Friday, July 16, 2010

நவீன கவிதையில் திருக்குறள்




நண்பர்களே ! தற்சமயம் நான் திருக்குறளை நவீன கவிதையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு முதன்மையான காரணம் புதுக்கவிதையில் நீதி போதிக்கும் கவிதைகள் முற்றாகவே இல்லை என்பதாகும். எல்லாக் கீழ்மைகளும் எல்லா மட்டத்திலும் மிகுந்து பெருகிவிட்ட இந்தக் காலத்திற்கு உடனடித் தேவை பழுத்த நீதி நூல்களே. நீதிகளையும் அறத்தையும் போதிப்பதற்குப் போதிய தகுதியுடைய கவிவாணர்களும் இல்லைதான். மேலும் அது அளப்பரிய உழைப்பைக் கோரும் பெரு முயற்சியும் கூட. உரைநடை எழுத்தாளர்கள் இதிகாசங்களையும் புராண பாத்திரங்களையும் தம் வழியில் மறுபடைப்புச் செய்து உலவ விடுவதைப் போல செய்யுள் இலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்ய வேண்டும் என்ற தாகம் என் உள்ளத்தை அரித்தது. ஆகவே, முனைந்து இச்செயலில் இறங்கிவிட்டேன்.

ஒவ்வொரு அதிகாரத்தையும் அதன் பாடுபொருள் பிசகாமல் எடுத்துக்கொண்டு, அதிலுள்ள ஒவ்வொரு குறளையும் அதன் சாரம் கெடாமல் - ஒவ்வொரு குறளிலும் குருதியாக ஓடும் சாற்றைச் சிறிதளவேனும் வடித்து இறக்கி எழுதிவருகிறேன். குறள் வெண்பாக்களைப் போலவே இக்கவிதைகளையும் சொற்சிக்கனமாகக் குறுகத் தரித்திருக்கிறேன்.

வள்ளுவர் இயற்றிய குறள்களின் தெய்வீக நறுமணம் தணியாமல் இருப்பதற்காக அக்குறள்களின் தொனி/ஓர் அரிய சொல்/சொற்றொடர்/இணையான பொருள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். குறள்களில் சில இக்காலத்திற்கு ஒவ்வாத பொருள்கொண்டிருக்குமானால் அவற்றின் எதிர்த் திசையில் என் கவிதைகளை அமைப்பேன். தமிழ் அன்பர்கள் எனக்குத் தரும் ஊக்கத்தால் மட்டுமே இவ்வரிய ஆக்கத்தை என்னால் சோர்வுறாமல் முடிக்க முடியும்.

நான் இதை எவ்வாறு எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை முழுமையாக என்னால் விளக்கிவிட முடியாது. அதனால், எடுத்துக்காட்டாக ஓர் அதிகாரத்தில் நான் ஆக்கிய கவிதைகளை உங்கள் முன்வைக்கிறேன். எடுத்தவுடனே, அறம்பாடவேண்டாம் என்பதால் இன்பத்துப்பாலில் உள்ள முதல் அதிகாரமான ‘தகையணங்குறுத்தல்’ என்ற அதிகாரத்தின்படி நான் எழுதிய பத்து ‘நவீன குறள்களை’ அன்பர்கள் வாசிப்பதற்காகக் கீழே தந்திருக்கிறேன்.

தகையணங்குறுத்தல்’ என்றால் ‘அணங்கின் தகைமையை வியத்தல்’ என்று அர்த்தம். அதாவது பெண்ணழகை வர்ணித்துப் பேசுதல்.

தகையணங்குறுத்தல்

பெண்ணுருக்கொண்டு கண்விழுந்தாள் அவள்

வண்ணத்திற்கும் வனப்பிற்கும் முன்

வானத்தையும் வையத்தையும் வை

உன்பார்வையின் தாக்குதல்கள் பேரரசின் வல்லாயுதங்கள்

கையளவு வெடிமருந்துடன் எதிர்கொள்ளும் நான்

சிறுபுரட்சிக்குழுவின் எஞ்சிய வீரன்

என்னைக் கொல்லும் எமன் உன் கண்ணுக்குள்

என் நெஞ்சுக்கூட்டில் உயிராகத் துடிக்கிறது

அவன் இரை

கண்டதும் வீழ்த்தும் கண்கள் உனக்கு

இனி என்றென்றும் எழமுடியாத எனக்கு

இது வரலாற்று வீழ்ச்சி

வதம்செய்து கொல்வதில் ஏவுகணையின் கண்கள்

இதம்செய்து தணிப்பதில் பூமழையின் கண்கள்

பார்வையில் எத்தனை பயங்கரம்

புருவத்தை நெறிக்காமலிரு

கற்கண்டுகளாய் நொறுங்குகின்றன

என் இறுதி நம்பிக்கைகள்

உன் இடைமேல் துகிலின் அருமை முன்னம்

என் நிலையும் நேரும்

எத்துணை இழிவு !

சொல்வென்று மல்வென்று வில்வென்றென்ன

உன்பாதம் காண

முதுகு வளைந்து அடிபணிந்தேன்

ஞானத்தினால் தோன்றும் மோனத்தைத் தெரியும்

தெரியுமா

அவள் நாணத்தினால் தோன்றும் ஊனத்தை

பனையும் கமுகும் தலைக்கேறித் தணியும் கள்சொரியும்

பாடைவரை கூடவரும் போதைதரும்

பனிநீர்கோத்த இதழாள் உதிர்த்த கள்



6 comments:

  1. திரு.மகுடேசுவரன் அவர்களுக்கு : மேற்க்கண்ட கவிதைகளை வாசித்தேன். நான் ஒன்றும் தமிழ் பேராசிரியனோ அல்லது தமிழ் பண்டிதனோ கிடையாது. இருப்பினும் ஏறத்தாழ 12வருட என்னுடைய தீவிர வாசிப்பில் கவிதைகளுக்கு முதன்மையான இடம் அளித்திருக்கிறேன்.

