Monday, September 27, 2010

காந்தி அண்ணல் - பகுதி 4

தொலைதூர நாட்டிலிரு பத்தி ரண்டு

சுளையான வருடங்கள் கழித்து மீண்டார்;

கலையழகு மக்களவர் நால்வர் பெற்றார்;

கடந்தபத்து வருடங்கள் பிரம்மச் சர்ய

நிலைகாத்து வருகின்றார்; இறக்கும் மட்டும்

நேர்பிறழ வில்லையெனில் உறுதி காண்க !

தலைநோற்ற தவவாழ்வு எளிய குச்சு

தவசிக்கு உடைமையென்று வேறு ஏது ?


இமயமலை அடிவாரம் பீகார்ப் பகுதி

இருந்தவொரு மாவட்டம் சம்பா ரண்ணில்

சமமில்லாக் குத்தகைக்கு நிலத்தைப் பெற்றுச்

சாயந்தரு அவுரியினைச் செய்தார் மக்கள்;

சுமையாகப் போனதந்த நிலத்தின் வாரம்;

சொல்லொண்ணாத் துயருற்றார் விவசா யத்தார்;

தமைமீட்க வேண்டுமென்ற வேண்டு கோளால்

தாமாக அங்கேகி நின்றார் அண்ணல் !


திரண்டபெருங் கூட்டத்தால் அரசு வண்டி

திணறிற்று; காந்தியாரைத் திரும்பச் சொல்லும்;

மிரளாமல் மறுத்திட்டார்; கைதும் ஆனார்;

விசாரணைக்குப் பெருங்கூட்டம் அங்கே கூட

அரசுக்கு வழியேதும் தோன்ற வில்லை !

அவருக்கு விடுதலையைத் தந்து நிற்க

பரபரத்து வந்தபணி செய்தார் காந்தி;

பலருக்கும் தந்திவழி நிலைமை சொன்னார் !


குத்தகைக்கு ஈடாகப் பணத்தைப் பெற்றுக்

கும்மாளம் இட்டுவந்த ஆங்கி லேயர்

மொத்தமாகத் தலைகவிழ்ந்து செல்லும் வண்ணம்

முத்தான ஆணையத்தை அரசு செய்யச்

சத்தான சாட்சியங்கள் எதிராய்க் கூறச்

சந்தடியில் லாமலவர் ஊர்போய்ச் சேர்ந்தார்;

அத்தரையில் இருந்தநிலம் அத்த னைக்கும்

அம்மக்கள் உரிமைபெற்று உயிரைப் பெற்றார் !


சம்பாரண் வென்றிட்ட சாந்த மூர்த்தி

சகமெங்கும் புகழொளியால் மூழ்க லானார்;

எம்பாரம் தீர்க்கவந்த எம்மான் காந்தி

எனக்கண்டார் மக்களெல்லாம் வாழ்த்தலானார்;

அம்பாறாத் தூணியில்லை; ஆட்சி இல்லை;

அழகொழுகும் தோற்றமில்லை; வசியம் இல்லை;

தெம்பான செல்வமில்லை; இருந்தும் காந்தி

செய்முறையால் தேசத்தின் இதயம் வென்றார் !கடையடைப்பால் போர்புரியும் உத்தி தன்னைக்

கண்டிருந்தார்; நாடெங்கும் மக்கள் ஒன்றாய்க்

கடையடைப்பு நடத்தென்று அண்ணல் கூறக்

கடையடைப்பால் ஊர்த்தெருக்கள் வெறிச்சோ டிற்று;

படைநடத்திச் செல்லாமல் பண்புள் ளோர்கள்

பகல்வாழ்க்கை துறக்கின்ற யுத்தம் அஃது !

நடைபோடாக் காரணத்தால் நாடே தேங்கும்

நடந்துவரும் உற்பத்தி முடங்கும் மூழ்கும் !

பஞ்சாப்பில் ‘ஜாலியன்வா லாபாக் கென்னும்

பாழடைந்த சுவர்சூழ்ந்த மைதா னத்தில்

நெஞ்சுரத்தார் ஒன்றாகக் கூடி நின்று

நிலைமைக்கு விளக்கங்கள் ஆற்றிச் சொல்ல

வஞ்சகத்துப் படையோடு டையர் என்பான்

வக்கிரத்தால் வெளியேறும் வழியில் நின்று

செஞ்சினத்தால் கூட்டத்தைச் சுட்டுக் கொன்றான் !

செத்தவர்கள் எண்ணற்றோர்; பிழைத்தோர் சொற்பம் !ஆறாக ஓடிற்று மனித ரத்தம்

ஆண்பெண்டிர் பசுங்குழந்தை முதியோர் ரத்தம் !

தீராத வெறிகொண்டார் தேச பக்தர்

திண்மையுடன் போராட சித்தம் கொண்டார் !

வேரோடி விட்டதடா சுதேசி வேட்கை

வேங்கைக்கு வெறியூட்டி விட்டாய் தீர்ந்தாய் !

நீறாகப் பூத்திருந்த நெருப்புக் குள்ளே

நெய்யூற்றி விட்டதுன்றன் கொடுமைக் கோன்மை !


ஒத்துழைப்பு நல்காத இயக்கம் ஒன்றை

ஒருவாறு வடித்திட்டார் காந்தி அண்ணல் !

எத்துறையும் அரசுக்குள் இயங்கா வண்ணம்

எல்லாரும் வெளியேறி விடுவார்; சர்க்கார்

சத்தற்று இயங்குநிலை சிறிதும் அற்றுச்

சாவதன்றிப் பிறிதெந்த வழியும் இல்லை;

புத்துயிர்ப்பு தருகின்ற இயக்கம் தோன்ற

புதுக்கனலால் தேசமெங்கும் ஒன்றாய் நிற்கும் !


புறக்கணித்தார் பள்ளிகளை மாணாக் கர்கள் !

புறக்கணித்தார் ஆலைகளைத் தொழிலா ளர்கள் !

புறக்கணித்தார் நீதிமன்றம் வக்கீல் எல்லாம் !

புறக்கணித்தார் அரசுவிற்கும் பொருளை எல்லாம் !

மறக்கடித்துச் சனத்திரளைச் சுரண்டி வந்த

மகத்தான அரசாங்கம் தள்ளா டிற்று !

அறப்போரின் பெருவலிமை தேசம் கண்டு

அகங்குளிர்ந்து முகம்மலர்ந்து நின்ற காலம் !


--------தொடரும்-------

3 comments:

 1. //கடையடைப்பு நடத்தென்று அண்ணல் கூறக்

  கடையடைப்பால் ஊர்த்தெருக்கள் வெறிச்சோ டிற்று;

  படைநடத்திச் செல்லாமல் பண்புள் ளோர்கள்

  பகல்வாழ்க்கை துறக்கின்ற யுத்தம் அஃது !
  //

  அருமை. புகைப்படங்கள் மிகவும் முக்கிய ஆவணம் கவிதையோடு பொருந்தி கண்முன் நிற்கிறது . வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //நீறாகப் பூத்திருந்த நெருப்புக் குள்ளே
  நெய்யூற்றி விட்டதுன்றன் கொடுமைக் கோன்மை !//

  அருமை கவிஞரே உங்கள் சொல்லாட்சி.

  ReplyDelete