Sunday, September 19, 2010

காந்தி அண்ணல் - பகுதி 1

கத்தியவார் தீபகற்பப் பகுதி தன்னில்

கணக்கான சமஸ்தானம் சிலவாம் உண்டு;

மெத்தசிறு போர்பந்தர் அவற்றுள் ஒன்று;

மேதினியில் புகழ்தாங்கப் போகும் ஓரூர் !

அத்தகைய சமஸ்தான அமைச்ச ராக

அற்றைநாள் உத்தம்சந்த் என்பார் வாழ்ந்தார்;

உத்தம்சந்த் புதல்வர்தான் கரம்சந்த் காந்தி

உத்தமமும் உயர்பண்பும் உருவாய் நின்றார் !இந்துமதம் நால்வருணப் பிரிவு சொல்லும்

இதில்மூன்றாம் வருணத்தார் வைஸ்யர் ஆவார்;

இந்தபெரும் வருணத்தார் வணிகம் செய்வார்;

இவ்வருணம் காந்திகுலம்; பனியா சாதி;

தந்தபொருள் காந்தியெனும் சொல்லில் கண்டால்

தகைமளிகை வியாபாரிஎன்னும்; அங்கே

சிந்துநதி பெருக்காகிக் கடலில் கூடும்

சிந்துமொரு சிறுதுளியும் புனிதத் தண்ணீர் !


மனைவியருள் முதல்மூவர் மரணம் எய்த

மறுதார மாய்ப்புத்லி பாயைக் கரம்சந்த்

துணையாக்கிக் கொள்ளுங்கால் நாற்ப தகவை;

துணைவிக்குப் பிறந்தார்கள் மக்கள் நால்வர்;

சுனையூறும் புதுநீர்போல் தூய பண்பு

சுகந்துறந்து அகங்காக்கும் இனிய தாயார் !

மனைமாட்சி விரதங்கள் உண்ணா நோன்பு

மகிழ்வோடு மேற்கொள்ளும் குணத்தின் குன்றம் !


அண்ணன்மார் முதலிருவர் தமக்கைக் கடுத்து

ஆயிரத்தெண் ணூற்றறுபத் தொன்ப தாண்டில்

பண்திங்கள் அக்டோபர் இரண்டாம் நாளில்

பகல்வானில் செழுங்கதிரின் பாய்ச்சல் போலே

இன்னமுதப் பூமகவு மண்தோன் றிற்று !

இந்தியத்தாய்ப் பொன்முகத்தில் நகை தோன்றிற்று !

கண்மணிக்கு மோகன்தாஸ் பெயர் தோன்றிற்று !

ககனவெளி திகழ்இருளில் ஒளிதோன் றிற்று !அவ்வாண்டு நெப்பொலியன் நூறாம் ஆண்டு !

அன்னைநிலம் அடிமையுற்றுக் கிடந்த ஆண்டு !

வெவ்வேறு கருவிகண்ட தாமஸ் எடிசன்

விருப்போடு காப்புரிமை கண்ட ஆண்டு !

செவ்வாய்க்கால் சூயஸினைத் திறந்த ஆண்டு !

சிந்தைக்குள் கொப்பளித்த ஞானம் நல்க

ஒவ்வாத வைதீர்க்க காரல் மார்க்சு

உயர்பெருநூல் மூலதனம் பதித்த ஆண்டு !


பேர்காணப் பிறந்தமோகன் தாஸாம் காந்தி

பிறவியிலே தாயன்பு மிகுந்த பிள்ளை !

போர்பந்தர்ப் பள்ளியிலே படிப்போ ராண்டு;

புதுவூராம் ராஜ்கோட்டில் படித்தார் பின்பு !

யாரோடும் சேராத கூச்சம் அச்சம்

இளமைக்கே உரியசிறு குறும்புச் செய்கை

சீரோடும் சிறப்போடும் வளர்ந்தார் காந்தி

சிறப்பான கல்வியொடு உலகம் கற்றார் !


வகுப்பறைக்கு ஆய்வுக்கு ஒருவர் வந்தார்

கெட்டிலெனும் சொல்லொன்றை எழுதச் சொன்னார்

தகுந்தவாறு எழுதிடாமல் பிழையொன் றோடு

தவறாக எழுதிவிட்டார் காந்தி; தம்மை

வகுப்பாசான் சைகையால் அருகில் உள்ளோன்

வகையாக எழுதியதைப் பார்க்கச் சொல்ல

மிகத்தாழ்ந்து மறுத்துவிட்டார்; அவருள் அன்றே

மிகையாக முளைத்தனவோ அறமும் பண்பும் !இந்தியரை ஆங்கிலேயர் ஆள்வ தற்கு

இதம்செய்யும் மாமிசத்தின் பலமே என்று

உந்தியவோர் எண்ணத்தால் ஒருநாள் தேர்ந்து

ஊரொதுங்கிப் புறம்சேர்ந்து இறைச்சி உண்டார் !

அந்தவொரு நாளிரவில் உறக்கத் தூடே

ஆட்டுக்குட் டிவயிற்றுள் ளிருந்து கத்தத்

தம்தவற்றை உணர்ந்தவராய் வருந்தி நொந்து

தவறியுமே ஊன்உண்ணல் விலக்கலானார்


மாசுற்ற ஊன்பழக்கம் சின்ன பொய்கள்

மனந்துணிந்து களவொன்றைச் செய்த தாலே

கூச்சமுற்ற மனசாட்சி முள்ளாய்க் குத்தக்

குற்றத்தின் மன்னிப்பை நல்க வேண்டிப்

பேச்சற்ற நோய்ப்படுக்கை கொண்ட தந்தை

பின்பாய்ப்போய் அழுதுமுகம் புதைத்தார் காந்தி !

ஏச்சற்ற அன்பான பார்வை பெய்து

இளமகனின் தலைதீண்டி அழுதார் தந்தை !


வரலாற்றின் தடமெங்கும் மகான்கள் யாரும்

வழக்கத்தின் தவறுகளால் உளக்கண் பூத்து

உரமேற்றி உயிர்ப்பண்பின் இயல்பைக் கண்டு

உலகத்தார் படும்பாட்டால் இதயம் வெந்து

கரம்பற்றி உய்விக்கும் தவத்தை ஏற்றுக்

கடுந்துயரில் தம்முயிரை நெய்யாய் ஊற்றிப்

பரவுலகின் சொர்க்கத்தை இகத்தில் செய்யப்

பாடுபடும் பெருவழியில் நடப்பார் தாமே !


--------தொடரும்--------

6 comments:

 1. இந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் உள்ளிருக்கும் தகவல்கள் சொல்கிறது உங்கள் (பலநூல் படித்த)உழைப்பையும் புலமையையும். வணக்கங்கள்.

  ReplyDelete
 2. பிழைதிருத்தம் : இவை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்.

  ReplyDelete
 3. சற்றே தமிழ் இலக்கணம் மெல்ல எட்டிப்பார்க்கிறது உங்கள் இருவர் உரைகளில்.
  வளரட்டும் தமிழ்ப்பேச்சு
  மலரட்டும் நம் அன்னையின் புன்னகை ........பாரதி

  ReplyDelete
 4. உங்களின் புலமை கண்டு சிலிர்க்குது sir. மிக அருமை.

  ReplyDelete