Thursday, September 23, 2010

காந்தி அண்ணல் - பகுதி 3

வருங்கால பாரதத்தின் தலைமைத் தந்தை

வருத்தமுடன் அன்றிருந்தார் இரண்டு ஆண்டு !

அரும்பான இருமகவு பிறந்து விட்டார்

அவர்காக்கும் கடமைதமக் கிருக்கக் கண்டார் !

ஒருவழக்கு வரப்பெற்று மன்றம் சென்றார்

ஒருசொல்லும் பேசாமல் மலைத்து நின்றார் !

பெருந்தேசம் காக்கவந்த பெருமான் அன்று

பேதைபோல் மருட்சியொடு மருக லானார் !


தெற்கிலுள்ள ஆப்பிரிக்கப் பகுதி தன்னில்

அப்துல்லா எனும்செல்வர் வணிகம் செய்தார் ;

சிற்சிலவாம் அவர்வழக்கை ஏற்றுச் செய்யச்

சிறந்தவழக் கறிஞரெனக் காந்தி சென்றார் ;

கற்கால வழக்கங்கள் எல்லாம் அங்கே

கடுகேனும் பிசகாமல் வழங்கக் கண்டார் !

தற்காலம் செல்கின்ற திசையில் லாமல்

தறிகெட்ட வேற்றுமைகள் நிலவக் கண்டார் !தொடர்வண்டி முதல்வகுப்புச் சீட்டு பெற்றுத்

தொலைதூரப் பயணமொன்று செய்தார் காந்தி ;

இடரொன்று மாரிட்ஸ்பர்க் நகரில் தோன்றும் !

‘‘இவ்வகுப்பு வெள்ளையரின் வகுப்பு; நீயோ

தொடவொண்ணாக் கருநிறத்தோன் வெளியே’’ றென்று

தொடுத்திட்ட கொடுஞ்சொல்லை மறுத்தார் காந்தி !

மடமைசெய் அலுவலனின் கருத்தை மாற்ற

முதல்வகுப்பில் தாமெடுத்த சீட்டைத் தந்தார் !‘அதுபற்றிப் பொருட்டில்லைஎன்று கூற

அவ்வாறு வெளியேற மறுத்தார் காந்தி !

பதைபதைக்கக் காந்தியவர் பிடரி பற்றிப்

பண்பாடு ஏதுமற்ற வெள்ளைக் காரன்

உதைக்காத குறையாக வெளியே தள்ளி

உடைமைகளை எடுத்தெறிந்து விட்டான் ! ஐயோ !

புதுப்பனியில் குளிர்இரவில் அந்நாள் முற்றும்

புயல்மனதில் சுழன்றடிக்க நின்றார் அங்கே !நிறவெறியில் அந்நாடு நிதமும் வேகும்;

நிறங்கறுத்தோர் விலங்கினைப்போல் வாழச் செய்தார்;

நிறம்பழுத்த இந்தியரும் அங்கே சென்று

நெல்விளைத்தார்; சிறுவணிகம் பலவும் செய்தார்;

அறங்காக்கும் அரசென்று உலகத் தோற்றம்;

அதன்குடிகள் புழுப்போலும் வாழ்வார் நித்தம்;

புறமக்கள் எல்லாரும் மிடிமை ஏற்றுப்

போக்குவழி அறியாமல் பொய்யாய் வாழ்ந்தார் !ஒப்பந்தம் முடிந்தவுடன் ஒவ்வோர் ஆண்டும்

உறுதியொடு வரியொன்றைச் செலுத்த வேண்டும்;

ஒப்பரிய கிறித்தவத்து விவாகம் அன்றி

ஒருமணமும் செல்லாது; மேலும் மக்கள்

தப்பாதுத் தம்விரலின் இரேகை தீற்றிச்

சான்றுக்கு ஒருசீட்டு பெறுதல் வேண்டும்;

எப்போதும் அதைக்கையில் கொள்ளல் வேண்டும்;

எங்கும்போய்க் காவலர்கள் சோதிப் பார்கள் !


பிறமதத்துத் திருமணங்கள் செல்லா தென்றால்

பிறமதத்தோர் மனைவியெல்லாம் வைப்பாட் டியரா ?

பிறமதத்துப் பிள்ளையெல்லாம் முறைகே டான

பிசகான உறவுகளில் பிறந்தோர் தாமா ?

பிரஜையெல்லாம் சமமென்ற அரசில் இன்று

பிளவொன்று புரிவீரா ? நியாயம் தானா ?’’

குரலெடுத்துக் கேள்விகளைக் கேட்டார் காந்தி !

குமுறிட்டார்; போராட்டம் செய்வோம் என்றார் !யாருக்கும் துணிவின்றி இடையூ றின்றி

யாருக்கும் தீங்கொன்றும் புரியா வண்ணம்

யாருக்கும் அடிபணியா எதிர்ப்பின் மூலம்

யாருக்கும் நிந்தையிலாக் கிரியை செய்து

போருக்குச் செல்லுகிற முறைமை கண்டார் !

போர்புரிவோர் மனதாரத் துன்பம் ஏற்பார் !

பேரிட்டார் சத்தியாஅக் கிரகம் என்று !

பெறும்பயனும் வழிமுறையும் அன்பின் சின்னம் !


மக்களெல்லாம் அறப்போரில் கலந்து கொண்டார்;

மண்மைந்தர் நிலம்அகழும் சுரங்கத் தோழர்

பக்கமெல்லாம் காந்திக்குப் புகழ்தோன் றிற்று !

பட்டுவந்த துயரழிக்க உடன்சேர்ந் திட்டார்;

வெட்கமுற வெறியரசு தடுமா றிற்று !

வீழ்ந்துநலிந் திட்டததன் பொருளா தாரம் !

தக்கபடி சட்டங்கள் திரும்பப் பெற்றுத்

தன்மக்கள் கேட்டபடி வழிமா றிற்று !


நடந்தவைகள் நானிலத்தில் எங்கும் செல்ல

நம்நாட்டில் காந்திபுகழ் ஓங்கி நிற்கக்

கடந்தவைகள் லண்டனுக்கும் தெரியப் போகக்

கண்கொத்திப் பாம்பானார் ஆள்வோர்; காந்தி

உடன்கிளம்பி தாய்நாடு திரும்பி வந்தார்;

ஊரெல்லாம் கூடிபெரும் வருகை நல்கும் !

முடமாகி முனகுகிறாள் அன்னை பூமி !

முடம்நீக்கி உயிரூட்டும் கடமை கண்டார் !

---------தொடரும்---------

No comments:

Post a Comment