    எனவே என்னுடைய சுய வாசிப்பு மற்றும் புரிதல் முறையிலேயே கவிதைகளை அணுகிறேன்.

    என்னைப்பொறுத்த வரையில் மேற்க்கண்ட கவிதைகள் ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

    சமீப காலங்களில் இவ்வளவு எளிமையான அதே சமயம் கருத்திலும்,அர்த்தத்திலும் வலிமையான கவிதைகளை சொற்பாமகவே வாசிக்க நேர்ந்துள்ளது.

    நவீன கவிதைக்கு இசையமைக்க முடியாது அது இசை வரையறைக்குள் அடங்காது என்ற பெரும்பானமையோரின் கூற்றை பொய்யாக்கும் விதமாக திரு.ரவிக்குமார் என்பவருடைய கவிதைக்கு இளையாராஜா இசையமைத்த விதத்தையும்,ராகத்தையும் ரவிக்குமாரே பாடிக்காட்டினார். அவருக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல பரிச்சயம்.அவர் இளையராஜா தேர்ந்தெடுத்த ராகமும்,தன்னுடைய கவிதையும் (ஜாடிக்கேத்த மூடிப்போல) அவ்வள்வு பாங்காக பொருத்தியிருக்கிறது என்று கூறினார். அதே போல உங்களுடைய வடிவம் மற்றும் சொற்ச்சிக்கனம் எனக்கு மிகப்பிடிக்கிறது.

    திருக்குறளில் இந்த அதிகாரத்தை நான் வாசித்ததில்லை.ஆனால் இப்பொழுது இந்த 10கவிதைகளையும் அந்த அதிகாரத்தையும் கண்டிப்பாக ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

    இருப்பினும் உங்களுடைய இந்தப் பதிய முயற்சி என்னை மிகவும் பிடித்திருக்கிறது. இதை நீங்கள் கட்டாயம் தொடர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    யாரோ ஒருத்தியின் நடனம்,காமக் கடும்புனல்(400 கவிதைகளா?) எழுதியவர் ”பெண்ணழகை வர்ணித்துப் பேசுதல்” அதிகாரத்தை முதலில் முயற்சித்தது தற்ச்செயல் அல்ல என்றே எண்ணுகிறேன்.

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. 'திருக்குறளை நவீன கவிதையில் எழுதுகிறேன்' என்று ஏன் சொல்ல வேண்டும்? கவிதைகள் எழுதுகிறேன்; இவற்றிற்கு திருக்குறள் தூண்டுகோள் என்றல்லவா சொல்லிக்காட்ட வேண்டும்? இவை அணைத்தும் முற்றமுழுக்க உங்கள் கவிதைகள். அத்துணை புனிறு (fresh)! முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி ..!வாழ்த்துக்கள், மிக் சிறப்பாக வந்துள்ளது..!ஆர்வத்துடன்

    ReplyDelete
  4. நண்பர் ராஜசுந்தர்ராஜன் கருத்துகளை நான் வழிமொழிகிறேன். "திருக்குறளை நவீன கவிதையில் எழுதுதல்' என்ற வார்த்தைகளை விட, திருக்குறளை உள்வாங்கிக் கொண்டு எழுதுகிறேன் என்பது சரியான வாக்கியமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.
    ///உரைநடை எழுத்தாளர்கள் இதிகாசங்களையும் புராண பாத்திரங்களையும் தம் வழியில் மறுபடைப்புச் செய்து உலவ விடுவதைப் போல செய்யுள் இலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்ய வேண்டும் என்ற தாகம் ////
    உங்களின் இந்த வாக்கியத்தில் இருக்கும் இலக்கியங்களை மறு ஆக்கம் செய்தல் என்ற அர்த்தப்படுத்திக் கொள்ளுதல் மிகச்சரியான ஒன்றா என்பது எனக்குத் தெரியவில்லை. குறளின் அதே கருத்தை வேறுவார்த்தைகளில் வடிவமைத்தால் அது கவிதை வடிவிலான உரை என்ற இனத்துக்குள் சேர்ந்து விடும். சுஜாதாவின் புறநானூறு இந்த வகையில் சேர்ந்ததே. அவர் பாடல் வரிகளை எளிமைப்படுத்தும் காரியத்தைச் செய்தார்.
    ஆயின் உங்கள் கவிதைகள், குறளொத்த, நீங்கள் உள்வாங்கிக் கொண்ட கருத்தை, இன்றைய சூழலில் கவிதைப்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதன் வடிவம் என்று நான் நினைக்கிறேன். அல்லது நான் அவ்வாறு புரிந்து கொள்கிறேன். மற்றபடி குறளின் சாயலில் உங்களின் இம்முயற்சி மிகச்சிறந்த பாராட்டுதல்களுக்கு உரியது என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. விரைவில் முழுத்தொகுப்பையும் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  5. அருமையான முயற்சி. தகுந்த திருக்குறளை தங்கள் கவிதைக்கு இணையாக பக்கத்தில் வைத்தால்... சுவை இன்னும் கூடுதலாகும்...-அன்புடன் செளந்தர்.

    ReplyDelete
  6. ஒரு மாறுபட்ட முயற்சியாக இதனை நான் பார்க்கிறேன் ...முயற்சிக்கு வாழ்த்துகள்...விரைவில் முழுத்தொகுப்பையும் எதிர்பார்க்கிறேன் ....நட்புடன் இன்போ.அம்பிகா

    ReplyDelete