிறார். நகைசெய்பவர்கள் எப்படி ஒவ்வொரு வளைவையும் நெளிவையும் நிதானித்துச் செதுக்குவார்களோ அத்தகைய துல்லியத்தோடு இருக்கும் அது. இதை நகாசு வேலை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், மொழியை அதன் துல்லிய பதச்சேர்க்கைகளைக் கொண்டு அமைப்பதால் - மரபில் உள்ள புலமையைப் போதிய விகிதத்தில் கலப்பதால் - உருவாகும் கவிதை பலமுள்ளதாகவே இருக்கிறது.
என்னை எடுத்துக்கொண்டால் நான் கல்லூரியில் முதுகலைக் கணிதம் பயின்றவன். நான் மொழியை இந்தளவு நுணுக்கங்களோடு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேனா என்றால் இல்லை. நான் தமிழைப் பாடமாகவும் படிக்கவில்லை. மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்றவரோ தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தவரோ அல்ல. ஆனால், மகுடேசுவரன் கவிதையில் உள்ள மொழியிறுக்கம், வாக்கியக் கட்டுமானம், சொற்சேர்க்கைகளில் காணப்படும் துல்லியம், அவை உணர்த்தும் அர்த்தங்களின் உக்கிரம் இவற்றையெல்லாம் காணும்பொழுது - அவர் தன் மொழியறிவை இவ்வளவு தூரம் தன் சொந்த முயற்சியால் மட்டுமே கற்று அடைந்தார் என்றறியும்போது - அது இந்தக் காலகட்டங்களில் எளிதான ஒன்றாக எனக்குப் படவில்லை. அவருடைய கவிதைகளைப் படித்திருப்பவர்களுக்கு நான் கூறுவது நன்கு பிடிபடும்.
இதற்கு இன்னொருபுறத்தில் வேறு நிலைகளும் இருக்கின்றன. இப்பொழுது பெண்கள் கவிதை எழுத வந்திருக்கிறார்கள். தலித்துகள் எழுத வந்திருக்கிறார்கள். அரவாணிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் என்று சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்களிடம் இத்தகைய நுட்பங்களையும் மொழிப் புலமையையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் இந்தத் தலைமுறையில்தான் எழுதப் படிக்கவே அறிந்தார்கள். அவர்களுடைய எழுத்துகளில் இலக்கணம் இருக்காது. நாம் வகுத்துவைத்திருக்கும் இலக்கணங்களிலிருந்து முற்றிலும் பிழைபட்டதாகவே இருக்கும். ஏதாவதொரு வகையில் தங்கள் நிலையை, கருத்தை, படைப்பைப் பதிவு செய்ய முன்வந்திருக்கும் அவர்களிடம் நாம் அவரகளுடைய குரல்களைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவும் கூடாது. சில தேர்ச்சிகளைக் காலப்போக்கில் அவர்களும் அடைந்து விடுவார்கள் என்றும் இருந்துவிடலாம்.
மகுடேசுவரன் ஒரு விஷயத்தைப் பல்வேறு முனைகளிலிருந்து எழுதிப் பார்க்கிறார். சிலர் தங்கள் கவிதையை ஒரே மாதிரி வார்த்ததுபோல் எழுதிக்கொண்டிருப்பார்கள். அப்படியல்லாமல் எல்லா வகை மாதிரியும் எழுதத்தானே வேண்டும் ? ஒரு படைப்பாளி தீண்டாமல் விட்டுவைத்த வடிவம், சொல்முறை என்றிருப்பதை நாம் அவனது பலம் என்று கொள்ள முடியாது. மகுடேசுவரன் கவிதைகளில் எல்லா வகை மாதிரிகளையும் காண முடியும். ஒரு சிலவற்றை நாட்டுப் புறப் பாடல்களில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிராக தூய இலக்கண வடிவத்திலும் எழுதியிருக்கிறார். கொஞ்சம் இருண்மை கலந்து எழுதும் அதேநேரம், அதிக எளிமையுடனும் எழுதுகிறார். கதையாகும் பொருள்களைக் கவிதையாக்குகிறார். நகைச்சுவையும் அங்கதமும் எழுதுகிறார். காமக்கடும்புனலில் காமத்தைப் பாடுபொருளாக்கி நானூறு கவிதைகள் எழுதியிருக்கிறார்.
தற்போது பழைய அற இலக்கியமான திருக்குறள்களை நவீன கவிதை வடிவில் எழுதி வருகிறார். எழுத்தாளர்கள் பலரும் பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதுவார்கள். அவர்களுடைய எழுத்துக்கு வலிமை சேர்க்கும் பயிற்சியாக அம்முயற்சியை அமைத்துக்கொள்வார்கள். அந்த இலக்கியங்களை ஒருவர் ஆழ்ந்து அணுகுவதற்கு இதைவிடச் சிறந்த வேறுமுறைகளே இல்லை எனலாம். மு. வரதராசன், சுஜாதா போன்றவர்கள் திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அவற்றின் வழியாக அந்த எழுத்தாளர்கள் அந்நூல்களை எவ்வாறு அணுகினார்கள், அவர்களின் பார்வைகள் எப்படிப்பட்டனவாக இருந்தன என்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம்.
இறுதியாக, மகுடேசுவரன் கவிதைகளின் பிரதான அம்சங்கள் என - துல்லியமான செறிவான மொழி, கூறும் முறைகளில் பல்வேறு சாத்தியப்பாடுகளின் இயக்கம், தான் வாழும் உலகின் அத்தனை கீழ்மைகளையும் சமரசமின்றிப் படைப்பாக்கும் தன்மை - ஆகியவற்றைக் கூறுவேன்.
எழுத்தாளன் காலத்தின் கண்ணாடியாகச் செயல்படுகிறவன். அவன் படைப்புகள் அவன் நடமாடிய உலகத்தின் மறுக்கமுடியாத ஆவணங்களாக மாற்றம் கொள்ளும். இன்றைய இறுக்கமான வாழ்க்கையில் மனித உறவுகள் சிக்கலாகிக்கொண்டே செல்கின்றன. உலகமயமாக்கலின் கோரப் பிடிக்குள் நமது அன்றாடப் பொருளாதாரம் சிக்கித் தவிக்கிறது. மக்கள் சங்கமாக ஒன்றுகூடித் தங்கள் முழக்கங்களை முன்வைத்த சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாகி அலைகிறோம். தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டவர்களாக தொழிலாளர் வர்க்கம் ஆக்கப்பட்டிருக்கிறது. தனிமனிதன் என்றைக்கும் இல்லாத அளவு வன்முறைக்கு இலக்காகிறான். எங்கும் ஊழல்மயமாகி மாறாத மதிப்புடைய விழுமியங்கள் மதிப்பிழந்து வருகின்றன. இப்படிப்பட்ட மூச்சுத் திணறடிக்கும் சூழலில் படைப்பாளிகளாகிய நாம் பிடிவாதத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே ஆறுதல்தான்.