Monday, September 20, 2010

காந்தி அண்ணல் - பகுதி 2

பதின்மூன்றாம் பிராயத்தில் தம்பிள் ளைக்குப்

பால்யமணம் செய்விக்கும் வழக்கம் ஒன்றால்

பதிவாழும் கோகுல்தாஸ் மகான்ஜி பெண்ணாள்

பண்புநிறை கஸ்தூரி பாயைத் தேர்ந்து

இதமான மணம்செய்து வைத்தார் பெற்றோர் !

ஏற்கனவே ஏழ்வயதில் நிச்ய தார்த்தம்

விதிகூட்டி வைக்குமிரு ஆணும் பெண்ணும்

விவாகத்தின் வழியொழுகல் இந்து தர்மம் !இருவருக்கும் சமவயது பத்தும் மூன்றும்

இருவருக்கும் விளையாடும் வெகுளிக் காலம்

இருவருக்கும் வாழ்வர்த்தம் தொலைவு தூரம்

இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் தோழர்

இருவருக்கும் கண்மறைக்கும் இளமை ஆர்வம்

இருவருக்கும் இடையிடையே ஊடல் கூடல்

இருவருக்கும் தாம்பத்யம் நடந்த ஆண்டு

இமைவிரியும் அறுபத்து இரண்டு ஆண்டு !


காலத்தில் தந்தையவர் கலந்த போது

காந்திக்குப் பதினைந்து வயது; பள்ளிக்

காலத்தைக் கடந்துவிட்டார்; மேலும் கற்க

கல்லூரி சென்றதையும் கற்று விட்டார்;

சீலத்தில் சிறந்தபடி குடும்பம் செல்ல

சிற்றப்பா உதவிவர தனயன் காக்க

ஞாலத்தை வெல்லுமொரு மேற்ப படிப்பை

நாம்கற்றல் வேண்டுமென்று காந்தி கண்டார்.மருத்துவத்தைப் பயில்வதற்கு விருப்பு உண்டு;

மனதாரப் பிணம்தீண்டும் படிப்பை அண்ணன்

மறுத்துவிட தந்தைசெய்த பிழைப்பை எய்த

மகத்தான சட்டங்கள் பயிலும் நல்ல

கருத்தெழவே லண்டனுக்குக் கல்வி கற்க

கண்மணியை அனுப்புவது எனவா யிற்று;

உறுத்தலுக்கு ஆளானார் புத்லித் தாயார்;

உவப்பில்லா பழக்கங்கள் பற்றும் என்றார்.


குடும்பத்தின் நலம்நாடும் சமணர் முன்னம்

கும்பிட்டு மூன்றுபெரும் வாக்கு தந்தார்;

‘கொடும்மதுவும் புகையிறைச்சி எதுவும் கொள்ளேன்;

கூடாதார் சகவாசம் கொள்ளேன்என்றார்;

மடுவுக்கும் மலைதனுக்கும் உள்ள தூரம்

மகனேற்ற சத்தியமும் நாட்டின் பண்பும் !

தடுக்கிவிழும் மனதுக்கு வாய்மை இல்லை !

தனையடக்கும் மனதுக்குச் சொல்லே எல்லை !கரம்சந்து பெரும்பதவி வகித்தார்; ஆனால்

கடைசியிலே உபகாரச் செலவு பெற்று

சிரமத்து வாழ்வைத்தார் வாழ்ந்தார்; அன்னார்

சேர்த்துவைக்கத் தெரியாத உண்மைச் செல்வர் !

சுரந்தவறும் பண்போலே குடும்பத் திற்குள்

சூழ்ந்திட்ட சிறுவறுமை நிலவக் கண்டோம் !

இரந்துயிரைக் காப்பாற்றும் நிலைமை இல்லை

என்றாலும் படிப்புக்குப் பணத்தைக் காணோம் !


பம்பாய்க்கு லட்சுமிதாஸ் அழைத்துச் சென்றார்;

பணம்நல்க முன்வந்தார் தம்பி கற்றார்;

‘நம்சாதி வழக்கில்லை கடலைத் தாண்டல்;

நாமதனை ஏற்கமுடி யாதேஎன்று

பம்பாய்வாழ் பனியாக்கள் தீர்மா னித்தார்;

சாதியிலே ஒதுக்கிவைத்துப் பாவித் திட்டார்;

கம்பாலும் கதையாலும் அடித்தால் கூட

காந்தியவர் தம்முடிவில் பிறழார் அன்றோ !சட்டகலா சாலைபெயர் இன்னர் டெம்பிள்;

தனக்குநிகர் இல்லாத உயர்கல் லூரி !

இட்டமுடன் இரண்டாண்டு எட்டு மாதம்

ஏற்றிட்ட சட்டங்கள் பயின்று வந்தார்;

எட்டுக்கும் மேல்மைல்கள் நடந்தார் நாளும்

எளிமையும் சிக்கனமும் கண்ணாய்க் கொண்டார்;

திட்டமுடன் செலவிட்டார்; அண்ணன் வேர்வை

தினம்தம்மைக் காப்பாற்றி வருதல் கண்டார் !


எட்டோடு பத்தாண்டு நிறைந்த காந்தி

ஏழ்கண்டத் தலைநகராம் லண்டன் சென்று

முட்டாமல் முறியாமல் நாக ரீக

முனையாடும் நகர்கண்டு அழிந்தி டாமல்

குட்டாமல் குனியாமல் மனதில் கொண்ட

கொள்கைநெறி பிறழாமல் வழிமா றாமல்

பட்டத்தைப் பெற்றிட்டார்; மறுநாள் பேரைப்

பதித்திட்டார்; தாய்நாடு திரும்பி விட்டார் !


தாய்நாடு வந்தவுடன் பெற்ற செய்தி

தமையீன்ற தாய்மரணச் செய்தி யாகும் !

வாய்மூடி மௌனத்தால் அழுதார் காந்தி

வளர்த்திட்ட பெற்றோரை முற்றாய்த் தோற்றார்;

ஓய்வின்றி ஒழிவின்றி உலகு சுற்றி

ஓரிடத்தில் நின்றாலோ ஒன்றும் காணோம் !

ஆய்பொருளில் கருத்துயர்ந்த கீதை சொல்லும்

ஆற்றுபணி ! பலனேதும் கருத வேண்டா !

------------தொடரும்-------

1 comment:

 1. திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

  நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
  அடியெடுத்து வைத்து விட்டோம்.

  அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

  தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

  வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
  உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
  நன்றி..

  அன்புடன்...
  எஸ்.பாரத்,
  மேட்டுப்பாளையம்...

  ReplyDelete